தேவாலயங்கள்



அறிந்த இடம் அறியாத விஷயம்

‘‘அப்ப இது பயங்கர காட்டுப்பகுதி. பக்கத்துல கடல் வேற. போர்ச்சுக்கீசிய வணிகர்களோட கப்பல் புயல்ல சிக்கித் தவிச்சது. உள்ளிருந்த பிரான்சிஸ்கன் துறவிகளும், மாலுமிகளும், வணிகர்களும் அன்னை மரியாவை உருகி ஜெபிச்சாங்க. அற்புத ஒளி தோன்றி அவங்கள கரைசேர்த்தது. அதனால, அன்னைக்கு நன்றி செலுத்துற விதமா இங்க ஆலயம் எழுப்பினாங்க...’’ 500 வருடங்களைக் கடந்து நிற்கும் ‘லஸ்’ சர்ச்சின் கதையை ஐந்தே வரிகளில் சொல்லிவிட்டு நகர்கிறார் தேவசகாயம் அண்ணன்.

இப்படி ஒன்றல்ல... இரண்டல்ல... சென்னைக்குள் மட்டும் நூற்றாண்டைக் கடந்து நிற்கும் தேவாலயங்கள் ஏராளம். ஒவ்வொன்றுக்குள்ளும் நிறைய சுவாரஸ்ய கதைகள். அனுமதியோடு சிலவற்றுக்குள் பயணமானோம். சென்னை மயிலாப்பூரின் மையப்பகுதியில் இருக்கிறது ‘லஸ்’ தேவாலயம். ‘1516’ என கோபுரத்தின் மையத்தில் ெபாறிக்கப்பட்டிருக்கிறது.

இது ஆலயம் கட்டப்பட்ட வருடம். அதன் மேலே கண்ணாடிப்பேழையில் இரு கரங்களையும் நீட்டி அழைக்கிறார் இயேசுநாதர். கருங்கற்களாலான நுழைவு வாயிலின் கம்பீரமும், அதை மூடும் மரக்கதவுகளும் பழமையை பறைசாற்றி நிற்கின்றன. பேரமைதி. மண்டியிட்டும், அமர்ந்தபடியும் குழந்தை இயேசுவுடன் நிற்கும் பிரகாச மாதாவை வேண்டி மக்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
 
‘‘லஸ்ன்னா என்ன அர்த்தம்னு தெரியுமா?’’ கேட்ட தேவசகாயம் அண்ணனே தொடர்ந்தார். ‘‘அது போர்ச்சுக்கீசிய மொழி. ஒளி அல்லது பிரகாசம்னு அர்த்தம்!’’ சிறிய ஆலயம்தான். ஆனால், அற்புதமான வடிவமைப்பு. ஐரோப்பிய வேலைப்பாடுகள் நிரம்பிய கோதிக் கட்டிடக்கலை. கூடவே, 16ம் நூற்றாண்டில் உருவான ‘பரோக்’ கலை வடிவ அலங்காரங்கள் மின்னுகின்றன.

திருப்பலிபீட மேற்கூரையில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் கைகள் மட்டும் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம். ஒரு கை வெள்ளை நிறத்திலும், இன்ெனான்று பிரவுன் அங்கி அணிந்தபடியும் காணப்படுகிறது. இப்போது இந்தத் தேவாலயத்தின் அடிக்கல் இந்தியாவின் பழமையான ஐரோப்பிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சாந்தோம் நோக்கி நகர்ந்தோம். புனித தோமையார் தேசிய திருத்தல பேராலயம் என்பதைவிட சாந்தோம் சர்ச் என்றால்தான் பலருக்கும் தெரியும். கி.பி.52ம் ஆண்டு இந்தியா வந்த இயேசுவின் பனிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கல்லறையின் மீது எழுப்பப்பட்ட ஆலயம் இது.

1523ல் போர்ச்சுக்கீசியர்கள் கட்டிய இந்த ஆலயத்திற்கு 1896ல் ஆங்கி லேயர்கள் மீள்வடிவம் கொடுத்திருக்கிறார்கள். இதுவும் கோதிக் கட்டிடக்கலைதான். கோபுரத்தின் உயரம் 155 அடி. மர வேலைப்பாடுகள் கொண்ட மேற்கூரை ரம்மியமாக வரவேற்கிறது. இரண்டு புறங்களிலும் மரச்சட்டங்களில் இயேசு சிலுவையில் அறையப்படும் காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கின்றன.

அதன் கீழே புனிதர்களின் ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன. திருப்பலிபீடத்திற்கு முன்பு புனித தோமாவின் கல்லறை கண்ணாடி வருகிறது. எட்டிப் பார்க்கிறோம். சரியாகத் தெரியவில்லை. ஆலயத்தின் பின்பக்கத்தில் வழியிருப்பதாகச் சொல்கிறார் அங்கிருந்த பணியாளர் ஒருவர். வலதுபக்கம் இருக்கும் மயிலை அன்னையின் திருவுருவம் போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது என்கிறார் இன்னொருவர்.

பீடத்தின் பின்புறம் சிலுவையில் இயேசுநாதர் தாமரைப் பூவில் நிற்கிறார். அவரது இருபுறமும் மயில்கள். அதற்குப்பின் கண்ணாடி ஜன்னலிலேயே தோமையார் இயேசுவைத் தொட்ட காட்சி ஓவியமாக தீட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து, பின்புறமுள்ள தோமாவின் கல்லறை நோக்கி நகர்ந்தோம். குளிரூட்டப்பட்ட அண்டர்கிரவுண்ட் அறை.

‘‘கோயில்ல கண்ணாடி வழியா பார்த்தீங்கல்ல அதுதான் ஆரம்பத்துல பாதையா இருந்துச்சு. மாஸ் நடக்கும் போது இங்க வர்ற வெளியூர் பக்தர்களால் அதை பார்க்க முடியலை. அதுக்காக, 2004ல் பின்பக்க வழியா அடித்தளத்துல ஓர் அறை கட்டி தோமையார் கல்லறையை பார்க்கிற மாதிரி செஞ்சாங்க...’’ என்கிறார் அடித்தள பணியாளர் ஒருவர்.

அமைதி தவழும் அந்த அறையில் கண்ணாடிப் பேழைக்குள் புனித தோமாவின் சிலை. அதனடியில் கல்லறை இருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கிருந்து மேல்பகுதியிலிருக்கும் மியூசியத்திற்குள் சென்றோம். பழைய சாந்தோம் கட்டிடத்தின் கற்கள், புனித தோமாவை குத்திய ரத்தம் தோய்ந்த ஈட்டி முனை, எலும்புகள் ஆகியவற்றை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

பிறகு, ஆலயத்தின் பின்புறமுள்ள புனித தோமா வைத்த கம்பத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து செயின்ட் தாமஸ் மவுன்ட்டின் மலை மீதுள்ள தேவாலயத்திற்கு விரைந்தோம். சுற்றிலும் பசுமையான வேப்பமரங்கள் நிறைந்த மலை. 134 படிகள் தாண்டி வருகிறது தூய தோமையார் மலை தேசிய திருத்தலம். இதுவும் 1523ம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம். கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரம். இங்கிருந்து வங்கக்கடல் மட்டுமல்ல, முழுச் சென்னையையுமே தெளிவாகப் பார்க்க முடிகிறது.

‘‘புனித தோமையார் முதன் முதலில் கடல் மார்க்கமாக மயிலாப்பூர் வந்தார். அங்கு ஆட்சிபுரிந்த ராஜா மகாதேவன் என்பவர் தோமையாரின் போதனைகளில் மக்கள் மனம் மாறுவதைக் கண்டு கோபமாகி அவரைத் தீர்த்துக் கட்ட முடிவெடுத்தார். அதனால், தோமையார் கிண்டி அருகே உள்ள சின்னமலையில் மறைந்திருந்து வேதம் போதித்தார். அங்கேயும் ராஜாவின் ஆட்கள் வர பெரிய மலைக்குத் தப்பியோடினார்.

அங்கு சிலுவைக்கல் ஒன்றை செதுக்கி, ஜெபத்தில் ஈடுபடும் போது ஈட்டியால் முதுகில் குத்தி சாய்த்தார்கள். கி.பி.72ல் இந்த மலையில் ரத்தம் சிந்தி மரித்தார் தோமையார்...’’ என எடுத்துரைக்கிறது செயின்ட் தாமஸ் மலையின் ஆலய வரலாறு. அதனாலேயே இந்த மலையை ‘ரத்த மலை’ என்றும் அழைக்கிறார்கள்.

தோமையார் செதுக்கிய சிலுவைக்கல்தான் இன்றும் இந்தக் கோயில் திருப்பலிபீடத்தின் மையத்தில் வைத்து வணங்கப்படுகிறது. இதன் கீழே விளக்கு ஒன்று தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. கூடவே, வலதுபுறத்திலிருக்கும் புனித லூக்கா வரைந்த அன்னை மரியாவின் ஓவியமும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

‘‘போர்ச்சுக்கீசியர்கள் இங்கே வாணிபத்திற்கு வரும்போது இந்த மலை ‘லைட்ஹவுஸா’ இருந்திருக்கு. அப்ப, நல்லபடியா வந்து சேர்ந்தால் மலை மீது கோயில் கட்டுறதா வேண்டியிருக்காங்க. பிறகு இங்க வந்து கோயில் கட்ட தோண்டும் போது மதர் படமும், கற்சிலுவையும் கிடைச்சிருக்கு.

அதுக்குப் பிறகு ஆர்மேனியன்ஸ் மலைப்படிகள், கோயில் விரிவாக்கம்னு பண்ணினாங்க...’’ என்கிறார் கோயில் மேலாளர் லாரன்ஸ் நெகிழ்வாக. உள்ளே நுழைகிறோம். குகை போல வளைவான வடிவமைப்பு. சுற்றிலும் பதினான்கு புனிதர்களின் ஓவியங்கள். அதில், அவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பது வரையப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி பலிபீடம்.

அதன் இடப்புறம் தோமையாரின் சிறிய எலும்புத்துண்டை திருப்பண்டமாக வைத்திருக்கிறார்கள். கூடவே, 102 புனிதர்களின் திருப்பண்டங்களையும் பாதுகாத்து வருகிறார்கள். இதற்கு அருகில் கர்ப்பமாக இருக்கும் அன்னை மரியாவின் சிலை. வேறெங்கும் இந்த சிலை இல்லை என்கிறார்கள். இதனை கர்த்தரை எதிர்நோக்கி காத்திருந்த அன்னை என வணங்குகிறார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும், நார்மல் டெலிவரி வேண்டுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 18ம் தேதி ஒரு மாஸ் நடத்துகிறார்கள். ‘‘இந்தக் கற்சிலுவையிலிருந்து ஆறு முறை ரத்தம் வடிஞ்சிருக்கு. அந்த ஆறு தடவையும் டிசம்பர் 18ம் தேதிதான் வந்திருக்கு. அதனால ரத்தம் சிந்தும் கற்சிலுவைனு சொல்றோம்...’’ என்கிறார் லாரன்ஸ் பக்தியுடன்.

வேப்ப மரங்களின் சுகமான காற்றை அனுபவித்தபடி அங்கிருந்து பிராட்வேயில் இருக்கும் ஆர்மேனியன் சர்ச் நோக்கி பறந்தோம். ஐகோர்ட் எதிரிலிருக்கும் ஆர்மேனியன் தெருவின் ஆரம்பத்திலேயே இருக்கிறது இந்த சர்ச். ஒரு வீடு போல அழகான கட்டுமானம். இடது, வலது என பக்கவாட்டில் படிகள்.

இதன் முன்புறம் நிறைய தெருவோரக் கடைகள் வரிசை கட்டுகின்றன. அதனாலேயே பலருக்கும் சர்ச் இருப்பிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ‘Armenian 1712 church 1772’ என வரவேற்கும் தேவாலயத்துக்குள் நுழைந்தோம். கவனிப்பாளர் ஜூடு ஜான்சன் நம்மை வரவேற்றார்.

‘‘இந்த சர்ச்சை 1712ல் ஆர்மேனியர்கள் கட்டினாங்க. முழு கட்டுமானமும் 1772ல் முடிஞ்சது. அதான் இரண்டு வருஷமும் பொறிக்கப்பட்டிருக்கு. அவங்களுக்காக கட்டின கோயில் இது. அதனால, ஆர்மேனிய குடும்பங்களோட 350 கல்லறைகள் இங்க இருக்கு. இதை கொல்கத்தாவிலுள்ள ஆர்மேனியன் சர்ச் கமிட்டி நிர்வகிச்சிட்டு வர்றாங்க.

அவங்க எப்ப வர்றாங்களோ அன்னைக்கு சர்வீஸ் நடக்கும். தினமும் காலை 9.30 மணி முதல் 2.30 வரை திறந்திருக்கும்...’’ என சிறிய இன்ட்ரோ கொடுத்தவர் உள்ளே அழைத்துச் சென்றார். முதலில் வருகிறது மணிக்கூண்டு. இதில், ஆறு மணிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் லண்டனிலிருந்து வாங்கப்பட்டவை.

அதேபோல, ஒவ்வொன்றும் ஒரு ஒலியை எழுப்புகிறது. இதனை பர்மா தேக்கு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அடுத்து, ‘ஹருத்யுன் ஷ்மவோன்யான்’ கல்லறைக்குச் சென்றோம். 1750ல் பிறந்து 1824ல் மறைந்தவர். உலகின் முதல் ஆர்மேனிய பத்திரிகையான ‘அஸ்தரார்’ இதழைக்  கொண்டு வந்தவர். அதனால், ஆர்மேனிய ஜர்னலிசத்தின் ஃபாதர் எனக் கருதப்படுகிறார்.

தொடர்ந்து ‘கோஜா பெட்ரஸ் வோஸ்கன்’ என்பவரின் நினைவுக்கல். அருகே சென்றோம். ‘‘இவர்தான் செயின்ட் தாமஸ் மவுன்டிலுள்ள மலை படிகள அமைச்சவர். அதுபத்தி இந்தக் கல்லுல செதுக்கியிருக்காங்க...’’ சர்ச்சுக்குள் நுழைந்தோம். கையில் குழந்தையுடன் மாதாவின் படம். ‘‘மாதா இயேசுவை சொர்க்கத்திற்கு எடுத்துட்டு போற மாதிரி இருக்குற இந்தப் படத்தை வேறெங்குமே பார்க்க முடியாது.

மெழுகுவர்த்தி வைக்கிற ஸ்டாண்ட் எல்லாம் வெள்ளியில செஞ்சிருக்காங்க. அமர்ந்து பிரேயர் பண்ற இந்த பெஞ்சு பர்மா தேக்கு. முந்நூறு ஆண்டுகள் பழைமையானது...’’ என்கிறார் ஜூடு ஜான்சன்! தொடர்ந்து நாம் அங்கிருந்து சென்றது தலைமைச் செயலகத்தின் உள்ளிருக்கும் செயின்ட் மேரிஸ் சர்ச்! ஆங்கிலேயர்கள் கட்டிய, 337 ஆண்டுகள் பழமையான ஆலயம்.

ஆனால், இப்படியொரு சர்ச் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்த சர்ச்சில்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமைத் தளபதியாக விளங்கிய ராபர்ட் கிளைவ்வின் திருமணம் நடைபெற்றுது! நீண்ட பெரிய கோபுரம் வரவேற்கிறது. அனைத்தும் சலவைக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது.

சர்ச்சின் நீளம் மட்டும் 86 அடி. அகலம் 56 அடி. அப்போதே குண்டுகள் துளைக்காத வகையில் புல்லட் புரூஃபாக கட்டியிருக்கிறார்கள். சர்ச் உள்ளே மட்டும் பத்து கல்லறைகள். இதில், சென்னை கவர்னராக இருந்த சர் தாமஸ் மன்றோ கல்லறையும் ஒன்று. தவிர, வெளியேயும் உள்ளேயும் சிலரது நினைவைப் போற்றும் வகையில் நினைவுக்கற்களைச் செதுக்கியுள்ளனர்.

ஒவ்வொன்றையும் வாசிக்கும் போது அவர்கள் வாழ்ந்த காலத்திற்குள் செல்லும் உணர்வைத் தருகிறது. மார்பிளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் கலைநயத்தை அள்ளித் தெளிக்கின்றன. பழமையான ஆர்கன் இசைக்கருவி அருகே சென்றோம். இருபது யானைத் தந்தங்களை அடுக்கி வைத்தாற்போல இருக்கிறது.

காலிலும், கையிலும் வாசிக்கும்படியான இந்த இசைக்கருவி கணீரென ஒலியை எழுப்புகிறது. 1894 முதல் இருக்கிறதாம். பலிபீடத்தின் பின்னே உள்ள ‘கடைசி விருந்து’ ஓவியம் மிளிர்கிறது. இதை பிரிட்டிஷார் 1761ல் பாண்டிச்சேரியிலிருந்து வாங்கி வந்ததாக குறிப்புகள் சொல்கின்றன.

‘‘இங்க முக்கியமான விசேஷ நாள் நவம்பர் 11ம் தேதி நடக்குற ‘ஆர்மிஸ் டே’தான். இரண்டாம் உலகப்போர்ல இறந்தவங்களை நினைவு கூருவதற்காக நடத்தப்படுற தினம். இதுல சென்னையிலுள்ள எல்லா தூதரக அதிகாரிகளும் கலந்துப்பாங்க...’’ என்கிறார் கோயில் கவனிப்பாளர் இம்மானுவேல். அங்கிருந்து வெளியேறுகிறோம். பேரமைதியில் தவழ்கிறது மனம்.    


படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

-பேராச்சி கண்ணன்