விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 34

யூமீன் பொதியமலை? அங்கதான் அர்ஜுனனோட வில் இருக்குனு சொல்றியா?’’ ஐஸ்வர்யா புருவத்தை உயர்த்தினாள். ‘‘நோ...’’ கிருஷ்ணன் அழுத்தமாக உச்சரித்துவிட்டு தொடர்ந்தான். ‘‘லுக் ஐஸ். அகத்தியர் விஷயம் சரிப்பட்டு வராது. அதுல நிறைய குழப்பங்கள் இருக்கு. ஃபார் எக்சாம்பிள் விதர்ப்ப நாட்டு இளவரசி லோபா முத்திரையோட கணவரான அகத்தியர் - இவரை முதல் அகத்தியர்னு சொல்லலாம் - ஸ்ரீராமபிரானுக்கு இருபது தலைமுறைகளுக்கு முந்தியவர்.

காசி நாட்டு மன்னனான அலர்காவோட சமகாலத்தவர். ஆனா, பஞ்சவடிக்கு பக்கத்துல ராமர் சந்திச்ச அகத்தியர் வேற...’’ ‘‘எதுக்கு இப்ப மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்க?’’ ‘‘யாரை சொல்ற... சிவாஜியோட நிறையப் படங்கள்ல நடிச்சாரே... அவரா?’’ ‘‘ஆமாம்டா லூசு.

இப்பதானே ஏகப்பட்ட அகஸ்தியர் இருக்கறதா சுவடில படிச்சேன். அதையே நீயும் திருப்பிச் சொன்னா?’’ கிருஷ்ணன் பதில் சொல்லாமல் ஆதி என்ன செய்கிறான் என்று பார்த்தான். இம்மியும் நகராமல் ஏதோ ஒரு சுவடியைப் படித்துக் கொண்டிருந்தான். ‘‘க்ருஷ்...’’ உலுக்கினாள். ‘‘என்ன?’’ ‘‘விஜயனோட வில் எங்க இருக்கு..?’’ ‘‘தமிழகத்துலதான்!’’

‘‘எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்ற?’’ ‘‘இங்க பார் ஐஸ்... உண்மைலயே தமிழகம் இந்த பிரபஞ்சத்தோட மினியேச்சர். உதாரணத்துக்கு ஐந்திணைகளை எடுத்துப்போம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. உலகத்துல வேற எந்த மொழி, மக்களும் இப்படி இயற்கையைப் பிரிக்கலை. இயற்கையோட மனுஷனை இணைக்கலை...’’‘‘...’’

‘‘அவ்வளவு ஏன், உலகத்துல நாகரீகங்கள் பிறந்த இடங்களை எடுத்துக்க. எல்லாமே தமிழன் கண்டு பிடிச்ச திணைகளோட கனெக்ட் ஆகும். கார்பேத்தியன் முதல் அல்டாய்ஸ் வரை முல்லைத்திணை. அதாவது காடும் காடு சார்ந்த இடங்களும். பிரனீஸ் முதல் இமயம் வரை குறிஞ்சித்திணை.

தட் இஸ்... மலையும் மலை சார்ந்த இடங்களும். மத்திய தரைக்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் சார்ந்த கடற்கரைப் பிரதேசங்கள் எல்லாம் என்ன... நெய்தல்! சகாரா, அரேபியா, பெர்ஷியா, மங்கோலியா எல்லாம் பாலை!’’ ‘‘எல்லாம் சரிடா. ஆனா...’’ ‘‘ஆனாவும் இல்ல, ஆவக்காயும் இல்ல. தமிழகம் - தென்னிந்தியாதான் உலகத்தோட ஆரம்பம். இப்ப கிடைச்சுட்டு வர்ற ஆதாரங்கள் எல்லாமே இந்த தியரியைத்தான் மெய்ப்பிக்குது...’’ ‘‘அதுக்கும் அர்ஜுனனோட வில்லுக்கும்..?’’ ‘‘தொடர்பிருக்கு.

நிறைய குழப்பங்கள் இப்பதான் தெளிவாகி இருக்கு ஐஸ். இந்த சுவடிங்கதான் அதை எல்லாம் தீர்த்து வைச்சிருக்கு. இப்ப ‘அய்த்ரேய பிராமணா’வை எடுத்துப்போம். இட்சுவாகு, புரூவர்கள் காலத்துலேந்து - அதாவது சூரிய, சந்திர குலங்கள் உருவான கட்டத்துலேந்து - கிட்டத்தட்ட 90, 100 தலைமுறைகள் அரசாண்டிருக்கு.

இது எல்லாத்தோட செவி வழி தகவல்கள், வரலாறுகளைத் தொகுத்து இந்த ‘அய்த்ரேய பிராமணா’ எழுதப்பட்டிருக்கு. இதுல பீமா பத்தி வருது. ஆனா, இந்த பீமா பஞ்ச பாண்டவர்கள்ல ஒருத்தர் இல்ல. பீமரதன். விதர்ப்ப நாட்டு இளவரசன். ஸ்ரீராமருக்கு ஏறத்தாழ 15 தலைமுறைக்கும், மகாபாரத காலத்து பிரஹத் பாலகனுக்கு 40 தலைமுறைக்கும் முற்பட்டவனான அயோத்யா நாட்டு அயுதாயுவோட சமகாலத்தவன்!

இந்த விதர்ப்ப நாடு எங்க இருந்தது தெரியுமா? விந்திய மலைப் பகுதில. தட் மீன்ஸ்... வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பிரிக்கிற வாசல்ல! விதர்ப்பம் தவிர தக்கண கோசலம், சேதி, தஸாரணம், நிடதம்னு ஏராளமான அரசுகள் விந்திய மலை அடிவாரத்துல, அதுவும் வேத காலத்துல இருந்ததா குறிப்புகள் இருக்கு.

சேதி நாட்டு ராஜாவான கசு பத்தி ரிக் வேதத்துல குறிப்பிடப்பட்டிருக்கு. சேதி, தஸாரணம், விதர்ப்பம், தெற்கு கோசலம்... பத்தி எல்லாம் மகாபாரதத்தோட நளோபாக்கியானத்துல கூறப்பட்டிருக்கு...’’ ‘‘டிகிரி சுத்தமா ஓர் எழவும் புரியலை. என்னதான்டா சொல்ல வர்ற? அதுவும் 90, 100 தலைமுறைகள்னு லிஸ்ட் போடற? என்ன... கலர் கலரா காதுல பூ சுத்தறியா?’’

‘‘நோ ஐஸ். எல்லாமே ரிக்கார்டட். F.E.Pargiter, இவரோட முழுப் பேரு Frederick Eden Pargiter. 1852ல பிறந்த இவரு, 1927ல காலமானாரு. பல ஆண்டு உழைப்புக்குப் பிறகு 1905ல ‘Ancient Indian Historical Tradition’ நூலை எழுதி வெளியிட்டாரு. அதுல புராணங்கள்ல குறிப்பிடப்பட்டிருக்கிற ராஜா, வம்சங்களை எல்லாம் தொகுத்திருக்கார்.

அதைப் படிச்சேனா நீயே கிராஃப் போடுவ...’’ ‘‘இப்ப அதை சொல்லக் காரணம்?’’ ‘‘அர்ஜுனன் பத்தி நீ தெரிஞ்சுக்கத்தான். அரிச்சந்திரனோட பாட்டனார், திரய்யாருணன். இவரோட சமகாலத்தவன் அர்ச்சுனன்!’’ ‘‘டேய்..!’’ ‘‘இரு. உடனே வாயைப் பிளக்காத. இன்னும் இருக்கு. இந்த அர்ச்சுனன் ராமாயண ராமருக்கு 30 தலைமுறைக்கு முன்னாடி வாழ்ந்தவர்.

மாவீரன். சாம்ராட், சக்கரவர்த்தினு இவரை புகழ்றாங்க. இவரோட குலம் ‘அய்அய’ (Haihaya). வட இந்தியா முழுசையும் தன் கட்டுக்குள்ள வைச்சிருந்தார். இதுக்காகவே தக்கண பாரதத்தைச் சேர்ந்த கார்க்கோடக நாகர் கிட்டேந்து கோதாவரி நதிக்கரைல இருந்த மாகிஸ்மதீயை கைப்பற்றினார். அதையே தன்னோட படைக்கலத் தலைநகராக்கினார்!’’

‘‘கிருஷ்... அப்ப இந்த... நாம சந்திச்ச... கார்க்கோடகர்..?’’‘‘ஷ்...’’ ஐஸ்வர்யாவின் வாயைப் பொத்தினான். ‘‘சொல்றதை மட்டும் கேளு. இந்த அர்ச்சுனனும் இவரோட பசங்களும் பார்கவ முனிவர் சமதக்னி ஆசிரமத்தை சூறையாடினாங்க. அவரோட பசுங்கன்றையும் கொண்டு போனாங்க.

இதனால கோபம் கொண்ட சமதக்னியின் மகன் ராமன், போர் தொடுத்து அர்ச்சுனனை அழித்தார். ‘அய்அய’ குலத்தையும் நிர்மூலமாக்கினார்! தசரத ராமன்கிட்டேந்து இந்த ராமனை வேறுபடுத்திக் காட்ட, இவருக்கு பரசுராமர்னு பின்னாடி பெயர் வைச்சாங்க. அதே மாதிரி மகாபாரத அர்ச்சுனன் நினைவு வந்துடக் கூடாதுனு இந்த அர்ச்சுனனை, ‘கார்த்தவீரியார்ச்சுனன்’னு அழைக்க ஆரம்பிச்சாங்க!’’

‘‘மை காட்! அப்ப எந்த அர்ச்சுனனோட வில்லை எடுக்கப் போறோம்னு நீ கேட்டது இதைத்தானா?’’ ‘‘இல்ல ஐஸ். நாம மகாபாரத அர்ச்சுனனோட வில்லைத்தான் எடுக்கப் போறோம்! இடம் தெரிஞ்சுடுச்சு. அங்க போக தாராவோட உதவி தேவை. ஸோ, தாராவை கண்டுபிடிக்கணும். அதுக்கு முன்னாடி இங்கேந்து நாம வெளியேறணும்!’’ கிருஷ்ணன் சொல்லி முடிக்கவும் ஆதி அவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது.

(தொடரும்) 

ஓவியம் : ஸ்யாம்