ரோபோடிக்ஸில் அசத்தும் சென்னைப் பெண்!
வைஜெயந்தி சென்னை மண் பெற்றெடுத்த விஞ்ஞான தமிழச்சி. மெக்கட்ரானிக்ஸ் படித்துவிட்டு ரோபோக்களை உருவாக்கும் பணியில் பிஸியாக இருக்கும் இவர், பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சியை வழங்கும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். பெருமை  கொள்ள வேண்டிய விஷயம், இந்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற இருக்கும் ‘சர்வதேச விண்வெளி ஆய்வு மற்றும் முன்னேற்ற மாநாட்டில்’ வைஜெந்தி பங்கு பெற உள்ளார் என்பது. பொன்மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்தோம். 

இந்தத் துறையை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க?
நான் சாதாரண நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த பெண். அப்பாவுக்கு பத்திரிகைத்துறையில் வேலை. வருங்காலத்தில் ெதாழில்நுட்பம்தான் நம்மை ஆட்சி செய்யப்போகிறது என்பதால் எனக்கு பொறியியல் படிக்க வேண்டும், அதிலும் ரோபோடிக்ஸ் படிக்க வேண்டும் என்று ஆர்வம். அதனால், மெக்கட்ரானிக்ஸ் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

SEED STEM என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கீங்களாமே? அதைப்பற்றி விளக்க முடியுமா? 
கல்லூரியில் படித்தபோது ரோபோடிக்ஸ் போன்ற படிப்புகள் ஆண்களுக்கானது என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. அதற்கு ஏற்ப என் வகுப்பிலும் நான் உட்பட மொத்தம் இரண்டே இரண்டு பெண்கள்தான் இருந்தோம். இந்த விஷயம் யோசிக்க வைத்தது. ஏன் தொழில்நுட்பகக் கல்வி பெண்களுக்கானதாக இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.

இப்படி யோசித்தபோது இன்னொரு விஷயம் புரிய வந்தது. அது நம் கல்விமுறையில் உள்ள போதாமை. நம் கல்விமுறை. புரிந்துகொண்டு பாடத்தைக் கற்றுக் கொள்வது என்பதாக இல்லை. மதிப்பெண்ணை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மாணவர்களும் புரிந்தோ புரியாமலோ மதிப்பெண்ணுக்காக மனப்பாடம் செய்து தேர்வு முடிந்ததும் மறந்து விடுகிறார்கள்.

இப்படிப் புரியாமல் மனப்பாடம் செய்வது தொழிநுட்பக் கல்விகளில் சேரும்போது பெரிய தடையாக இருக்கிறது. அனைவருக்கும் புரியும்படியாக செயல்முறை விளக்கங்களுடன் இணைந்த ஒரு கல்வி அவசியம். அதற்காகவே ‘சீட் ஸ்டெம் கல்வி சேவை அமைப்பு என்பதை தொடங்கினேன். 

கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்?
Science, Technology, Engineering, Maths இவை இணைந்ததுதான் STEM. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஐந்து வயது குழந்தைகள் கூட இந்தக் கல்வி முறையைப் பயின்று வருகிறார்கள். என்னுடையது ரோபோடிக்ஸ் குறித்த கல்வி. வெறுமனே மனப்பாடம் செய்யாமல் செயல்வழிக் கற்றல் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படைகளைக் கற்றுத் தருகிறோம்.

இதற்கு ஒரு மைக்ரோ கன்ட்ரோலர் போர்டு மட்டும் இருந்தால் போதும். இதுவே மூளை போல் செயல்படும். இதனை லேப்டாப்புடன் இணைத்து எந்த வகையான ரோபோக்களையும் உருவாக்க முடியும். பொதுவாக, இன்ஜினியரிங் மாணவர்கள் இதைக் கடைசி ஆண்டில்தான் பிராஜக்ட்டாக செய்வார்கள்.

ஆனால், இந்தக் கல்வியை பள்ளிக் காலத்திலேயே கற்றுக்கொடுத்தால் பிற்காலத்தில் அதுவே அவர்களுக்கு ஒரு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தும். வெளிநாடுகளில் இதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஸ்டெம் தினம் என்று ஒரு நாளை கொண்டாடுகிறார்கள். தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாளாக அது இருக்கிறது.

யாருக்குக் கற்றுத் தருகிறீர்கள்?
முதல் கட்டமாக நான் கற்ற பள்ளியில் உள்ள மாணவிகளுக்குக் கற்றுத் தருகிறேன். நாம் அன்றாடம் பயன்படுத்தும் டிவி ரிமோட், கதிர்வீச்சு மூலம் எப்படிச் செயல்படுகிறது என்று அவர்களுக்கு விளக்கும்போது அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள். இதற்கு அவர்கள் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டில் உள்ள தீப்பெட்டி, ஐஸ்கிரீம் குச்சி, காகிதங்களைக் கொண்டு ஒரு எட்டுக்கால் பூச்சியை உருவாக்க முடியும்.

ரோபோடிக்ஸ் என்பது எண்ணற்ற சாத்தியங்களை உடையது. வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களைக் கொண்டு அழகான கலைவண்ணம் மிக்க பொருட்களையும், பயன்பாடு மிக்க சிறு சிறு இயந்திரங்களையும் உருவாக்கலாம். அன்றாடம் பயன்படும் பொருட்கள் முதல் இயற்கை வேளாண்மைக்கான இயந்திரங்கள் வரை பல விஷயங்களை ரோபோடிக்ஸ் என்னும் இயந்திரவியல் விதிகளைப் பயன்படுத்தி எளிய முறையில் தயாரிக்கலாம். இது எதிர்கால சந்ததிக்கு அவர்களின் வாழ்வை வளமாக்க மிகவும் உதவும்.

சர்வதேச மாநாட்டுக்குச் செல்கிறீர்களாமே..?
ஆமாம். அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச விண்வெளி ஆய்வு மற்றும் முன்னேற்ற மாநாடு வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதற்காக ‘Introducing stem education in schools and empowering women in this modern era touching with the base of engineering through hands on learning’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன்.

அதைப் படித்துவிட்டு அதில் பங்கு பெற எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த மாநாட்டில் ஸ்டெம் குறித்து கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்த மாதம் 14ம் தேதி முதல் 25ம் தேதி வரை இந்த மாநாடு நடக்கிறது. இதில், ஸ்பேஸ் Xன் நிறுவனர் மற்றும் CEO எலான் மஸ்க், இணை நிறுவனர் டெஸ்லா மற்றும் நாசாவின் விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் உட்பட 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் பங்கு பெறுகிறேன் என்பதைப் பெருமையாக உணர்கிறேன்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம் பெறும் அனுபவத்தையும் அறிவையும் என் மாணவர்களுக்குப் பகிர முடியும் என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்போதைக்கு கைகாசு போட்டுத்தான் இந்தப் பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறேன். நண்பர்கள் இருவர் உதவியாக உள்ளார்கள். எதிர்காலத்தில் இன்னும் அதிகமானவர்களுக்குப் பயன்படும்படியாக என் சேவையை விரிவாக்குவதே இப்போதைய லட்சியம்!  


படங்கள்: கவுதம்

-ப்ரியா