குட்டி வடிவேலு, குட்டி கோவை சரளா, குட்டி கவுண்டமணி, குட்டி செந்தில் - களைகட்டும் பழமார்நேரி பஞ்சாயத்து!
 யூ டியூப்பை தொடர்ந்து பார்ப்பவர் என்றால் ‘பழமார்நேரி பஞ்சாயத்து’ குறித்து அறிந்திருப்பீர்கள். தமிழ் சினிமாவின் பிரபலமான காட்சிகள், பாடல்கள், காமெடிகளை எல்லாம் கிராமத்துக் குழந்தைகள் உரிய மேக்கப்புடன் நடித்து வெளுப்பார்கள். இதைத்தான் ‘பழமார்நேரி பஞ்சாயத்து’ என்ற பெயரில், டப்ஸ்மாஷ் பாணியில் படமாக்கி யூ டியூப்பில் ஏற்றி வருகிறார் கலை மீடியா ஒர்க்ஸ் நிறுவனரான கலையரசன்.
 “பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த பழமார்நேரி பஞ்சாயத்துலதான். பிபிஏ முடிச்சதும் எம்பிஏ படிக்க ஆசை. ஆனா, வீட்டுச் சூழல் அனுமதிக்கலை. அப்பா கூட வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். சுண்ணாம்பு, பெயிண்டிங் வேலைனு செய்துட்டு இருந்தேன். அப்பதான் படிச்ச படிப்பை விட்டுட்டு இப்படியே கிடைச்ச வேலைகளைச் செய்துட்டு இருக்கக் கூடாதுனு தோணுச்சு.
கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்து வீடியோ எடிட்டிங் கத்துக்கிட்டேன். எங்க ஊர்ல வருஷா வருஷம் திருவிழா நடக்கும். ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள், கரகாட்டம்னு ஊரே களைகட்டும். இதுல கலந்துக்க எங்க ஊர் குழந்தைங்க ஒரு மாசமாவது டான்ஸ் பயிற்சி, புது உடைகள்னு தயாராவாங்க.
 ஆனால், வெளி ஆட்டக் குழு தங்களோட நிகழ்ச்சியை ஆரம்பிக்கிற வரைக்கும்தான் எங்க குழந்தைகளுக்கு வாய்ப்பு. அப்புறம் அந்த டீம்தான் கலைநிகழ்ச்சிகளை நடத்தும். எங்க குழந்தைங்க மேடைக்குப் பின்னாடி அழுதிட்டு இருப்பாங்க. குழந்தைகளோட அப்பா, அம்மாவுக்கும் தர்மசங்கடமா இருக்கும்.
 சரி, இந்தக் குழந்தைங்களுக்குனு தனியா ஒருநாள் நிகழ்ச்சி நடத்துங்கனு சொன்னாலும் யாரும் கேட்க மாட்டேங்கறாங்க...’’ என்று சொல்லும் கலையரசன், இதன்பிறகுதான் அவர்களை வைத்து வீடியோ எடுக்க ஆரம்பித்திருக்கிறார். ‘‘மேடைல ஆடும்போதாவது லேசா பயப்படுவாங்க. ஆனா, தனியா ஆடறப்ப யாரும் பயப்படலை. அதுபோக எல்லா குழந்தைங்களுக்கும் ஆட சான்ஸ் கிடைச்சது.
 இதுல ஹைலைட் என்ன தெரியுமா? இந்த வீடியோக்களைப் பார்த்துட்டு சில பெரியவங்களும் ஆட முன்வந்ததுதான். எல்லாத்தையும் தொகுத்து எடிட் பண்ணி ஒளிபரப்பினேன். அவ்வளவு பாராட்டு குவிஞ்சது! இதை இப்படியே விட்டுடக் கூடாதுனு யூ டியூப்ல ஏற்றினேன். செம ரெஸ்பான்ஸ். அப்புறம் சினிமா பாட்டு மட்டுமில்லாம காமெடி, முக்கியமான காட்சிகள்னு இதை விரிவு படுத்தினோம்.
 இப்ப எங்க சேனலுக்கு 17 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்காங்க. ஒவ்வொரு வீடியோவையும் லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிறாங்க. நிறைவா சந்தோஷமா இருக்கு. குட்டி வடிவேலு, குட்டி கோவை சரளா, குட்டி கவுண்டமணி / செந்தில்னு பழமார்நேரி பஞ்சாயத்தே களைகட்டி நிற்குது..!’’ என்று சொல்லும் கலையரசன், மற்ற கிராமத்துக் குழந்தைகளையும் நடிக்க வைத்து, ஆட வைத்து வீடியோ எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்.
 -ஷாலினி நியூட்டன்
|