பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்க்கைதான் இந்தப் படம்!
‘‘ஆமா... பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா அவருடைய வாழ்க்கையில ஒரு காலத்தில் குடி காரணமா நிறைய பிரச்னைகளை சந்திச்சிருக்கார். அவருடைய வாழ்க்கையில நடந்த பல சம்பவங்களின் தொகுப்புதான் இந்த படம்.  ஒரு சுவாரசியமான கதை, தேடல், திரில்லர் எல்லாமே இந்த ‘குட் டே’ படத்தில் இருக்கும்...’’புன்னகைக்கிறார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் என்.அரவிந்தன். இவர் இயக்குநர் சி.பிரேம்குமாருக்கு அசிஸ்டெண்டாக ‘96’, ‘மெய்யழகன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
‘‘தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக கதையின் முதன்மை கதாபாத்திரத்தின் பின்னணியிலேயே கதையும் கேமராவும் பயணிக்கும்படி இந்தக் கதையை உருவாக்கி இருக்கோம்.
ஒவ்வொரு மனுஷனுக்கும் குடிக்க நிறைய காரணம் இருக்கும். அதிலும் பொருளாதார பிரச்னை முக்கிய உந்து சக்தியாக ஒருவனை குடிக்க வைக்கும். அதை மையமாக வைத்து அவனுடைய ஓர் இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை.
பிரித்திவிராஜ் ராமலிங்கம்... அவர்தான் கதையையும் எழுதி இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்கார். காளி வெங்கட், மைனா நந்தினி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், பகவதி பெருமாள் (பக்ஸ்), வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட்... இப்படி எல்லாருக்குமே மிக முக்கியமான கேரக்டர். விஜய் முருகன் இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர்.
கேமரா & எடிட்டிங் மதன் குணதேவ். இவர் இதற்கு முன்னாடி ‘நேபாளி’, ‘வர்ணம்’ படங்களில் வேலை செய்திருக்கார். எடிட்டிங்கில் இதுதான் முதல் படம்.
பாடல்கள் மற்றும் வசனம் கார்த்திக் நேத்தா. நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன் கோவிந்த் வசந்தா சாருக்கு. சின்ன படம், பெரிய படம் என்கிற பாகுபாடில்லாமல் இந்தப் படத்துக்கு மியூசிக் போட்டுக் கொடுத்திருக்கார். அதிலும் பிரதீப்குமார் பாடிய ‘மின்மினியே ராசாத்தி...’ டிரெண்டாகி இருக்கு.
நாங்க நண்பர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கோம். மொத்தக் கதைக்கும் விதை போட்டவர் கார்த்திக் நேத்தா. ஆனா, அவருடைய பயோ கிடையாது. குடிக்கறதுக்கு ஆயிரம் காரணம் தேடறோம். ஆனா, அதை நிறுத்தினா நடக்கற நல்ல விஷயங்கள் பற்றி நாம யோசிக்கறதில்லை. அதைத்தான் இந்தப் படம் ஸ்ட்ராங்கா பேசும்...’’ என்கிறார் இயக்குநர் அரவிந்தன்.
ஷாலினி நியூட்டன்
|