கழிப்பறை கட்டில்! 3வது மட்டுமே படித்தவரின் பலே கண்டுபிடிப்பு



முதியவர்கள், உடல்நலமில்லாதவர்களின் முக்கிய பிரச்னை படுக்கையிலேயே இயற்கை உபாதைகளைக் கழிப்பது. என்னதான் பிள்ளைகளானாலும், உடன் பிறப்பானாலும், மனைவியானாலும், தாயானாலும், அவர்கள் முகம் சுழிக்காமல் பார்த்துக்கொண்டாலும், படுக்கையிலேயே இயற்கை அழைப்புகளை கவனித்து அதை சுத்தம் செய்வது என்பது கவனித்துக்கொள்பவருக்கு மட்டுமல்ல, படுக்கையில் இருப்பவருக்கும் சங்கடமான விஷயம்.

இதற்கு தீர்வாக தென்காசியைச் சேர்ந்த வெல்டர் சரவணமுத்து கழிப்பறை கட்டில் ஒன்றை உருவாக்கி உள்ளார்! இதை யாருடைய உதவியுமின்றி படுக்கையில் இருப்பவரே பயன்படுத்தலாம். மட்டுமல்ல. தண்ணீர் குழாய்களுடன் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிலில் படுத்த நிலையிலேயே சுத்தமும் செய்து கொள்ளலாம்.

“பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தென்காசிலதான். அப்பா சண்முகம், ஆட்டோ மெக்கானிக். நானும் காருக்கெல்லாம் டிங்கரிங் பார்த்திருக்கேன். படிச்சது மூணாவது வரைதான். அதுக்காக இப்படியே காலத்தை ஓட்டிடலாம்னு நினைக்கலை. சொந்தமா ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அப்படி ஆரம்பிச்சதுதான் வெல்டிங்.

இன்ஜினியரிங் படிக்கிற பசங்க புராஜெக்ட் செய்யணும்னு வருவாங்க. அவங்க ஐடியாக்களுக்கு தகுந்தா மாதிரி எலெக்ட்ரிக் வேலைகள் செய்து கொடுப்பேன். அப்படி செஞ்சதுல நிறைய பரிசுகள் வாங்கியிருக்கு. ‘இதே மாதிரி நாம பரிசு வாங்க முடியாதா’னு நண்பர்கள்கிட்ட கேட்டேன். ‘உனக்கு படிப்பறிவே இல்லை.

உனக்கெதுக்கு இந்த ஆசை’னு கிண்டல் செஞ்சாங்க...’’ என்று சிரிக்கும் சரவணமுத்து அந்த கிண்டலையே சவாலாக ஏற்றிருக்கிறார். ‘‘இந்த நேரத்துல என் மனைவி யூட்ரெஸ் ஆபரேஷன் செஞ்சு 20 நாள்கள் படுக்கைலயே இருந்தாங்க. என் மாமியார்தான் அவங்களை பார்த்துகிட்டாங்க. அப்ப இரண்டு பேருமே கஷ்டமும் வருத்தமும் பட்டதை கண்ணால பார்த்தேன்.

அப்பதான் வயசானவங்களும், உடல்நிலை சரியில்லாதவங்களும் எந்தளவுக்கு சங்கடத்தை அனுபவிப்பாங்கனு தோணுச்சு. இதுக்கு நம்மால ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிச்சு உருவாக்கினது தான் இந்தக் கழிப்பறை கட்டில். என்கிட்ட இருந்த பொருட்களை வைச்சு இதை உருவாக்கினேன். இதைப் பார்த்துட்டு சென்னையைச் சேர்ந்த குருமூர்த்தி, தன் அம்மாவுக்காக இன்னும் கொஞ்சம் வசதி களோட செய்து தரச் சொன்னார். அதுமாதிரியே செஞ்சு முடிச்சதும் நம்பிக்கை வந்தது.

இது பார்க்க சாதாரண கட்டில் மாதிரிதான் இருக்கும். ஒரு சின்ன ஸ்விட்ச் போர்டு இணைச்சிருப்பேன். அதுல டவுன் பட்டனை அழுத்தினா கட்டிலுக்கு நடுவுல கழிப்பறை வடிவ கதவு திறக்கும். அதுலயே குழாய்கள் இணைச்சிருப்பேன். ஃபோர்ஸா தண்ணீரும் வரும். பயன்படுத்திட்டு க்ளோஸ் பட்டனை அழுத்தினா நேரடியா கழிவுகள் கழிப்பறைக்கு போயிடும்.

டியூப்பை மட்டும் எங்க, எப்படின்னு நாம சரியா பொருத்திக்கணும். ஸ்விட்ச் பாக்ஸ் கூட மூணு மீட்டர் நீளம் உடையதா, கட்டில சுத்தி எங்க வேணும்னாலும் கொண்டு போற மாதிரி இருக்கும். அதுல ஒரு சின்ன ஷவர் கூட இருக்கு. பயன்படுத்திட்டு சுத்தமும் செய்துக்கலாம். இந்தக் கட்டில் மட்டும் இல்ல;

கரண்ட் போனாலும் எழுதற மாதிரி லைட் பேனா, சாக்கடை சுத்தம் செய்யற மக்களுக்காக காற்ற சுத்தம் செய்து ஃபில்டர் பண்ணி சுவாசிக்கக் கூடிய மாஸ்க்... இதையெல்லாம் செய்திருக்கேன். இந்த மாஸ்க்கை வண்டில போறவங்க கூட பயன்படுத்தலாம். தேங்காய் உரிக்க, துருவ... இப்படி எல்லாத்துக்கும் மெஷின் செய்திருக்கேன்.

ஆனா, எங்க, எப்படி பதிவு செய்து பேடன்ட் ரைட்ஸ் வாங்கணும்னு தெரியாததால எல்லாமே மாடல் அளவுலதான் இருக்கு. வேற சில ஐடியா கூட இருக்கு. என்ன பயன்? வசதி இல்லை. உதவி கிடைச்சா நல்லா இருக்கும்...’’ ஏக்கமாகச் சொல்கிறார் இந்த படிக்காத மேதை.

-ஷாலினி நியூட்டன்