எனது சிறுவயதின் ஞாபகக் கண்ணாடியில் பிரதிபலித்த அந்த மனிதரின் முகம் இப்போதும் என் நினைவில் சுழல்கிறது. அழுக்கேறிய வேட்டி சட்டை. தோளில் ஒரு துணிமூட்டை. குப்பைத்தொட்டிகளில் கிடக்கும் சில தாள்களைத் தேர்ந்தெடுத்துத் தனது மூட்டைக்குள் வைத்துக் கொள்வார். அதனுள் எப்போதும் சில புத்தகங்களும் கொஞ்சம் காகிதப்பூக்களும் இருக்கும். அவர் பிச்சைக்காரர் அல்லது பைத்தியக்காரர் அல்லது குப்பை பொறுக்குபவர் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஒருநாள் வாசலில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த என் அப்பாவிடம் அவர் பேச்சுக் கொடுத்தார். பலருடைய கவிதைகளை மனப்பாடமாக ஒப்பித்தார். பிறகு அப்பா அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். அவர் யாரென்று அப்பாவிடம் கேட்டேன். ‘‘அவரு கவிதை எழுதுவாராம்டா... சொன்னாரு, நல்லாதான் இருக்கு. பிள்ளைங்களும் மனைவியும் துரத்தி விட்டுட்டாங்களாம். ஊர் ஊரா சுத்துறாரு’’ என்றார். ‘‘நாலு காசு சம்பாதிக்க முடியாம கவிதை எழுதிட்டுத் திரிஞ்சா இதுதாண்டா கதி’’ என்றார் அம்மா. அந்த மனிதர் பிச்சைக்காரரோ, பைத்தியக்காரரோ, குப்பை பொறுக்குபவரோ அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், அவர் வைத்திருந்த காகிதப்பூக்கள் எதற்காக என்பதுதான் புரியவில்லை.
கவிஞர்களை வறுமையும் துயரமும் காலங்காலமாக இப்படித்தான் துரத்துகின்றன. பாண்டிய மன்னனிடம் பரிசில் பெறச் சென்ற சத்திமுத்தப் புலவன், தனது வறுமைக் கோலத்தை தன் மனைவியிடம் உரைக்க நாரையைத் தூதுவிடுகிறான்.
‘நாராய் நாராய், செங்கால் நாராய்’ என்று போகும் பாடலில், ‘‘நீயும் உன் மனைவியும் தென்திசைக் குமரியில் நீராடி வடதிசைக்குப் போனால், என் ஊரான ‘சத்திமுத்தம்’ வரும். அங்குள்ள குளத்தில் தங்கியிருந்து, மழையில் நனைந்த சுவர்களையுடைய வீட்டின் கூரையில் ‘நான் வருவேனா’ என நினைத்து பல்லியின் சகுனத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் என் மனைவியைப் பாருங்கள். அவளிடம், ‘எங்கோன் மாறன் வழுதி கூடலில் ஆடையின்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையான என்னைக் கண்டேன்’ என்று சொல்லுங்கள்’’ என்கிறான்.

பசியில் இருக்கும் புலவனுக்கு நாரையின் நீண்ட கூர்வாய், பிளந்த பனங்கிழங்கை நினைவுபடுத்துகிறது. இதுதான் கவியின்பம். இங்கே வறுமை கவிஞனைக் கொன்றாலும் அவனது கவிதையைக் கொல்ல முடியாமல் பின்வாங்குகிறது. பனங்கிழங்கைப் பார்க்கிறபோதெல்லாம் நமக்கு சத்திமுத்தப் புலவர் நினைவுக்கு வருவார்.
‘இந்த வண்ணக் கிண்ணத்தில்மலர்களை வைப்போம்அரிசிதான் இல்லையே’என்கிறான் ஹைகூ கவிஞன் பாஷோ.
‘இந்த ஊரில்என் வீட்டில் மட்டும்தான்விளக்கில்லை...இருளே உனக்குஎன் முகவரியைக்காட்டி விடும்’என்கிறான் கஸல் கவிஞன் பாஃகீ.
ஒருவனுக்குப் பசி வந்தால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை, அறிவு, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காமம் அனைத்தும் அழிந்துவிடும் என்கிறார் அவ்வையார். கவிஞர்கள் வறுமையையும் எவ்வளவு அழகாகக் காதலிக்கிறார்கள் பாருங்கள்!
பசியென்னும் நெருப்பில் புடம்போடப்பட்ட கவிஞர் பவித்ரன் தீக்குனி (1974). தீக்குனி - கோழிக்கோடு மாவட்டத்தில் அவர் பிறந்த ஊர். இன்றைய முக்கியமான மலையாளக் கவி. அம்மா ஒரு பாலியல் தொழிலாளி. அப்பா மனநிலை பிறழ்ந்தவர். கசப்புக்கும் வெறுப்புக்கும் இடையிலான தனது பிறப்பை நொந்து, நான்காவது படிக்கும்போதே ஊரை விட்டு ஓடிவிட்டார்.
டீக்கடையில் சமைப்பது, தோப்பில் தேங்காய் பொறுக்குவது, தென்னை, பனை மரங்களேறுவது, சாணியள்ளுவது, கல் உடைப்பது, சுமை தூக்குவது, முடி வெட்டுவது, மீன் விற்பது என்று வறுமை துரத்திய வழிகளிலெல்லாம் வெவ்வேறு வேலைகள் செய்து பி.ஏ. மலையாள இலக்கியம் படித்திருக்கிறார். கவிதையையும் கைவிடாமல் தொடர்ந்திருக்கிறார்.
முறிந்துபோன காதல்களும் அவரது வாழ்வில¢ நிறைய இருக்கின்றன. எட்டாவது படிக்கும்போது ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார். அவளை அவளது அப்பா திருச்சூருக்கு திருப்பிக் கூட்டிப் போய்விட்டார்.
வயனாட்டில் ஒரு நாவிதர் வீட்டில் தங்கி வேலை செய்திருக்கிறார். நாவிதரின் முதல் மனைவியின் மகளுக்கும் இவருக்கும் காதல். காபி தோட்டத்துக்குள் அவரைக் கூட்டிச் சென்று அடித்துத் துவைத்திருக்கிறார்கள். கல்லூரியிலும் ஒரு காதல். அவள் தினமும் அவருக்கு உணவளித்திருக்கிறார். பிறகு ஒருநாள் அவள் தன்னை இன்னொருவரின் மனைவியென்றும் தனக்கு ஒரு குழந்தை உள்ளதென்றும் சொல்லி படிப்பை நிறுத்திவிட்டுப் போய்விட்டாள். ‘இதுவரை எத்தனை பெண்களைக் காதலித்திருக்கிறாய் என்று கேட்டால் அதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது’ என்கிறார் பவித்ரன்.
பிறகு திருமணம். இரண்டு குழந்தைகள். சீட்டு நடத்தி நஷ்டம். ஊருக்குள் வாழ முடியாத நிலை. என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்தோடு திருச்சூருக்குப் பயணமாகிறார். ரயில் நிலையத்தில், ‘குழந்தைகளைக் கொன்றுவிட்டு நாமும் செத்து விடலாம்’ என்று அழுகிறாள் மனைவி. துக்கத்தின் இறுக்கத்தில் முடிவெடுத்து அனைவரும் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருக்கிறார்கள். மகள் தண்ணீர் கேட்டு எழுந்து அழுகிறாள். அந்தச் சத்தம் கேட்டு மகனும் எழுந்து உட்கார்ந்து கொள்கிறான். ‘குற்ற உணர்வும் அழுகையும் வந்தெனது தொண்டையை அடைத்துக் கொண்டது. நான் மெதுவாக மனைவியைப் பார்த்தேன்.
அவள் அந்தக் குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சட்டென எழுந்து சொன்னாள்: வேண்டாம் இந்த அருமையான மக்களைக் கொன்று நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாம்’ என்று சொல்லும் பவித்ரன், வறுமையின் உச்சத்தில் தனது மகளைத் தூக்கிச் சென்று கிள்ளி அழவைத்து ஆலய வாசல்களிலும் கல்லூரிகளின்¢ முன்பும் பிச்சைகூட எடுத்திருக்கிறார்.
இப்போது கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறார். அவரது தீவிர வாசகர்கள் அவருக்கு பத்து சென்ட் நிலம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். மீன் வியாபாரம் செய்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இயங்குகிறார்.
பசித்தவர்கள், தெருவாசிகள், பாலியல் தொழிலாளிகள், ஊனமுற்றவர்கள், முதிர்கன்னிகள், ஓடிப்போனவர்கள், தொழிலாளிகள், குழந்தைகள், பெண்கள் இவர்களின் உடைந்துபோன உலகத்தைச் சித்தரிப்பவைதான் பவித்ரன் தீக்குனியின் கவிதைகள். ‘பவித்ரன் தீக்குனி கவிதைகள்’ எனும் நூலை வெகு அற்புதமாக மொழிமாறும் தடம் உறுத்தாமல் தமிழ்ப்படுத்தியிருக்கிறார் கவிஞர் என்.டி.ராஜ்குமார். தமிழில் இவர் தவிர்க்கமுடியாத படைப்பாளி என்பதை மொழிபெயர்ப்பிலும் பதிந்திருக்கிறார் (புது எழுத்து, 3/167 ஸ்ரீராமலுநகர், காவேரிப்பட்டினம்-635112. விலை ரூ.75).
இன்று உலகப் பட விழாக்களில் தங்கள் படம் வெளியிட்டால் போதும் என்று சில இயக்குநர்கள் படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விருதுகள் பெற்றால் போதுமென்று சில எழுத்தாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் மக்களின் பிரச்னைகளை மக்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு மக்கள் இயக்கமாக தனது கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கிறார் பவித்ரன் தீக்குனி. அவருக்குப் பின்னால் விளம்பரங்கள் இல்லை, ‘வாங்கப்பட்ட’ விருதுகள் இல்லை. மக்கள் இருக்கிறார்கள்.
‘அம்மாநிறைவேறாத ஆசையின்புல்லும் பலா இலைகளும்உனது முன்னால் எப்போதுமிருந்ததுஅதனால்தான்இடையன் மேய்த்துச் சென்ற வழிகளோடுநீ சஞ்சரிக்கவில்லைஉனது வாழ்க்கையெனும் வரைபடத்தில்ஒரு இடத்தில்கூட நீ என்னைஅடையாளப்படுத்தவில்லைஎனது இதயத்தின் ஆழமான காயம் என்றும்நீதான்நீ மட்டுமேதான்’(சலசலக்கும்...)
பழநிபாரதி