உலகின் முதல் விண்வெளி ஹோட்டல்!
கடந்த அறுபது வருடங்களில் விண்வெளியில் நிகழ்ந்த முக்கியமான சாதனைகளில் ‘உலகின் முதல் விண்வெளி ஹோட்டல்’ ஒன்றாக இருக்கும் என்று புகழ்கின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் நிறுவனமான ‘ஏபவ் ஸ்பேஸ்’தான் விண்வெளி ஹோட்டலை கட்டப்போகிறது. இந்த ஹோட்டலுக்கு ‘வாயேஜர் ஸ்டேஷன்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். சில பில்லியன் டாலர்கள் செலவில், 1.25 லட்ச சதுர அடி பரப்பளவில் அமையப்போகிறது இந்த ஹோட்டல்.

ராட்சத சக்கரம் போல சுழலும் முறையில் இந்த ஹோட்டலை வடிவமைக்கவிருக்கின்றனர். அப்படிச் சுழலும்போது இந்த ஹோட்டல் செயற்கையாக புவியீர்ப்பு விசையை உருவாக்கிக் கொள்ளும். இது விருந்தினர்களுக்குப் பூமியில் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும் என்கின்றனர். அதே நேரத்தில் விண்வெளி அனுபவமும் குறையாது என்பது இதன் சிறப்பு. விருந்தினர்கள், ஊழியர்கள் என அதிகபட்சமாக 400 பேர் வரை இந்த ஹோட்டலில் தங்க முடியும். அதாவது, ஹோட்டலில் வேலைக்காக 112 பேரை நியமிக்கப்போகின்றனர். அதனால் அதிகபட்சமாக 288 விருந்தினர்கள் வரைதான் தங்க முடியும்.
பூமியில் இருக்கும் சொகுசு நட்சத்திர ஹோட்டல்களைப் போலவே மது விடுதி, உணவகம், உடற்பயிற்சிக் கூடம், கூடைப்பந்து மைதானம் என சகல வசதிகளும் இதில் இருக்கின்றன.
இந்த ஹோட்டலில் மூன்றரை நாட்கள் தங்குவதற்கு சுமார் 44 கோடி ரூபாய் கட்டணம். விண்வெளிக்குச் செல்லும் போக்குவரத்துக் கட்டணம் தனி.
பூமியிலிருந்து இந்த ஹோட்டலுக்குச் செல்வதற்காக ஸ்டார்ஷிப்பை பிரத்யேகமாக வடிவமைக்கிறது ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம். விண்வெளி சுற்றுலாவில் தீவிர ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறது, ‘ஸ்பேஸ்எக்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டலில் தங்குவதற்கான கட்டணத்தைவிட, போக்குவரத்துக் கட்டணம் அதிகமாக இருக்கும் என்கின்றனர். இந்த ஹோட்டலின் கட்டுமானப் பணிகள் 2026ல்தான் ஆரம்பிக்கப்போகிறது. இப்போது டிசைன் வேலைகள் முடிந்துவிட்டன. கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, ஹோட்டலின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் நடக்கும். பிறகு 2027ல் மக்களின் பயன்பாட்டுக்கு வரும், ‘வாயேஜர் ஸ்டேஷன்’.
உலகின் நம்பர் ஒன் உணவகம்!
உலகம் முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமான உணவகங்கள் இருப்பதாக கணக்கெடுப்புகள் சொல்கின்றன. இதில் பத்து சதவீத உணவகங்கள் மட்டுமே சிறப்பான, தரமான உணவையும் தருகின்றன என்கின்றனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள முக்கியமான உணவகங்களை ஆய்வு செய்தும், வாடிக்கையாளர்களிடம் கருத்துகளைக் கேட்டும் தலைசிறந்த 50 உணவகங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஓர் ஆய்வு நிறுவனம். இதில் ‘மைடோ’ என்ற உணவகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெருவில் உள்ள பெரிய நகரம் மற்றும் அந்நாட்டின் தலைநகரமான லிமாவில் அமைந்திருக்கிறது, ‘மைடோ’.
இந்த ஹோட்டலில் பெருவைச் சேர்ந்த மூலப்பொருட்களுடன் ஜப்பானிய பாணியில் சமைக்கப்படும் உணவுகள் வெகு பிரபலமானவை. பெருவிற்கு வருகை தரும் பல சுற்றுலாப் பயணிகளின் விருப்ப இடமாக மாறியிருக்கிறது, ‘மைடோ’.
மட்டுமல்ல, பெருமக்களுக்குப் பிடித்தமான உணவகமும் இதுவே. உலகப் புகழ்பெற்ற சமையல் கலைஞரான மிட்சுஹாரு ‘மிச்சா’ சுமுரா என்பரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஹோட்டல். இங்கே 10 கோர்ஸ் உணவு வகைகளின் சுவை அள்ளும் என்கின்றனர் இதன் வாடிக்கையாளர்கள்.
கடந்த வருடம் உலகின் தலைசிறந்த உணவகங்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருந்தது, ‘மைடோ’. இந்த வருடம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐம்பது இடங்களைப் பிடித்த உணவகங்களின் முதலாளிகளை இத்தாலிக்கு அழைத்து பாராட்டு விழாவை நடத்தியிருக்கின்றனர்.
இரண்டாம் இடத்தை ஸ்பெயினில் உள்ள ‘அசடோர் எக்ஸ்பாரி’ என்ற உணவகம் பிடித்திருக்கிறது. ஐரோப்பாவிலேயே சிறந்த உணவகம் இதுதான். மூன்றாம் இடத்தை மெக்சிகோவில் உள்ள ‘குயிண்டோனில்’ என்ற உணவகம் பிடித்துள்ளது. வட அமெரிக்காவிலேயே சிறந்த உணவகம் இதுதான்.
பாங்காக்கில் உள்ள ‘காக்கன்’ என்ற உணவகம், ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசியாவிலேயே சிறந்த உணவகம் இதுதான். பாரிஸ், நியூயார்க், லண்டன், டோக்கியோ, சியோல், மூனிச் போன்ற நகரங்களில் உள்ள உணவகங்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
ஆனால், இந்தியாவைச் சேர்ந்த உணவங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்பதும்,10 உணவகங்கள் முதல் முறையாக தலைசிறந்த 50 உணவகங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: த.சக்திவேல்
|