சிறுகதை - ஒமேகாவின் இறுதி அழைப்பு



அனுசுயா, அந்த இடத்தை அடையும்பொழுது விமானம் விழுந்து நொறுங்கி 2 மணி நேரம் ஆகியிருந்தது.இன்னமும் கூட மீட்பு நடவடிக்கைகள் முடிந்த பாடில்லை. சுய இயக்க விமான ஒழுங்குமுறை கவுன்சிலில் பணியாற்றும் விஞ்ஞானியான அனுசுயாவால் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை.
சென்னையில் இருந்து துபாய்க்கு பறந்த குறைந்த கட்டண விமானம். ரயிலில் போவதை விட மலிவு என்ற மானசீக திருப்தியோடு அனுசுயா குழு உருவாக்கிய கனவு சிதைந்து போய் சிதறிக் கிடக்கிறது, 152 பயணிகளுடன் சென்ற விமானம்.

2025 அகமதாபாத் விபத்து மாதிரி ஒரே ஒருவர் தப்பிய அதிசயம் கூட இப்போது நடக்கவில்லை என்று பத்திரிகைகள் உடனே எழுதுகின்றன. அதை அனுசுயா நம்பவில்லை. அகமதாபாத் விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து நான்காண்டுகள் ஓடிவிட்டன.. 2003ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் விண்வெளி படை சம்பந்தப்பட்ட விபத்திற்குப் பிறகு விமானம் தொடர்பான நவீன விஞ்ஞானத்தின் தலையீட்டால் விபத்துகள் பெரும்பாலும் தடுக்கப்பட்டன.

9/11 சம்பவங்களின் மூலம் விமானங்களைக் கொண்டு கட்டடத்தின் மீது ஏவி 2700 பேரை உயிரிழக்கச் செய்த சம்பவம்... கொடூர விமான கொலை விபத்தாக... பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அப்படிப்பட்ட வரிசையில் தாங்கள் தயாரித்த உள்நாட்டு விமானம் சிதைந்து இடம்பெறும் என்று அனுசுயா ஒருபோதும் கருதவில்லை.

தாங்கள் தயாரித்த முதல் விமானத்தோடு அதை ஓட்டிக்கொண்டு செல்லும் பெண் பைலட் கதீஜாவை அனுசுயா கைகுலுக்கி அனுப்பி வைத்து 2 மணி நேரம் கூட இன்னும் ஆகவில்லை... என்ன ஒரு துயரம்.

புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுதி விமானமும் கஜகஸ்தான் விமானமும் நேரடியாக வானில் மோதிக்கொண்ட கோர விபத்தில் 1996ம் ஆண்டு 349 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா சம்பந்தப்பட்ட விமான விபத்துகள் குறித்து தனியே ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற அனுசுயா மனதில் ஏதேதோ ஓடிக்கொண்டிருந்தது.

என்றாலும் தங்களது விமானம் வெடித்துச் சிதறிய அந்த இடத்தில் தீவிரமாக, தானே நேரில் சென்று சிதிலங்களுக்கு இடையே தன் புதிய பரிசோதனைக்கு வெற்றி கிடைத்ததா என்பதை அறிய அனுசுயா துடித்தாள்.

ஒமேகா எனும் கனவு திட்டத்தை முன்மொழிந்து முழுக்க முழுக்க பெண்களே தயாரித்த அந்த விமானம் பற்றிய வரலாறு விரைவில் மறக்கப்படும். எப்போதும் ஆல்ஃபா மனிதன் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறான். பெண் என்றால் அவ்வளவு இளக்காரம். அதற்குள் பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் எப்படி எல்லாம் கேவலமாக தங்கள் வெறியைத் தீர்த்துக்கொண்டுவிட்டார்கள்.

எவ்வளவு பெரிய போராட்டத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது... விமானத்தின் உதிரிப் பாகங்களை தயாரிக்கும் 17 வெவ்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்து அந்த உதிரிப் பாகங்களைக்கூட பெண்களே தயாரிக்கும் அம்சத்தைப் பிடிவாதமாக அனுசுயா ஏற்படுத்தியிருந்தாள்.

எங்கே தவறு நடந்திருக்கும்... ஏன் இப்படி ஆனது... இந்தியாவின் மூன்றாவது பெண் ஜனாதிபதி கொடியசைத்து புது தில்லியில் உற்சாகத்தோடு வழியனுப்பிய விமானம் அடுத்த அரை மணி நேரத்தில் தரையில் சிதறிக் கிடக்கிறது என்றால் உலக நாடுகள் சிரிக்காதா...பெண் விமானம் விழுந்து நொறுங்கியது என்று தலைப்பிட்டு செய்திகள் பகிரப்படுவதை மேலும் ஆத்திரத்தோடு கவனித்துக் கொண்டிருந்தாள் அவள். இறுதியாக விமானி கதீஜா கொடுத்திருந்த தகவல் ‘மே... டே மே... டே மே... டே...’ அவ்வளவுதான்.

வானூர்தி போக்குவரத்தில் ஒருபோதும் கேட்கக் கூடாத வார்த்தை ‘மே டே...’ விமான கட்டுப்பாட்டு அறை இப்படிச் சொல்லி கேள்விப் பட்டால் அங்கிருப்பவர்கள் அனைவரும் ஏறக்குறைய மயக்கமாகி விடுவார்கள். ஃப்ரான்ஸ் நாட்டில் மேடர் என்கிற சொல்லிலிருந்து வந்த உருவாக்கம். 

இந்தச் சொல் அனுசுயாவின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது.
2020ம் ஆண்டு ஆகஸ்ட் 7 கோழிக்கோடு விமான விபத்தை யாராவது மறக்க முடியுமா? கோவிட் 19 காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்க வந்தே பாரத் என்கிற பெயரில் இயக்கப்பட்ட விமான சேவை... மோசமான மழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருந்த அந்த இரவில் நடந்த கொடுமை...

கோழிக்கோடு விமான நிலையம் ஓர் உயரமான குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம். ஓடுபாதையைக் கடந்து விமானங்களை நிறுத்தும் இடத்தை நோக்கி அந்த விமானம் தரையிறங்கி நொறுங்கி ‘மே டே...’‘ஒரு பெண் விமானி இயக்கிய முதல் விமானம்...’ என்று தலைப்பிட்டு அன்றைக்கு பத்திரிகைகள் அசிங்கப்படுத்தின. அந்த விபத்தில் தன்னுடைய கணவனையும் குழந்தையையும் இழந்தாள் அனுசுயா. கணவன் லெஃபடினன்ட்  ரமேஷ். குழந்தை துர்க்கா. அய்யோ அவர்களை நினைத்து அவள் கதறாத நாள் இல்லை.     
    
சர்வதேச விமான சேவையில் பெண்கள் என்கிற அமைப்பு அப்போது அதை கடுமையாக சாடியது. பெண் விமானிகள் மற்றும் பிற நிபுணர்களின் திறன்களை, பங்களிப்புகளை அங்கீகரித்து அவர்களை பணியமர்த்தி தக்கவைத்துக் கொள்வதில் விமான போக்குவரத்து துறை தீவிரம் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இத்தனைக்கும் 1910ம் ஆண்டிலிருந்தே பைலட் உரிமத்தை பெண்கள் பெற்று வருகிறார்கள். உலகின் முதல் பெண் பைலட் ரேமாண்டி லோரோஜ். ஆங்கிலக் கால்வாயை விமானத்தில் கடந்த முதல் பெண்மணி ஹரியட். விமானத்தை ஓட்டிக் காட்டிய முதல் கறுப்பின பெண்மணி பெசி கோல்மன்.

1936ம் ஆண்டிலேயே இந்திய விமானப்படை விமானத்தை தபால் துறை விமானமாக மாற்றிய சரளா துக்ரால். மேலும் நிவேதிதா பேஷன்... துர்கா பானர்ஜி... இப்படியானவர்களின் நினைவுகள் அனுசுயாவை சூழ்ந்துகொண்டன.

புகை மூட்டத்துக்கு நடுவே தன்னுடைய இலக்கை நோக்கி அனுசுயா நடந்து கொண்டிருந்தாள். யாரும் செய்யாத ஒரு வேலையை விமானம், அதன் பாதுகாப்பு மற்றும் அதனுடைய வழிகாட்டுதல் என்கிற முறையில் அனுசுயா ஓர் அற்புதத்தை நிகழ்த்தி இருந்தாள்.

அது எப்படி வேலை செய்யாமல் போகும்..? எத்தனை இரவுகள் கண் விழித்து இருப்பாள். ஸ்மார்ட் மெமரி. தொழில்நுட்பம் நினைவக உலோக அதிர்ச்சி உறிஞ்சும் போட்.

உலகளவில் இன்று அமுக்கப்பட்ட பொருளியல் நானோ துறையில் நிபுணத்துவ விஞ்ஞானியான அனுசுயா மேல்மட்ட தற்காப்பு சாமரங்களை தனி விமானத்தில் புகுத்தி பலமுறை பரிசோதித்த பிறகுதான் ஒமேகா என்கிற கனவு வெளியே கொண்டுவரப்பட்டது.‘ஹை அனுசுயா... அனுசுயா... இங்கே’ யாரோ அழைத்தார்கள் அல்லது அப்படி அழைப்பது போல இருந்தது.

உங்கள் உடல் முழுதும் நல்ல எண்ணம் ஓடிக்கொண்டிருந்தால் உங்களை இந்த உலகம் அழைப்பது போல நீங்கள் உணர்ந்து கொண்டே இருப்பீர்கள்...

முதலில் விமானியாக வேண்டும் என்கிற புரட்சிக் கனவோடு தன் இளமைப்பருவத்தைக் கழித்த அனுசுயா ஏரோடைனமிக் விஞ்ஞானியாக, தான் உருவாக வேண்டும் என்கிற வெறியை கல்லூரி செல்லும் பொழுது பெற்றதை வெள்ளனூர் கிராமம் மறக்காது. ஆனால், விமான விபத்தில் தன் குடும்பத்தை பறிகொடுத்த பிறகு அவளது ஒரே நோக்கம் ஒமேகா... ஒமேகா... ஒமேகா.

மனித உயிருக்கு முன்னுரிமை தரும் அறிவியல், பெண் அறிவியல். எந்த விபத்தும்... விதியோ இயற்கையாக அமைந்ததோ அல்ல. மனிதனின் கவனக் குறைவு, அலட்சியம் என்கிற பிரம்மாண்டமான குற்றம் அதில் அடங்கி இருக்கிறது அல்லது ஏதோ ஒரு வகையில் அரசியல் தலையீடு உட்பட பல அபாயங்கள் இன்று உண்டு.

அனுசுயா தீர்வுகளின் ராணி. ஆனால், எடுத்தவுடன் இப்படி ஆகுமென்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.‘இங்கே, இங்கே வாருங்கள் அனுசுயா’ இப்போது தீர்மானமாக அந்தக் குரல் கேட்டது..

முதலில் அவள் கண்களில் பட்டது பைலட் கதீஜாதான். லேசான சிராய்ப்புக் காயங்களுடன் ஓடிவந்து அவளை அணைத்துக் கொள்கிறாள்.‘அனுசுயா மேடம்... அனுசுயா மேடம்’ யார் யாரோ அலறுகிறார்கள்.‘ஒருவர்கூட இறந்துபோகவில்லை மேடம்’ பைலட் கதீஜா உணர்ச்சிப்பெருக்கில் கதறி அழுகிறாள்.இந்த ஐந்து ஆண்டுகள் தனது பறவை இறகு இலகு... விசேட தரை இறங்கும் முறை... வெற்றி பெற்றதை நம்ப முடியாமல் தன் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறாள் அனுசுயா.

தாங்கள் தயாரித்துக் கொடுத்த விமானமே வெடித்துச் சிதறினாலும் தங்கள் இருக்கைகள் மட்டுமே பறவை இறகுகளைப் போல மெதுவாக தரை நோக்கி வந்து விழுகின்ற நானோ தொழில்நுட்பத்தின் தற்காப்பு சாமரங்கள் அற்புதமாக வேலை செய்ததை அந்த 152 உயிரிகளும் தன் முன்னே சிறு காயங்கள் தவிர வேறு எந்த சிக்கலுமின்றி தன்னை நோக்கி கை காட்டுவதை பார்த்து பரவசத்தில் அப்படியே நிற்கிறாள் அனுசுயா.

 - ஆயிஷா இரா நடராசன்