ரஜினி தீவிர வாசிப்பாளி!



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

        ‘எறும்புகள் இழுத்துக்கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்துக்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்...’ என்பார் எஸ்.ராமகிருஷ்ணன். நிஜம்தான். உலகின் முக்கிய விருதுகளை அவரது இருப்பிடத்துக்கு இழுத்துக்கொண்டு வருகின்றன அவரது எழுத்துக்கள். ஞானவாணி விருது, சி.கே.கே. இலக்கிய விருது, தாகூர் இலக்கிய விருது வரிசையில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ எஸ்.ராவின் எழுத்துக்கு கௌரவம் சேர்த்துள்ளது.

புனைவு இலக்கியத்தின் போக்கில் புதிய வாசலைத் திறந்து மனித மனதின் மகத்தான தரிசனங்களை வெளிப்படுத்தும் எஸ்.ரா, இதுவரை 58 நூல்கள் எழுதியுள்ளார். 15 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவருடைய படைப்புகள் 4 கல்லூரிகளிலும் 2 பல்கலைக்கழகங்களிலும் பாடங்களாக உள்ளன. இவருடைய படைப்புகளை ஆய்வு செய்து மூன்று பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ‘இயல் விருது’ பெற்றமைக்காக அவருக்கு ‘உயிர்மை’ பதிப்பகம் நடத்திய பாராட்டு விழாவில் ரஜினி, வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று அவரின் எழுத்தாளுமையைப் போற்றினார்கள்.  

பெருமிதமான ஒரு சூழலில் எஸ்.ராவை சந்தித்துப் பேசினோம்.

வயதான ஆளுமைகளுக்கே வழங்கப்பட்ட ‘இயல் விருது’ முதன்முறையாக 47 வயதுக்காரரான உங்களுக்கு வழங்கப்பட்டது பற்றி..?

எனக்கு வயது 47தான். ஆனால் 25 வருடங்களாக எழுதுகிறேன். கதை, கட்டுரைகள் மட்டுமில்லாமல் எல்லா தளங்களிலும் எழுதுகிறேன். வாழ் நாள் சாதனை என்ற அடிப்படையில்தான் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் புதிய கதை சொல்லும் முறையை உருவாக்கியதற்காகவும், நவீன இலக்கியத்தில் புதிய போக்குகளை அறிமுகம் செய்ததற்காகவும், புதிய வாசகர்களை உருவாக்கியதற்காகவும் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளார்கள். எழுத்து எனக்கு துணைத் தொழிலோ, பகுதிநேரப் பணியோ இல்லை. அதுதான் எனக்கு வாழ்க்கை. அதற்கான அங்கீகாரமாகவே விருதைக் கருதுகிறேன். 

உங்கள் விழாவுக்கு ரஜினி, சாரு நிவேதிதாவின் விழாவுக்கு த்ரிஷா... இப்படி இலக்கிய மேடைகள் திரைக்கலைஞர்களால் நிரம்பி வழிகிறதே?

திரைப்படத்தின் நிழல் எல்லாத்துறைகளிலும் விழத்தானே செய்கிறது. நிறைய எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் வேலை செய்கிறார்கள். எனக்கு எல்லா துறைகளிலும் நண்பர்கள் உண்டு. இசைத்தட்டு வெளியீட்டு விழா, திரைப்பட விழாக்களுக்கு எழுத்தாளர்களை அழைக்கிறார்கள். விமர்சனங்கள் கேட்கிறார்கள். ஆனால் இலக்கிய விழாக்களுக்கு திரை நட்சத்திரங்களை அழைத்தால் கேள்வி எழுகிறது.

சினிமாவில் பலர் தீவிர வாசிப்பாளர்களாக இருக்கிறார்கள். ரஜினி சார் தீவிர வாசிப்புப் பழக்கம் உடையவர். ‘பாபா’ படத்தில் பணி செய்தது முதல் அவருடன் எனக்கு நட்புண்டு. தனிப்பட்ட முறையில் அவரை அவ்வப்போது சந்தித்துப் பேசுவேன். புத்தகங்கள் பற்றி, இலக்கியம் பற்றி, பொது விஷயங்கள் பற்றி பேசுவோம். படிக்கும் விஷயங்களை விவாதிப்பார். பத்திரிகைகளில் வரும் என் படைப்புகளைப் படித்துவிட்டு பேசுவார். அவரிடம் பல உயர்ந்த குணங்கள் உண்டு.முழு சுதந்திரம் கொடுப்பார். தேவையில்லாமல் ஒரு விஷயத்தில் தலையிடமாட்டார். அவருடைய நட்பு அறிவார்ந்த நட்பு. என்னுடன் மட்டுமல்ல... ஜெயகாந்தன், வைரமுத்து என பலருடனும் அவருக்கு நட்புண்டு. அவரை கௌரவப்படுத்தும் நோக்கில்தான் இந்நிகழ்ச்சிக்கு அழைத்தேன்.

தமிழ்ச் சூழலில் படைப்பாளியாக இருப்பதில் பெருமிதப் படுகிறீர்களா?

இங்கே எழுத்தாளனுக்கு நிறைய சவால்கள். எல்லா பக்கமும் சுயநலம் மிகுந்திருக்கிறது. எல்லா அறங்களும் கேள்விக் குறியாகி நிற்கின்றன. எழுத்தாளனின் வேலை என்ன? அறத்தை வலியுறுத்துவதா..? மரபைக் காக்க போராடுவதா..? இல்லை, எல்லா மனிதர்களையும் போல வாழ்ந்து விடுவதா..? என்னைக் கேட்டால் இந்த மூன்றையும் எதிர்கொண்டு நல்லது சொல்ல வேண்டிய நெருக்கடி எழுத்தாளனுக்கு! பன்னாட்டு நிறுவனங்கள் நமக்குத் தேவையில்லாத பலவற்றை அறிவாக மாற்றிக் கொடுக்கின்றன.

நம்முடைய அடையாளங்கள் எதுவுமில்லை. ஆனால் அமெரிக்காவுக்கான மொத்த அடையாளங்களும் இங்கே கிடைக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் கிவிப்பழம் இங்கே கிடைக்கிறது. செங்கல்பட்டில் விளையும் பனம்பழம் இங்கேயில்லை. சென்னையில் அதிகம் விற்கக்கூடிய புத்தகம் ‘ஹாரிபாட்டர்’. வரிசையில் நின்று வாங்குகிறார்கள். எந்த தமிழ்ப் படைப்பாளியின் நூலுக்கும் இப்படி க்யூ கிடையாது. இதுமாதிரி குழப்பத்தில் பேரிலக்கியங்கள் உருவாகாது. கடந்த 50 வருடங்களில் சிறந்த இலக்கியம் எதுவும் தமிழில் உருவாகவில்லை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியமாக மாறியிருக்கிறது. ஆனால் உலக இலக்கியத்தின் உயரத்துக்கு வரவில்லை.

 எழுத்தாளர்களுக்குள் குழு மனப்பான்மை அதிகரித்து வருகிறதே..?

அது மிகவும் ஆபத்து என்று அனைவருக்கும் தெரியும்.

ஒரு கட்டத்தில் அந்தக்குழுவே படைப்பாளியை வழிநடத்தத் தொடங்கிவிடும். என்னைப் பொறுத்தவரை என் தனிமை எனக்கு முக்கியம். என் வசதி, வாய்ப்புகள், நான் பழகும் மனிதர்கள் மாறியிருக்கலாம். ஆனால் நான் நானாகத்தான் இருப்பேன். அதில் மாற்றமில்லை. இதைத்தான் நான் அடுத்த நிலைக்கும் கொண்டு போவேன்.

சாகித்ய அகாடமியின் போக்கு தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகிறதே?

வண்ணநிலவனுக்கோ, வண்ணதாசனுக்கோ, ஞானக்கூத்தனுக்கோ, விக்ரமாதித்யனுக்கோ ஏன் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படவில்லை? இந்த புறக்கணிப்பு பெரும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. படைப்பாளிகள் வரிசை பெரிதாக இருக்கும்போது விருதுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமே? சாகித்ய அகாடமியிடம் வெளிப்படைத் தன்மை இல்லை. இறுதிப் பட்டியலுக்கு யாரெல்லாம் வந்தார்கள் என்றே தெரிவதில்லை. தமிழ் சாகித்ய அகாடமி ஒன்று தொடங்கப்பட வேண்டும். அது சார்பாகவும் விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

அடுத்து..?

இந்தியா முழுவதும் தமிழின் கூறுகள் எங்கெல்லாம் இருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறேன். பல மாநிலங்களில் தமிழ் சார்ந்த அடையாளங்கள் இருக்கின்றன. அந்த வேர்களை ஆராய்கிறேன். பௌத்தம் சார்ந்த ஒரு ஆய்வு நூலும், நாவலும் எழுதி வருகிறேன். குழந்தைகளின் கல்வி, புனைகதைகள், மாற்றுக்கல்விக்கான ஒரு தொகைநூல் எழுதும் கனவும் இருக்கிறது.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஜெகன்,
ஆர்.சந்திரசேகர்