செயற்கை கோள்களுக்கு ஆபத்து!



யெஸ். பெரும் அச்சுறுத்தலாக கருதப்படும் 2024 YR4 எனும் விண்கல் 2032ம் ஆண்டு நிலவை மோதும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர். 
இதனால் ஏற்படும் விண்கல் சிதறல்கள், பூமியின் செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்குமாம்.இப்படிச் சொல்பவர் கனடாவில் உள்ள Western Ontario பல்கலைக்கழகத்தின் வானியலாளர் பால் வீகர்ட்.

“நிலவிலிருந்து பார்க்கும்போது பூமி ஒரு சிறிய இலக்காகவே இருக்கும். எனவே அதிகமான விண் துகள்கள் பூமியை நேரடியாக தாக்காது. ஆனால், பூமியின் ஈர்ப்பு விசை சில குறிப்பிட்ட நிலைகளில் அந்த விண் துகள்களை ஈர்க்கும் திறன் கொண்டது..” என்கிறார் பால் வீகர்ட்.

அதாவது விண்கல் நிலவில் மோதினால் அதிலிருந்து வரும் துகள்கள், புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்படும். அந்தச் சிதறல்கள் பூமிக்குள் நுழைய முயலும்போது, வழியில் உள்ள செயற்கைக்கோள்களை முற்றிலுமாக நாசப்படுத்திவிடும் என்கிறார்.கடந்த டிசம்பரில் சிலியில் உள்ள ஒரு தொலைநோக்கியால் இந்த விண்கல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஆரம்பத்தில் இது பேரழிவு வேகத்தில் பூமியை நோக்கி வருவதாகக் கருதப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த ஆய்வுகள் அந்தக் கூற்றை தவறென நிரூபித்தன. சமீபத்திய ஆய்வுகள் இந்த விண்கல் நிலவில் மோத வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன. இந்த மோதல் நிலவில் ஒரு கிலோமீட்டர் அகலமான பள்ளத்தை உருவாக்கும் என்று வீகர்ட் கணித்திருக்கிறார்.

கடந்த 5,000 ஆண்டுகளில் நிலவில் இவ்வளவு பெரிய பள்ளம் ஏதும் ஏற்படவில்லை. அந்த வகையில் 2032ல் 2024 YR4 எனும் விண்கல் ஏற்படுத்தும் பள்ளம் மிகப்பெரியதாக இருக்கும். ஆனாலும் நிலவில் இயற்கையாக உருவான பள்ளங்களை விட இத சிறியதாகத்தான் இருக்கும். இப்படி மோதும்போது உருவாகும் சிதறல்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து 10,000க்கும் அதிகமான முறை செயற்கையாக கம்ப்யூட்டரில் செய்து பார்க்கப்பட்டிருக்கின்றன.

சோதனை முடிவில், சிதறல் கற்கள் கடுமையான சேதங்களை ஏற்படுத்தும் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பூமியில் மின் அதிர்வுகள் மற்றும் சென்சார் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.இந்த அச்சுறுத்தலின் முழுத் தாக்கம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. 

இருப்பினும், சர்வதேச விண்வெளி ஏஜென்சிகளை, விண்கல்லை எப்படி திசைதிருப்புவது என்கிற ஆய்வுக்குள் இந்த அச்சுறுத்தல் தள்ளியிருக்கிறது. இப்போதைக்கு 4 ஆண்டுகள் விஞ்ஞானிகளுக்கு அவகாசம் இருக்கிறது என்பதுதான் ஆறுதலான செய்தி.

காம்ஸ் பாப்பா