பறவைத் தாக்குதலால் இந்திய விமான விபத்துக்கள் அதிகரிக்கின்றன!



‘பறவையைக் கண்டான்... விமானம் படைத்தான்...’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் பிரபலம். ஆனால், அந்தப் பறவையே விமானத்துக்கு ஆப்பு வைத்தால் எப்படி இருக்கும்?

ஆம். அகமதாபாத் விமான விபத்துக்குக் காரணம் பறவைகள், விலங்குகளாக இருக்கலாம் எனும் கோணத்திலும் இந்திய, வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருக்கிறார்கள். 
அதிலும் அண்மைய காலத்தில் அகமதாபாத் விமான தளத்தில் பறவைகள், விலங்குகளின் தாக்குதல் முன்பு இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாகவும் அரசு அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகிறது.

2023ம் ஆண்டு ஒன்றிய அரசின் பொது விமானப் போக்குவரத்துத்  துறை சார்பில் (சிவில் ஏவியேஷன்) நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் விதத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

அதில் 2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டுவரை இந்தியாவிலும், மாநில அளவிலும் இந்தத் தாக்குதல்கள் எப்படி இருந்தன என ஒரு கணக்கு சொல்கிறது. இந்திய அளவில் 2019ல் வெறும் 535 தாக்குதலாக இருந்தது, 2023ல் 1123 ஆக உயர்ந்ததாகவும், 2019ல் ஒருநாளுக்கு 1.5 தாக்குதல் என்றால், 2023ல் ஒருநாளைக்கு 3 தாக்குலாக இரட்டிப்பாக உயர்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.

மாநிலங்களில் இந்தப் பறவை மற்றும் விலங்குகளின் தாக்குதல்கள் எப்படி இருந்தன?

அதன்படி முதல் இடத்தில் தில்லியும் (609 தாக்குதல்), இரண்டாம் இடத்தில் மும்பையும் (295 தாக்குதல்), மூன்றாம் இடத்தில் அகமதாபாத்தும் (266), ஏழாம் இடத்தில் கொல்கத்தாவும் (154) இருந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருந்தது. 

ஆனால், 2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கான அண்மைய அறிக்கை ஒன்று அகமதாபாத் மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கான இரண்டு வருட அறிக்கையில் 2022ம் ஆண்டு மட்டும் சுமார் 39 தாக்குதலும், 2023ல் 81 தாக்குதலும் நடைபெற்று அகமதாபாத்தை முதலிடத்தில் கொண்டு வந்திருக்கும் சோகத்தை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

முதல் அறிக்கையில் ஏழாம் இடத்தில் இருந்த கொல்கத்தா இந்த இரண்டாம் அறிக்கையில் 2022ம் ஆண்டில் மட்டும் சுமார் 31 தாக்குதலும், 2023ம் ஆண்டில் 45 தாக்குதலும் அடைந்து மிக முன்னேறி வருவதாகவும் சொல்கிறது.

பொதுவிமானப் போக்குவரத்தின் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்படும் ஒரு விஷயம் பொதுவாக ஒரு பறவை அல்லது விலங்கு தாக்குதல் என்பது ஒரு விமானம் புறப்படும் தருவாயிலும் அல்லது தரையிறங்கும்போதும்தான் அதிகமாக நடைபெறுகிறது. பறவைகளோடு வெளவால், நாய்கள் மற்றும் பன்றி போன்ற விலங்குகளாலும் இந்தத் தாக்குதல்கள் நடைபெறலாமாம்.

இதை எல்லாம் கட்டுப்படுத்த விமான சேவையில் ‘ஸ்டேண்டர்ட் ஆபரேட்டிங் ப்ரொசீஜர்’ எனும் ஒரு முறை உண்டு. அதாவது, ஒரு விமானம் புறப்படும் முன் என்னவெல்லாம் சேவையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற ஒரு வழிகாட்டி முறை இது. அதாவது ஒரு விமான நிலையத்தைச் சுற்றிய ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு புற்களோ, குப்பையோ, கழிவுகளோ, விலங்குகளோ நடமாடுவதை விமான ஊழியர்கள் தடுக்கவேண்டும்.

உதாரணமாக பறவை, விலங்குகள் அந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வராதபடி வெடி வைத்தோ அல்லது விரட்டிப் பிடித்தோ விமானப் பாதைகளை சீர்படுத்தவேண்டும்.
ஆனால், இது எல்லாம் காகிதத்தில்தான் இருக்கிறதே தவிர செயற்பாட்டில் இல்லை எனச் சொல்கிறார்கள் விமானப்பயணம் தொடர்பான ஆர்வலர்கள். 

இதோடு இந்தியாவில் விமான நிலையங்களை ஒட்டி பல கடைத் தெருக்கள் முளைத்திருப்பதால் குப்பைகளும் சேர்வதால் பறவைகள் மற்றும் விலங்குகள் இந்தப் பகுதிகளில் சுலபமாக நடமாடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

உதாரணமாக 2023ம் ஆண்டு 7ம் இடத்தில் இருந்த கொல்கத்தா, இப்போது இரண்டாம் இடத்துக்கு பறவைத் தாக்குதலில் முன்னுக்கு வந்திருப்பது இந்த மீறல்களால்தான் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் ஆர்வலர்கள். ஒரு விமானத்தின் பாதுகாப்புக் கருதி இந்திய விமானத் துறையில் பல்வேறு பாதுகாப்பு விதிகள் இருந்தாலும் அது எல்லாம் தண்ணீரில் எழுதப்பட்ட
வாசகங்களாகவே இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள் விமானப் பிரியர்கள்.

-டி.ரஞ்சித்