70 வயதில் சுதந்திரம்!இளமைக்குத்தானே என்றும் உலகில் மவுசு? முதுமையில் செல்கள் குறைய, தோல் சுருங்க மெகா பிரமாண்டங்கள் மினிமலிசமாக மாறும் காட்சியைப் பார்ப்பதைவிட கொடுமை வேறென்ன இருக்கிறது? மகராஷ்டிராவின் ராஜ குடும்பத்தின் 50 ஆண்டு விசுவாச அடிமைக்கு கிடைத்த விடுதலையும் அப்படித்தான். சதாரா மாவட்டத்திலுள்ள அந்த் என்ற ராஜ குடும்ப சொத்தான கஜராஜ் என்ற செல்ல யானைக்குத்தான் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

கோயில் பணிகளில் கம்பீரமாக பவனி வந்த கஜராஜ், உடல்நிலையில் ஏற்பட்ட டஜன் கணக்கிலான நோய்களால் தடுமாறி வந்தது. அதன் உடல்நிலையை ஆராய்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் வற்புறுத்தலால் அதற்கு விடுதலை வசப்பட்டிருக்கிறது. ஊரே கூடி ஃபேர்வெல் விருந்து நடத்தி டாட்டா காட்ட, இந்தியாவின் முதல் ஸ்பெஷல் ஆம்புலன்ஸ் வந்து அந்த யானையை அழைத்துச் சென்றது. 1500 கி.மீ. தூரம் பயணதூரத்திலுள்ள காப்பகத்தில் தன் வாழ்நாளில் முதல்முறையாக காலில் சங்கிலியில்லாமல் 70 வயதில் சுதந்திரத்தை அனுபவித்து நடைபோட்டு வருகிறது கஜராஜ்!