ஜான்சிராணியை பின்தொடரும் காதல்



காந்திமதி காற்றில் சிக்கிய பலூன் போல் வெடவெடத்தாள். உள்ளங்கைகள் பிசுபிசுத்திருந்தன. பிடி கிடைக்காமல் அந்தரத்தில் தொங்கிய கால்களின் கனம் அவளைக் கீழ் நோக்கி இழுப்பது போலிருந்தது. ‘‘காந்தி பயமா இருந்தா கண்ண மூடிக்கோ. ரொம்ப பயமா இருந்தா வாயத் தொறந்து கத்திருடி. எல்லாரும் அப்படித்தான் சத்தம் போடுவாவோ!” என்றாள் அருகில் அமர்ந்திருந்த ராதா.

காந்திமதி கண்களை மூடிப் பார்த்தாள். தலை மட்டும் தனியாகச் சுழன்றது. உடனேயே கண்களை அகலத் திறந்து வைத்துக் கொண்டாள். ராட்சத ராட்டினத்தின் ஒவ்வொரு இருக்கையும் மெதுவாக நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. காந்திமதி அமர்ந்திருந்த இருக்கை உச்சிக்குச் சென்றது. அங்கிருந்து மொத்த பொருட்காட்சியும் சிறிதெனப்பட்டது. கீழ் நோக்குகையில் தன்னையும் மீறி குதித்துவிடுவோமோ என்கிற பயம் வந்து புரட்டியது.

‘‘காந்தி... நெல்லையப்பர் கோயில் உச்சி தெரியுது பாரேன்!” என்றாள் ராதா உற்சாகமாக. “வாய மூடுடி...’’ காந்திமதிக்கு வயிறு கனத்தது. சிறுநீர் முட்டியது. சும்மா இருந்தவளைப் பேசிப் பேசி ராட்டினத்தில் ஏற வைத்த ராதாவையும் நொடி நேரம் தனக்குள் ஏற்பட்ட நப்பாசையையும் கெட்ட வார்த்தை என்று நம்பிய ஒரு வசவால் திட்டிக் கொண்டாள்.

“முருகா... நல்லபடியா கீழே இறக்கி விடுப்பா. திருச்செந்தூர் வந்து உன்னப் பாக்கேன்...” கைகூப்பினாள் திருச்செந்தூர் இருப்பதாக நம்பிய ஒரு திசையை நோக்கி. ராட்டினம் மெதுவாகச் சுற்றத் தொடங்கி வேகமெடுக்க, காந்திமதியின் வயிறும் இழுக்கத் தொடங்கியது. ராதா ஏதேதோ சொல்லி சத்தம் போட்டாள்.

‘பாவி மேல வந்து சரியுதாளே’ என்று ராதாவைத் திட்டிக்கொண்டே கம்பியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். தானும் கத்தலாம் என்றால் காற்றுப்பட்டு உதடுகள் காய்ந்து ஒட்டிக் கிடந்தன. இதற்கு மறுநாளிலிருந்துதான் தெருமுனையில் கண்ணாடி போட்ட அவன் தட்டுப்பட்டான். இருவரும் பள்ளிக்கூடத்திற்கு போகும்போதும் வரும்போதும் சைக்கிளில் உருண்டுகொண்டு பின்னாலேயே வந்தான். நின்றான். போனான்.

இரண்டு நாட்கள் கதை இப்படியே போனது. மூன்றாம் நாள் மாலை ரயில்வே ஸ்டேஷன் சாலையில் வைத்து காந்திமதியை பேர் சொல்லி அழைத்தான். ‘‘சொன்னேம்லா.... அவன் ஒன்னத்தான் பாக்கான்னு’’ என்றாள் ராதா காந்திமதியிடம் மெதுவாய். அவன் சைக்கிளை வேகமாக உருட்டியபடியே காந்திமதியை நெருங்கினான்.

‘‘இந்த லெட்டரை உன் பிரெண்ட் கிட்ட கொடுத்துரு...’’ என்று ராதாவிடம் கொடுத்தான். ஒரு நொடி காந்திமதியைப் பார்த்து கண்களால் ஏதோ சொல்ல வந்து முடியாமல் விசித்திர முழியோடு போனான். காந்திமதிக்கு படபடப்பாய் வந்தது. முதன்முதலாக அவளுக்கு வருகிற காதல் கடிதம். தெரிந்தால் கசாப்புதான். வீட்டில் அன்று எல்லாமே கோணலாகப் பட்டது.

அப்பா அடிக்கடி இவளது அறைக்குள் வந்து எதையோ தேடிவிட்டுப் போனார். அண்ணன்காரன் அவளுடைய பள்ளிக்கூடப் பையினை எடுத்து ஒருமாதிரிப் பார்த்து உதறிவிட்டு இடம் மாற்றி வைத்தான். எப்போதும் போல் இல்லாமல் கடந்து போகையிலெல்லாம் அம்மாவின் தலை தொங்கியிருந்தது. யாரும் எதுவும் பேசவு மில்லை. இரவு தூக்கத்திற்குப் பதில் துக்கம் வந்தது.

நல்லவேளையாக கடிதம் ராதாவிடமே இருந்தது.  மறுநாள் காலையில் பள்ளிக்கூடம் அழைத்துப்போக ராதா சீக்கிரமாகவே வந்துவிட்டாள். யாருமற்ற வகுப்பறையில் எச்சரிக்கையுடன் கடிதம் பிரிக்கப்பட்டது. ரகசியப் பேச்சுக்குத் தருவது போல குரலை மாற்றிக் கொண்டு ராதா வாசித்தாள்.

‘அன்புள்ள காந்திகுட்டிக்கி.... வாழ்க்கையில ஒரு பொண்ணக் கட்டினா அவ தைரியசாலியா ஜான்சிராணி மாதிரி இருக்கணும்னு நெனச்சேன். அப்படித்தான் நீ இருக்கே. உன்னை முதமுதலா பொருட்காட்சியிலதான் பாத்தேன். எல்லாரும் ஜெயின்ட்வீலுல பயத்துல உக்காந்துருந்தாங்க. நீ என்னா தைரியமா இருந்தே.

உன் பிரெண்ட் இருக்காளே பயந்தாங்குளி, அவ கத்துனா... அப்பவும் நீ அமைதியாத்தான் இருந்தே. உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. உன் பதிலை சீக்கிரம் சொல்லு. இப்படிக்கு உனது வருங்கால கணவன் செந்தில் விஜய்’ ராதா கடிதத்தை படிக்கும்போதே கடுப்பானாள். முடித்ததும் ரொம்ப சிரித்தாள். ‘‘அவம் பேருக்குப் பக்கத்துல ஒரு தோசச் சட்டுவம் படம் போட்டுருக்காம்.

அத நீ ரோஜாப்பூனு நினைச்சுக்கிடுவியாம்...’’ என்று கடிதத்தைத் தட்டி இன்னும் பலமாய் சிரித்தாள். ‘‘நீ ஏம்ட்டி இப்படி சிரிக்கே. எனக்கு சிரிப்பே வரல...” என்றாள் காந்திமதி எரிச்சலுடன். “ஆமாமா... ஜான்சி ராணில்லாம் சிரிக்கக் கூடாதுல்லா!” என்றவள் கையை உருட்டி “ஜெயின்ட் வீலுல இருந்து எறங்குனதும் ஓடிப் போயி வாந்தி எடுத்தியே... அத அவன் பாக்கல பாத்தியா?” என்று கன்னத்தில் கை வைத்தாள்.

“எங்கப்பாவுக்கு தெரிஞ்சதுன்னா என்னைய ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டாரு. எங்கண்ணன் என்னையத் தொலைச்சிருவான்...” காந்திமதியின் குரல் அடைத்தது. மறுநாள் பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள கடையில் அவன் நின்று கொண்டிருந்ததை ராதாதான் முதலில் பார்த்து காந்திமதியிடம் சொன்னாள். அவன் இவர்களைப் பின்தொடரத் தொடங்கினான். சரியாக அவனுக்கும் இவர்களுக்குமிடையில் பத்தடி தூரமே இருந்தது.

அந்த இடைவெளியில் ஞானம் மிஸ் நடந்து வருவதை காந்திமதி தனக்கு முன்பாக விழுந்த நிழலின் வழி உணர்ந்து கொண்டாள். ஞானம் மிஸ் மட்டும் இதைக் கண்டுபிடித்துவிட்டால் பிரேயர் ஹாலில் வைத்து மானத்தை வாங்கிவிடுவாள். காந்திமதிக்கு அவஸ்தையாக இருந்தது. ஸ்டேஷன் சாலை நெருங்கும்போது ராதாவே பேசுவதை தன்னிச்சையாக நிறுத்திக் கொண்டாள்.

ஏதோ நடக்கப்போகிறது என்று காந்திமதியின் உள்ளுணர்வு அழுத்தியது. சைக்கிள் மிகவேகமாக இவர்களை நோக்கி வந்தது. ‘நாசமாப் போவான்’ என்று நினைப்பதற்குள்ளாகவே அவன் சக்கரங்கள் மணலில் தெறிக்க வந்து நின்றான். சத்தத்தில் சாலையில் போய்க் கொண்டிருந்த ஓரிருவர் திரும்பிப் பார்த்தனர். ‘‘இந்தப் பாரு சும்மா உம் பின்னாடி சுத்த முடியாது.

நாளைக்கு பதில் வரணும். வரல்லே... அப்புறம் நான்...” என்று ஏதோ சொல்ல வந்து, “சொல்லிட்டேன்...” என்று நிறுத்தினான். சுற்று வழியில் வீட்டுக்குப் போகலாம் என்று மறுநாள் ராதாதான் யோசனையைச் சொன்னாள். வீடு போய்ச் சேர கூடுதலாய் கால்மணி நேரமாகும். பரவாயில்லை. அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று காந்திமதிக்குப் பட்டது.

பஜாரைச் சுற்றி வரும்போது படபடப்போடவே இருந்தாள். சட்டென ராதா கையைப் பிடித்தாள். ‘‘ஏட்டி அவன் இங்கேயும் வந்துட்டான்!” காந்திமதியின் கால்கள் மரத்துக் கொண்டன. எதிரில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். சுற்றிலும் உள்ளவர்களில் தன் வீட்டிற்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பார்கள் என்று திடமாகப் பட்டது.

நெருங்கி வந்தவன் இரண்டு முறை திகிலூட்டும்படி சைக்கிள் மணியை அடித்தான். காந்திமதியால் அதற்கு மேல் முடியவில்லை. தலை சுற்றுவது போல இருந்தது. சாலையில் சரிந்து உட்கார்ந்து விட்டாள். சட்டென்று நான்கைந்து பேர் இவர்களைச் சூழ்ந்து கொண்டனர். கூட்டம் சேருவதைப் பார்த்ததும் சைக்கிளில் வந்தவன் ஸ்தம்பித்தான்.

அப்படியே சைக்கிளோடு பின்னகர்ந்து காணாமல் போனான். ஒருவன் காந்திமதிக்கு பக்கத்து கடையில் இருந்து குடிக்கத் தண்ணீர் வாங்கித் தந்தான். கொஞ்சம் பரவாயில்லை போல இருந்தது. ராதா காந்திமதியை நடத்திக் கூட்டிச் சென்று கொண்டிருந்தாள். “கூட்டத்தைப் பார்த்ததும் அவன் ஓடியே போயிட்டான். இனி தெசப் பக்கம் வரமாட்டான். இவனுக்கெல்லாம் ஜான்சிராணி கேக்குது..?” என்ற ராதா தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தாள்.

தண்ணீர் வாங்கித் தந்தவன், ‘‘இனிமே போய்க்கிடுவீங்கல்லா?” என்றான். ராதா தலையசைத்தாள். மறுநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போது மோட்டார் சைக்கிள் சத்தம் சம்பந்தமில்லாமல் கேட்பது போலத் தோன்ற, இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அதில் அமர்ந்திருந்தவன் பளிச்செனத் தெரிந்தான். தலைமுடியை வேண்டுமென்றே கலைத்து விட்டிருப்பான் போல.

காந்திமதி யோசனையாகக் கேட்டாள், “இவன் நேத்து தண்ணீ வாங்கித் தந்தவன் தானே?” “அதே கொரங்குதான்!” அவன் ‘ஹலோ’ என்று அழைத்தான். ராதா திரும்பினாள். “உங்க பிரெண்ட் கூட பேசணும்...” என்றான். ‘‘என்னைய என்னன்னு நினைச்சிருக்கீங்க...” என்று சட்டென ராதா சொல்லப்போக, காந்திமதி ராதாவின் கைகளைப் பிடித்து இழுத்தபடி வேகமாக அங்கிருந்து நடந்து போனாள்.

“பாத்தியா காந்தி... ராத்திரியோடு ராத்திரியாப் போயி புதுத்துணில்லாம் வாங்கிப் போட்டுட்டு வந்திருக்கான். என்ன பேசணும்னு கேட்டுருவமா?” காந்திமதி ஓடாத குறைதான். சிறிது நேரத்திற்குப் பிறகு கேட்டாள், “இவனை எப்படி சமாளிக்கப் போறோம்?” “இவன் என்ன? எலிகாப்டர்லலாம் கூட வருவானுக, அவனுவளயே சமாளிப்போம்... வாடி!” முக்குத் திரும்பியதும் ஒரு சந்தேகமாக திடீரென்று ராதா கேட்டாள், “இந்த ஊர்லயே நாமதான் அழகா இருக்கோமோட்டீ!” காந்திமதிக்கு சிரிப்பு வந்தது.

யானை மாரத்தான்!
ஜிம்பாப்வேயில் நடந்த விக்டோரியா ஃபால்ஸ் மாரத்தானில் வீரர்கள் கால் நரம்பு துடிக்க ஓடிக் கொண்டிருந்தனர். திடீரென சாலை அருகிலிருந்த காட்டு யானையும் அவர்களோடு இணைந்தது! துரத்திய யானையால் பள்ளத்தில் விழுந்து எழுந்து ஓடிய வீரரின் வீடியோ இப்போது வைரல்!

பேபிக்கு விமானம் தந்த கிஃப்ட்!
துருக்கிஸ் ஏர்லைன்ஸின் எண்: 971 விமானத்தில் கிரிஸ்டினா பென்டன், 36 வார கர்ப்பிணியாக விண்ணிலேறினார். நடுவானில் திடீரென குவா குவா சத்தத்தோடு குழந்தை டெலிவரியாக, உடனே நியூ ஆர்லியன்ஸ் நகரில் விமானம் இறங்கியது. கிரிஸ்டினாவின் குழந்தை ஆயுள் முழுக்க தங்கள் ஃபிளைட்டில் ஃப்ரீயாக பறக்கும் பரிசை அளித்து அசத்தியுள்ளது ஏர்லைன்ஸ் கம்பெனி.

பிகினியில் வேலைவாய்ப்பு!
செக் நாட்டு மின்சாரவாரியம் தனது ஃபேஸ்புக் கணக்கில் ‘மிஸ் எனர்ஜி 2017’ தலைப்பில் 2 மாத இன்டர்ன்ஷிப்பை அறிவித்திருந்தது. ஆனால், 10 பள்ளி மாணவிகளை பிகினியில் நிற்க வைத்து அதில் ஒருவரை ‘மிஸ் எனர்ஜி’ என செலக்ட்  செய்யச் சொன்னதுதான் விபரீதம். நாடே கூடி மீம்ஸ்களால் வறுத்தெடுக்க, கம்பெனி என்ன செய்யும்? அறிவிப்பு உடனே வாபஸ்தான்!

ஹைவே ஸ்டிக்கர் திருடர்!
அமெரிக்காவின் க்லீவ்லாண்டிலுள்ள அவோன் லேக் போலீஸுக்கு போர்டுகளை காணவில்லை என பலரும் புகார் செய்தனர். செக்யூரிட்டி கேமராவை செக் செய்தபோது, ரோடிலுள்ள போர்டுகள், ஸ்டிக்கர்களை ஜான் ஹோய்ஸெல் என்பவர் அபேஸ் செய்வது தெரிந்தது. அவரது வீட்டில் நடத்திய ரெய்டில் கிடைத்த போர்டுகளின் எண்ணிக்கை 500; அவற்றின் மதிப்பு  5,500 டாலர்கள். இவர் வேறமாதிரி திருடர்!

வெறுங்கையில் மெகா நண்டு!
ஆஸ்திரேலியா சூழலியலாளரான ப்யூ க்ரீவ்ஸின் கையிலிருந்த நண்டின் சைசை பார்த்து அவரது கேமராமேன்கூட அலறிவிட்டார். மெகா சைஸில் gargantuan crustacean என்ற நண்டை நூதனமாக அவர் பிடித்த வீடியோ ஆன்லைனில் செம ஹிட். நண்டு இருமுறை கடித்தும் விரல் துண்டான நிலையிலும் கூட அதை க்ரீவ்ஸ் விடவில்லையாம். மெகா தில்!

டூத் பிரஷ்ஷில் நின்ற பேஸ்கட் பால்!

பஞ்சாபைச் சேர்ந்த உத்தம் சிங், தன் வாயிலுள்ள டூத்பிரஷ்ஷின் மீது பேஸ்கட்பாலை நிற்க வைத்து கின்னஸ் ரெக்கார்ட் செய்திருக்கிறார். ஊரே சூழ்ந்து நிற்க, கையில் ட்யூன் செய்த பேஸ்கட்பாலை மெல்ல வாயில் வைத்திருக்கும் டூத்பிரஷ் ஷுக்கு கொண்டுவந்து சுற்றியபடி 53 நொடிகள் நிற்க வைத்திருக்கிறார்!


-ஜா.தீபா