கீழடி... தமிழர் தாய்மடி!
கீழடி பற்றிய எனது நேர்காணலை ஆங்கில ஊடகத்தில் படித்த எனது டில்லி நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். கீழடி என்றால் என்ன? அங்கே என்ன பிரச்னை? என்று கேட்டார். அவருக்குப் புரியும் வகையில் இயன்றவரை எளிமையாக விளக்கினேன்.  எங்கும் கீழடி என்பதே பேச்சு! ‘கீழடி தமிழர் தாய்மடி’ எனும் முழக்கம் வரலாற்று மீட்டுருவாக்கத்திற்கான ஓர் உருவகம் போல ஒலிக்கிறது! 
ஏனெனில் வரலாறு என்பது முக்கியமானது மட்டுமல்ல; தவிர்க்கமுடியாதது. வரலாற்றிலிருந்து நாம் தப்பித்து ஓடிவிடவும் முடியாது. வரலாறு நாம் நடந்து கடந்து வாழ்ந்து வளர்ந்த தடங்களின் சுவடு. அதைத் தரவுகள் சார்ந்துதான் கட்டமைக்க வேண்டும் என்பதுதான் அறிவுசார்ந்த சமூகங்களின் எதிர்பார்ப்பாக இருக்கமுடியும்.  தரவுகளால் வரலாற்றைக் கட்டமைக்காவிட்டால் கட்டுக்கதைகள் நம்மீது வரலாறு என்ற போர்வையில் கட்டமைத்து விடப்படும். இந்த அபாயத்திற்கு எதிரான குரல்தான் கீழடியில் ஒலிக்கிறது என்று அந்த நண்பரிடம் விளக்கினேன்.  கீழடி ஏன் முக்கியமானது? கீழடியில் அப்படி என்ன தடயங்கள் கிடைத்திருக்கின்றன? கீழடி பற்றிய அறிக்கை வெளிவரத் தாமதம் ஏன்? இந்தச் சிக்கலை எப்படி அணுகுவது?
1924ம் ஆண்டு வரை இந்தியத் துணைக்கண்டத்தின் கடந்த காலம் பற்றிய புரிதல்கள் வேதங்களில் தொடங்கி புராண இதிகாசங்களால் கட்டமைக்கப்பட்டன.  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிகளின் விளைவாக புதிய உண்மைகள் வெளிப்பட்டன. திராவிட மொழிக் குடும்பம் என்ற புதிய முன்மொழிவு வியப்பளித்தது. அச்சுக்கலையின் உதவியால் சங்க இலக்கியங்கள், தொல்காப்பிய இலக்கணம், திருக்குறள், இரட்டைக்காப்பியங்கள் போன்றவை பொதுவெளிக்கு வந்தன. அசோகர் என்ற ஒரு பேரரசர் இந்தியாவில் வாழ்ந்தது கூடத் தெரியாமல் வாழ்ந்திருந்த இந்தியர்களுக்கு 1924ம் ஆண்டு சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பு பற்றி சர் ஜான் மார்ஷல் வெளியிட்ட அறிக்கை ஒரு மாபெரும் அதிர்ச்சி வைத்தியம். வரலாற்றுக்கு முற்பட்ட கடந்த காலம் பற்றிய புரிதல்களை அது புரட்டிப்போட்டது. கீழடி உலகுக்குச் சொல்லும் புதிய தரவுகளும் ஒருவகையில் அப்படித்தான்.
சிந்துவெளி நகர்மயப் பண்பாடு நலிவடைந்த பின்னால் இரண்டாம் நகர்மயமாக்கல் கங்கைச் சமவெளியில்தான் தோன்றியது; அதற்குப் பின்னால்தான் தென்னிந்தியாவிற்கு பரவியது என்ற கருத்தியலை கேள்விக்குள்ளாக்குகிறது கீழடி.
மதுரை நகரம் பழங்காலத்திலிருந்தே தமிழ் மொழி, பண்பாட்டு அரசியல் களத்தில் தொடர்ந்து இயங்கும் நகரம். ‘தமிழ் வையை தண்ணம்புனல்’ என்று சங்க இலக்கியமே போற்றிய நதி வைகை நதி.
மதுரை நகருக்கு அருகே வைகை நதி சார்ந்த நிலப்பகுதியில் கீழடியில் ஒரு நகர வாழ்வியலுக்கான அகழாய்வுத்தடயம் கிடைத்திருக்கிறது. இது மிகவும் முக்கியமான சான்றாதாரம். இதைப் புறக்கணித்து கடந்து செல்லமுடியாது.
கீழடியில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 172 பானை ஓடுகள் (9வது கட்ட அகழாய்வு வரை) கிடைத்துள்ளன. அமெரிக்காவில் புளோரிடாவிலுள்ள பீட்டா நிறுவனத்தின் மூலம் கரிமக் காலக்கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொல்லியல்துறை பெற்றுள்ள 29 காலக்கணக்கீடுகளில் 12 காலக்கணக்கீடுகள் அசோகர் காலத்திற்கு (கி.மு 268க்கு முன்பு) முற்பட்டவை. கீழடி வாழ்விடத்தில் கி.மு 6ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 2ம் நூற்றாண்டு வரை மக்கள் வசித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் எழுத்தறிவு, கல்விப் பரவலாக்கம் குறித்த மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்தை கீழடி உருவாக்கி இருக்கிறது.
சங்க இலக்கியத்தின் நம்பகத்தன்மையை கீழடி அகழாய்வுகள் உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. கீழடியில் கிடைத்துள்ள கட்டுமானங்கள், உறைக்கிணறுகள், வடிகால்கள், அரிதான ஆபரணக்கற்கள், அணிகலன்கள், நெசவுத்தொழில் மற்றும் சங்கு வளையல் செய்தல், பகடை விளையாட்டு ஆகிய அனைத்தையும் சங்க இலக்கியம் மிகவும் துல்லியமாகப் பேசுகிறது.
ஓர் அகழாய்வுத்தலமும், அதே மண்ணில் எழுதப்பட்ட, தொகுக்கப்பட்ட ஒரு தொல்செவ்வியல் இலக்கியமும் ஒன்றை ஒன்று நிறுவும் இத்தகைய அதிசயத்திற்கு இன்னொரு உதாரணம் இந்தியாவில் இல்லை.
அதனால்தான் கீழடியை இன்னும் முழுவதுமாக தோண்டப்படாத சங்க இலக்கியம் என்றும், சங்க இலக்கியத்தை இன்னும் முழுவதுமாக வாசிக்கப்படாத கீழடி என்றும் பெருமிதத்துடன் பேசி வருகிறேன்.
கீழடியில் பல மனித உருவ பொம்மைகள், விலங்குகளின் உருவங்கள் கிடைத்தாலும் அங்கு வசித்த மக்களின் வாழ்வியலில் சமயம் ஒரு மையமான இடத்தைப் பெற்றிருக்கவில்லை என்ற அகழாய்வுப் புரிதல் புதிய வெளிச்சத்தைத் தருகிறது.
பல்வேறு தொழில்கள், பொருளீட்டுதல், வேளாண்மை உபரி, கால்நடை வளர்ப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம், பகடை விளையாட்டு, பொழுதுபோக்கு என்று இயங்கிய சங்க காலச் சமூகம் அடிப்படையில் பொருள்முதல்வாத இயங்கியலுக்கு சான்றளிக்கும் ஓர் எதார்த்தமான நடைமுறை சார்ந்த சமூகம் என்பதை கீழடி நிறுவுகிறது.
இவையெல்லாம் அறிவியல் தரவுகளோடு புதிய செய்திகள்தானே... இதை எதை எதற்காக மறுக்கவேண்டும்; அறிக்கைகளை ஏன் தாமதப்படுத்த வேண்டும் என்ற கேள்விகள் எழுவது நியாயம்தான்.
கீழடியில் இந்திய தொல்லியல் நிறுவனத்தின் சார்பில் முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளை செய்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணா (2014 - 15; 2015 - 16). அவர் அசாமுக்கு இடம் மாற்றப்பட்டார். அதற்கு அடுத்து அதே நிறுவனத்தின் சார்பில் தோண்டிய வேறொரு அகழாய்வாளர் ‘கீழடியில் அப்படி எல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை’ என்ற தொனியில்தான் பேசினார்.
கீழடி அகழாய்வை அத்தோடு ‘ஊத்தி மூடிவிடுவார்கள்’ என்ற அச்சத்தின் பின்னணியில் ஒரு பொதுநல வழக்கின் மூலமாகவே உயர்நீதி மன்றம் தலையிட்டு தொடர்ந்து தோண்ட ஆணையிட்டது. அதனடிப்படையில்தான் 4வது கட்டம் முதல் 10வது கட்டம் வரை தமிழ்நாடு தொல்லியல் துறை சளைக்காமல் அகழாய்வு செய்து சாதனை புரிந்துள்ளது.
சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டை ஒரு பன்னாட்டு அறிவுத் திருவிழாவாகக் கொண்டாடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு. சர் ஜான் மார்ஷலுக்கு முழு உருவச்சிலை எழுப்பப்பட்டுள்ள ஒரே இடம் சென்னை.
சிந்துவெளிக் குறியீடுகளுக்கும் தமிழ்நாட்டு பானைக்கீறல்களுக்கும் இடையிலான உருவ ஒற்றுமையை ஆவணப்படுத்தும் ஒரு நூலையும்; தமிழ் மண்ணில் இரும்பின் தொன்மை குறித்த அறிவியல் தரவுகளுடன் கூடிய ஓர் ஆவணத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய முன்னெடுப்புகளின் மூலம் இந்தியத் துணைக்கண்ட நாகரிகத்திற்கான உரிமைகோரலில் தமிழ்நாடு ஒரு மிகமுக்கியமான உரையாடலைத் துவக்கி வைத்திருக்கிறது. கீழடி அறிக்கை ஏன் தாமதமாகிறது என்ற கேள்விக்கான விடையும் இதில் அடங்கியுள்ளது. இதில் நான் தமிழ்நாடு தொல்லியல் துறை சான்றுகளைத்தான் பேசியிருக்கிறேன்.
அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கையை தொல்லியல் துறையின் மாற்றுக் கருத்துகளையும் இணைத்து ஆய்வாளர்களின் பொதுவெளியின் பார்வைக்கு மேலும் தாமதமின்றி வெளியிடவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. கீழடியில் ஆயிரக்கணக்கானோர் கண்டு மகிழும் அருங்காட்சியகம் தமிழ் மக்களின் விழிப்புணர்வின் காட்சிப்படிமமான குறியீடு.
கீழடி அகழாய்வில் ‘ஆதன்’ என்று தமிழியில் எழுதிய பானைத்தடயம் வெளிப்பட்ட பின்னால் உலகத்தமிழர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு ஆதன் என்று பெயர் வைத்துள்ளனர்.
இதுதான் கீழடியின் ஆகச்சிறந்த ஆக்கபூர்வமான தாக்கம். இதனால்தான் தமிழ் தோற்றத் தொன்மையோடு மட்டுமின்றி தொடரும் இளமையோடும் இன்னும் இயங்குகிறது.
- ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (ஓய்வு), சிந்து சமவெளி ஆய்வாளர்
|