ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

              மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை...

இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்?

ரூசோ அப்படித்தான் வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம்.

‘‘இனி என்ன செய்யப்போறே?’’ - கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ்.

‘‘விவசாயம் பாக்கப்போறேன்...’’ என்றார் ரூசோ!

‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான வாழ்க்கை... கை நிறைய பணம்... இதெல்லாம் ஓகேதான். ஆனா, நம்மை நிரூபிக்கிற அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே. அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன்!’’ - சிரிக்கிறார் ரூசோ.

சிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரூசோ. ‘மரைன் டெக்னாலஜி’ படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்தவர், இயற்கை விவசாயம் செய்வதற்காக வேலையை விட்டுவிட்டு வந்து நின்றார். இன்று சென்னையில் திருவான்மியூர், பெசன்ட் நகர், நீலாங்கரை ஆகிய இடங்களில் ‘தி நேச்சுரல் ஸ்டோர்’ என்ற இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை மையத்தை நடத்துகிறார். மாதம் ரூ.15 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடக்கும் இவரது கடைகளில் 30க்கும் அதிகமானோர் வேலை செய்கிறார்கள்.

‘‘அப்பாவுக்கு என்னை எஞ்சினியர் ஆக்கிப் பாக்கணும்னு ஆசை. என் கனவு வேற... வித்தியாசமா ஏதாவது பிசினஸ் பண்ணணும். கடைசியில அப்பாதான் ஜெயிச்சார். படிப்பு முடிச்சவுடனே ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வில ஜூனியர் எஞ்சினியரா வேலை கிடைச்சுச்சு. 40 ஆயிரம் ரூபா சம்பளம். பாம்பே பறந்துட்டேன். கப்பல்ல ஜெனரேட்டரை இயக்குறது, எஞ்சின் மெயின்டனன்ஸ், பாய்லர், பம்புகளை பராமரிக்கிறது... இதுதான் வேலை. கடலாறு மாதம், நாடாறு மாதம்!’’ - மெல்லிய புன்னகை படர பேசுகிறார் ரூசோ.

இவருக்கு 2 சகோதரிகள். மூத்தவர் ராஜரீஹா, எம்.பி.ஏ படித்தவர். மா, பலா, நெல்லி என 100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறார். இளையவர் ஜோஸ்பினுக்கு தேனீ வளர்ப்புதான் தொழில். அப்பா ஓய்வுபெற்ற பிறகு, மூத்த அக்காவின் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார்.

“வேலைக்குச் சேர்ந்து ரெண்டாவது வருஷம் சீனியர் எஞ்சினியரா ஆகிட்டேன். 1 லட்சம் ரூபா சம்பளம். எல்லா வசதிகளும் இருந்தும் மனசு மட்டும் வேலையில ஒட்டலே. எந்த சவாலும் இல்லாத வேலை. தினமும் அதே கடல்... அதே கப்பல்... அதே எஞ்சின்... வெறுப்பாயிடுச்சு. ‘இதில என்ன சாதிக்கப் போறேன்’னு மனசு கேட்குது. இன்னும் மூணு வருஷத்தில தலைமைப் பொறியாளர் ஆகலாம். மாசம் 5 லட்சம் ரூபா சம்பளம் கிடைக்கும். ஆனா, இதே கப்பல்தான்... இதே கடல் தான்... இதே எஞ்சின்தான்... கற்பனை பண்ணவே கஷ்டமா இருந்துச்சு...
 
ஒருமுறை முத்துப்பட்டிக்கு வந்திருந்தப்போ இயற்கை விவசாயிகள் கூட்டத்துக்கு அக்காகூட போயிருந்தேன். கப்பல் வேலையை விட்டுட்டு விவசாயத்தில இறங்கணும்னு முடிவெடுத்தது அங்கேதான். இன்னைக்கு சந்தைக்கு வர்ற எல்லா உணவுப்பொருளும் ரசாயனத்துல குளிச்சுத்தான் வருது. நிலமும் ரசாயனத்துக்குப் பழகிருச்சு. நிலத்தை மீட்டு இயற்கை விவசாயம் செய்றது சாதாரணமில்லை. ஆனா, அப்படி விளைவிக்கிற பொருட்களுக்கு எங்க பகுதியில மரியாதை கிடைக்கலே. பளபளப்பும் கலரும்தான் மக்களுக்கு பெரிசா தெரியுது. அந்தக் கூட்டத்தில விவசாயிகள் இந்த விஷயங்களை ஆதங்கமா பேசினாங்க. அப்போதான் எனக்குள்ள ஒரு பொறி கிளம்புச்சு. நாம ஏன் இந்தப் பொருட்களை மார்க்கெட் பண்ணக்கூடாது?

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineசெயல்ல இறங்கிட்டேன். முதல்ல ஆர்கானிக் பொருட்களை விற்கறதுல இருக்கற பிரச்னைகளை அலசுனேன். சென்னையில் ஆரம்பிச்ச வேகத்திலேயே நிறைய கடைகளை மூடிட்டாங்க. அதுக்கு சில காரணங்கள் இருந்துச்சு. நாட்டு மருந்துக்கடை மாதிரி இறுக்கமா கடைகளை வச்சிருந்தாங்க. ஏ.சி. போட்டு, ஷோரூம் வச்சு பிரமாண்டமா யாரும் செய்யலே. அதனால நமக்கு தொடர்பில்லாத இடம்னு மக்கள் நினைச்சாங்க.

 கடுகுல இருந்து வெங்காயம் வரைக்கும் எல்லாப் பொருளும் அந்தக் கடையில கிடைக்கணும். அப்போதான் தேடி வருவாங்க. ரசாயனத்தில விளையுற பொருட்களைவிட இயற்கைப்பொருட்களோட விலை 20 சதவீதம் அதிகமா இருக்கும். அதனால இதை வாங்கற மக்கள் வசிக்கிற பகுதிகள்லதான் கடை தொடங்கணும். எல்லாத்தையும் அலசி ஒரு புராஜெக்ட் ரெடி பண்ணினேன். கையோட ராஜினாமா லெட்டரையும் அனுப்பிட்டேன்!’’ - விளக்குகிறார் தைரியமான முடிவெடுத்த அந்தத் தருணத்தை.

 முதலில் வயலில் இறங்கி இயற்கை விவசாயம் முழுமையாகக் கற்றபிறகே அடுத்த அடி எடுத்து வைத்தார்.

‘‘வெளிமாநிலங்களுக்குப் போய் அங்கு இயற்கை விவசாயம் செய்றவங்களைப் பாத்து பிசினஸ் பேசுனேன். தமிழ்நாட்டுலயும் தேடிப் பிடிச்சு ஒப்பந்தம் போட்டேன். சென்னை எனக்குப் புதுசுங்கிறதால கல்லூரி நண்பர்கள் அருள்ராஜ், ஜான் ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு, கொட்டிவாக்கத்தில முதல் கடையைத் திறந்தேன். 5 லட்சம் ரூபா முதலீடு.

வெறும் வறட்டு வியாபாரமா இல்லாம நிறைய புதுமைகள் செஞ்சோம். இயற்கை தானியங்கள்ல இனிப்புகள் செஞ்சு வாடிக்கையாளர்களுக்கு இலவசமா கொடுத்தோம். பாரம்பரிய அரிசி ரகங்கள்ல செய்யப்பட்ட உணவுகளை வச்சு ‘ஃபுட் ஃபெஸ்டிவல்’ நடத்துனோம். பீச்ல ஸ்டால் போட்டு சாம்பிள் கொடுத்தோம். கஸ்டமர்கள் மொபைல் நம்பரை வாங்கிவச்சு புதிய பொருட்கள் வரும்போது எஸ்எம்எஸ் அனுப்பினோம். முடக்கத்தான், முள்ளுமுருங்கைன்னு கிடைக்காத பொருளையெல்லாம் கொண்டுவந்து கொடுத்தோம். ஒரே வருஷத்தில நாங்க எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு!’’ - மகிழ்கிறார் ரூசோ.

இப்போது தனியாக 3 கடைகளை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதுமுள்ள கடைகளுக்கு மொத்த சப்ளை செய்கிறார். நகரத்து வெம்மையை போக்கி வீடுகள்தோறும் பசுமை பூக்கச்செய்யும் அரிய பணியையும் செய்கிறார். கான்க்ரீட்டுக்குத் தப்பி மிஞ்சியிருக்கும் இடங்களிலும் மாடியிலும் இயற்கை முறைப்படி தோட்டம் அமைத்துத் தருகிறார். விதைகளும் பயிற்சியும் அளிக்கிறார். ஈகோ டூரிஸம் என்ற பெயரில் பசுமைச்சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.

‘‘இப்போ நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். சுதந்திரமா, திருப்தியா வேலை செய்றேன். தலைமைப் பொறியாளரா ஆகியிருந்தா என்ன சம்பாதிப்பேனோ, அதைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். மனிதர்களுக்கு மட்டுமில்லாம மண்ணுக்கும் சேவை செய்ற திருப்தி இருக்கு...’’

உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் உற்சாகத்தைக் கிளறிவிட்டு நிறைவுசெய்கிறார் ரூசோ!
வெ.நீலகண்டன்
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி