ஆரிகமியில் அழகான வருமானம்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன அன்பளிப்பு?

ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்கும் மண்டையைக் குடைகிற கேள்வி இது.
 
மற்றவர் கொடுக்காத பொருளாக இருக்க வேண்டும். அதே நேரம் காலத்துக்கும் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பட்ஜெட்டும் இடிக்கக் கூடாது.

என்ன செய்யலாம்?

‘‘ஆரிகமியில பண்ற பொருட்கள் சரியான சாய்ஸ்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகம்மை பழனியப்பன். எம்.ஏ., எம்.ஃபில் பட்டதாரியான இவர், கலைத்துறையின் மீதான ஆர்வம் காரணமாக, ஆசிரியர் வேலையை உதறிவிட்டு, முழுநேரக் கைவினைக் கலைஞரானவர். நூற்றுக்கும் மேலான கைவினைப் பொருள்கள் செய்யத் தெரிந்த அழகம்மை, ‘ஆரிகமி’ எனப்படுகிற பேப்பர் மடிப்புப் பொருள்கள் செய்வதில் நிபுணி. பொழுதுபோக்காகக் கற்றுக்கொள்ளவும், முழுநேர பிசினஸாக செய்யவும் ஏற்றது ஆரிகமி என்கிற அழகம்மை, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘கலர்ஃபுல் பேப்பர் ஷீட்டுகள், பிளைவுட், பசை. 250 ரூபாய் முதலீடு போதும்.’’

என்ன ஸ்பெஷல்? எத்தனை மாடல்?

‘‘ஆரிகமிங்கிறது  பேப்பரை விதம் விதமா மடிச்சு, உருவங்களை உருவாக்குகிற ஒரு கலை. பொதுவா இதை சார்ட் பேப்பர்லதான் பண்ணுவாங்க. நான் அதையே பளபளப்பான, கலர் கலரான பேப்பர்ல பண்றேன். பேப்பர்ல பண்ணினதுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. மெட்டல்ல பண்ணின மாதிரியே தெரியும். ராத்திரி நேரத்துல பிரகாசமா தெரியும். அழகுக்காகவும் வைக்கலாம்; பேனா ஸ்டாண்டு, செல்போன் ஸ்டாண்டு மாதிரியும் உபயோகிக்கலாம். கலசம், மயில், டிராகன்னு கற்பனையைப் பொறுத்து எத்தனை மாடல் வேணாலும் பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘ஒரு ஷீட் 30 ரூபாய். 3 ஷீட்ல 4 செல்போன் ஸ்டாண்டு பண்ணலாம். ஒரு பீஸ் 50 ரூபாய்க்கு விற்கலாம். ஒரு நாளைக்கு 4 பண்ணலாம். சாதாரண ஃபேன்சி ஸ்டோர்ல ஆரம்பிச்சு, பூம்புகார், விக்டோரியா மாதிரியான பெரிய இடங்கள் வரைக்கும் விற்பனைக்குக் கொடுக்கலாம். சுற்றுலாப் பயணிகளைக் கட்டாயம் கவரும். 50 சதவீத லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?

‘‘3 நாள்ல 3 மாடல்கள் கத்துக்க தேவையான பொருள்களோட சேர்த்து 300 ரூபாய் கட்டணம்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்