ஹேண்ட்சம் திருடன்... செம க்யூட் திருடி!



சதுரங்க வேட்டை 2 கலாட்டா

‘‘‘எனக்குப் பிடிச்ச படம், ‘சதுரங்க வேட்டை’. இப்ப இரண்டாம் பாகத்தோட motion போஸ்டரை பார்த்தா, அதை விட இன்ட்ரஸ்ட்டிங்கா, விறுவிறுப்பா இருக்கும்னு தோணுது. படத்தை பார்க்கணும்னு ஆர்வமா இருக்கேன்’னு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் சொன்னார். படத்தோட டப்பிங் அப்ப, ஹீரோ அரவிந்த்சாமி ரொம்பவே ஹேப்பியாகிட்டார்.

‘என்னோட கேரியர்ல முக்கியமான படமா வந்திருக்கு நிர்மல் குமார்’ன்னார். த்ரிஷாவும் படத்தை பார்த்துட்டாங்க. அவங்களுக்கும் அவ்வளவு சந்தோஷம்...’’ எடிட்டிங் பரபரப்பிலும் உற்சாகமாக பேசுகிறார் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் இயக்குநரான என்.வி.நிர்மல்குமார். விஜய் ஆண்டனியை ‘சலீம்’ ஆக்கியவர் இவர்.

‘‘ஆக்‌ஷுவலா இந்த படத்தையும் ‘சதுரங்க வேட்டை’ வினோத்தே இயக்கியிருக்க வேண்டியது. கதை, ஸ்கிரிப்ட்னு எல்லாம் ரெடியா இருந்தது. ஆனா, அவர் கார்த்தி சாரோட ‘தீரன்’ல பிஸியாகிட்டார். அந்த டைம்லதான் மனோபாலா சாரை சந்திச்சேன். ‘உங்க ‘சலீம்’ பார்த்தேன். எனக்கு பிடிச்சிருந்தது. ‘சதுரங்க வேட்டை 2’ பண்றீங்களா’னு கேட்டார். ‘இருபது வருஷத்துக்குப் பிறகு ‘சலீம்’ மூலம் இயக்குநராகியிருக்கேன்.

இந்த சூழல்ல என் இரண்டாவது படமே இன்னொருத்தரோட ஸ்கிரிப்டா? வேண்டாம் சார்’னு சொன்னேன். அவர் சிரிச்சுட்டார். ‘உனக்கு முழு சுதந்திரம் தர்றேன். கதையை வலுப்படுத்த நீ என்ன வேணாலும் பண்ணலாம்’னு சொன்னார். அதுக்கு அப்புறம் ஸ்கிரிப்டை படிச்சுப் பார்த்தேன். சில மாற்றங்கள் பண்ணிட்டு, வினோத்கிட்ட பேசினேன். அவருக்கும் அந்த சேன்ஜஸ் பிடிச்சிருந்தது. ‘சதுரங்க வேட்டை 2’ ரெடியானது இப்படித்தான்...’’ புன்னகைக்கிறார் நிர்மல்குமார்.

ஃபர்ஸ்ட் பார்ட்டுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குதா?
இல்ல. ‘சதுரங்க வேட்டை’ல சின்னச் சின்ன ஊர்கள்ல நடக்கற ஐந்தாறு இன்ஸிடென்ட்ஸ் இருக்கும். இது அப்படியில்ல. மெட்ரோ சிட்டியான சென்னைல நடக்கற ஒரு ஹைடெக் இன்ஸிடென்ட். முதல் பாகத்துல வந்த காந்தி பாபு (நட்ராஜ்) கேரக்டரை இதுல அரவிந்த்சாமி சார் பண்றார்.

ஹைடெக்கான ஹேண்ட்சம் திருடன். பணம் இருக்கற இடத்துலதான் இருப்பார். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் கேரக்டர். ‘உனக்கு ஒரு விஷயம் தெரியுதுனா... நீ அதை மாத்த முயற்சி பண்ணாதே. அதை பயன்படுத்து!’ என்பதுதான் அவரோட பாலிஸி. படத்தோட லைனும் அதான்! அரவிந்த்சாமி மாதிரியே த்ரிஷாவும் ஒரு க்யூட் திருடி. சைக்காலஜி ஸ்டூடண்ட். அழகான ஒரு திருடனும், பேரழகியான ஒரு திருடியும் பண்ற தில்லாலங்கடிதான் படம்.

நாசர், ராதாரவி, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, மன், குமாரவேல், இயக்குநர்கள் இ.ராமதாஸ், மனோபாலா, எஸ்.எஸ்.ஸ்டேன்லி, ஆர்.என்.ஆர்.மனோகர்னு நிறைய ஸ்டார் காஸ்ட். இது தவிர முக்கியமான சீன்ல சஸ்பென்ஸ் எலிமென்ட்டா ரெண்டு ஸ்டார்ஸ் வரப் போறாங்க. இசை, அஷ்வமித்ரா. ‘காஞ்சனா 2’வில் ‘மொட... மொட...’ பாடல் பண்ணினவர்.

நான் இயக்கிய விளம்பரப் படங்களுக்கு இசையமைச்சிருக்கார். பாடல்களை அறிவுமதி, யுகபாரதி, கபிலன் வைரமுத்து, ரவி எழுதியிருக்காங்க. ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ், எடிட்டர் ராஜா சேதுபதினு டெக்னீஷியன்ஸ் எல்லாருமே முதல் பாகத்துல ஒர்க் பண்ணினவங்கதான். மனோபாலா சார் இயக்குநராக இருந்து தயாரிப்பாளரானவர். அதனால ஒரு தயாரிப்பாளராக படத்திற்கான விஷயங்களை சரியா பண்ணியிருக்கார்.

அரவிந்த்சாமி, த்ரிஷா கூட்டணி எப்படி?
அசத்தலா இருக்கும். ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரியும் பிரமாதமா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. பெரிய இயக்குநர்களோட ஒர்க் பண்ணினவர் அரவிந்த்சாமி சார். அவரைப் பொறுத்தவரை நான் புது இயக்குநர். ஆனாலும் ஃப்ரெண்ட்லியா பழகினார். நாளைக்கு சன்ரைஸ் சீன் இருக்குதுனு சொன்னா, அதிகாலையிலேயே ஸ்பாட்டுக்கு வந்து நிற்பார்.

போட்டோ ஷூட் அன்னிக்கே கேரக்டரை புரிஞ்சுக்கிட்டார். த்ரிஷா, இதுல ராதாரவி பொண்ணா நடிச்சிருக்காங்க. மரத்தை சுத்தி டூயட் பாடிட்டு, சும்மா வந்துட்டு போற கேரக்டர் கிடையாது. அதே மாதிரி நாசர் சார். நாம எதிர்பார்க்கறதை பிரமாதமா பண்ணினார். பிரகாஷ்ராஜ் சார் பத்தியும் சொல்லியாகணும். அவர் டைமுக்கு ஷூட்டிங்க்கு வரமாட்டார்னு சிலர் சொன்னாங்க.

ஆனா, அப்படியில்லை. எட்டு நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனா, ஆறே நாள்ல தன்னோட போர்ஷனை முடிச்சுக் கொடுத்தார். ஒரு நாள் அவர் ஆறேழு காஸ்ட்யூம் மாத்தி நடிக்கணும். ஸ்பாட்டுலேயே பட்பட்னு மாத்தி, ஒரே நாள்ல முழுவதும் நடிச்சு அசத்தினார். படத்துல ஆறேழு இயக்குநர்கள் நடிச்சிருக்காங்க. அத்தனை பேரையும் இயக்கினது நல்ல அனுபவம். 

ஒரு பர்சனல் கேள்வி. தோத்தாத்ரி... நிர்மல்குமார் ஆனது எப்படி?
முதலாளி விஜய் ஆண்டனிதான் காரணம். ‘சலீம்’ படத்துக்கு முன்னாடி என் நண்பர் மூலம் அவரைச் சந்திச்சு அந்தக் கதையைச் சொன்னேன். அப்ப அவர் என்னைப் பார்த்ததும் ஷாக் ஆனார். ‘நீங்க சினிமாவுல இருபது வருஷமா இருக்கீங்கனு சொன்னாங்க. உங்க பெயர் தோத்தாத்ரினு உங்க நண்பர் சொன்னதும் ரொம்ப பழைய ஆளு... நமக்கு செட் ஆகமாட்டார்’னு நினைச்சிருந்தேன்.

ஆனா, மாடர்னா யோசிச்சு வச்சிருக்கீங்க. உங்க பெயரை மாத்துங்க’ன்னார். அப்படித்தான் நான் நிர்மல் குமார் ஆனேன். ‘சதுரங்க வேட்டை 2’க்குப் பிறகு இன்னொரு பெரிய ஹீரோ படம் பண்ணப் போறேன். விஜய் சார் நடிச்ச  ‘பிரியமானவளே’, அஜித் சார் நடிச்ச ‘வீரம்’ படங்களுக்கு கதை எழுதின பூபதி ராஜாவோட சேர்ந்து அந்தக் கதையை எழுதியிருக்கேன்.

என்ன சொல்றாங்க உங்க குருநாதர்கள் எஸ்.ஏ.சி.யும், பாரதிராஜாவும்..?
எஸ்.ஏ.சந்திரசேகர் சார்கிட்ட ‘ரசிகன்’ல இருந்து மூணு படங்கள் ஒர்க் பண்ணினேன். அவரோட வீட்லயே ‘சலீம்’ ஷூட்டிங் நடந்தது பர்சனலா எனக்கு ரொம்பவே சந்தோஷம். பாரதிராஜா சார் சமீபத்தில் இதோட மோஷன் போஸ்டரைப் பார்த்துட்டு ஆச்சரியப்பட்டார். ‘ஐயம் ப்ரவ்டு ஆஃப் யூடா’னு சொல்லிட்டு ‘நீ சூதானமா பண்ணு. காம்ப்ரமைஸ் ஆகாத. எதையும் விஷுவலாவே கொடுக்க முயற்சி பண்ணு’னு ஆசீர்வதிச்சார்!

-மை.பாரதிராஜா