இப்போது பிரகாஷ்ராஜ் இயக்குநரும்கூட. நடிகர், தயாரிப்பாளர் என்கிற நிலைகள் தாண்டி சினிமாவுக்குள் அடுத்த பரிணாமம் பெற்றிருக்கும் அவர் இயக்கத்தில் அமைந்த முதல் தமிழ்ப் படமாகிறது டூயட் மூவீஸுக்காக அவரே தயாரித்திருக்கும் ‘தோனி’. தமிழிலும் தெலுங்கிலும் தயாரான இந்தப்பட வெளியீட்டின் பரபரப்பான நிமிடங்களில் பேசினார் பிரகாஷ்ராஜ்.
‘‘கிடைப்பதற்கு அரிய நடிகன் என்கிற ‘கம்ஃபர்ட் லெவல்’ கிடைத்தும் தயாரிப்பு, இயக்கம்னு பொறுப்புகளைத் தோள்ல ஏத்திக்கிறது ஏன்..?’’ என்ற கேள்விக்கு, ‘‘தேடல்தான். ‘கம்ஃபர்ட் லெவல்’ங்கிறதே தப்பு. தேடலும், தெளிதலும்தான் சரி. ஏ.சியிலேயே இருந்து பழகறதுதான் கம்ஃபர்ட்னா, கடல் காத்தும், மொட்டை மாடிக் காத்தும் தேவையில்லைன்னு ஆகிப்போகும். எனக்கு கடல் காத்தும், மொட்டை மாடிக் காத்தும் தர்ற சுகம் வேணும்...’’ என்று சிரித்தவர் தன் இயக்குநர் பொறுப்பைப் பற்றியும் பேசினார்.
‘‘இது எனக்கு சிரமமா தெரியலை. இன்னும் கூடுதல் பொறுப்பு. ஆனா இயக்குநரா ஆனதற்கு அப்புறம், நடிகன் பிரகாஷ்ராஜ்கிட்ட நிறைய மாறுதல்கள் தெரியுது. இயக்குநர்ங்கிறது நடிகனைத் தாண்டிய பொறுப்புங்கிறதும், பாடல், இசை, நேரம், தொழில்நுட்பம் எல்லாம் எவ்வளவு தேவைங்கிறதையும் புரிஞ்சிக்க முடியுது. நானே இந்தப்பட நடிகனும் ஆகியிருக்கேன். ஆனா இயக்குர் பிரகாஷ்ராஜுக்கு நடிகன் பிரகாஷ்ராஜ் பெரிய பிரச்னையா இருந்தான்.
அதனால அவனை உடைச்சு உள்ளே போட வேண்டியிருந்த பொறுப்பு இயக்குநருக்கு இருந்தது. இதே ‘தோனி’யை வேற ஒரு இயக்குநர் வந்து நடிகன் பிரகாஷ்ராஜ்கிட்ட சொல்லியிருந்தா, அவன் இத்தனை ஒத்துப் போயிருப்பான்னு தோணலை. ‘நீ பணக்காரன் மாதிரி இருக்கே. நடுத்தர அப்பாவா மாற இன்னும் உடம்பு ஏத்தணும். தொப்பை போடணும். உன் ஹேர் ஸ்டைல் மாத்தணும், ஹெல்மெட் போட்டு ஸ்கூட்டர் ஓட்டணும்...’னெல்லாம் வேறு ஒரு இயக்குநர் கட்டளை போட்டிருந்தா நடிகன் அந்தப் பேச்சைக் கேட்டிருக்க மாட்டான்னு தோணுது. இரண்டும் நானே ஆனதால இந்த மாற்றம் நிகழ்ந்தது...’’
‘‘என்ன சொல்லப் போகுது தோனி..?’’
‘‘தோனி’ ஒரு அழகான விஷயம். மராத்திய எழுத்தாளர் மகேஷ் மஞ்ரேக்கர் எழுதிய ‘ஷிக்ஷன ஆயிச்சகோ’ கதை படிச்சேன். அப்படியே மனசுக்குள்ள நின்னுடுச்சு. இதை எல்லார்கிட்டயும் பகிர்ந்துக்க சினிமால சொல்றது சரியான வழின்னுதான் நானே இயக்குநராக முடிவெடுத்தேன். அதைத் திரைக்கான கதையா மாற்ற, அதுக்குள்ள ஒரு பயணம் போக வேண்டியிருந்தது. மாணவர்களுக்குக் கல்வி தரும் இறுக்கத்தை மட்டுமில்லாம, பெற்றவர்களோட பொறுப்பையும் பேசுது கதை. அதனால 15 வருஷங்களா சமூக சிந்தனையோடும்,

கல்வி சேவைக்கான ‘அகரம் ஃபவுண்டேஷன்’ல ஒரு அங்கமாவும் இருக்கிற எழுத்தாளர் த.செ.ஞானவேல் அந்த இடத்துக்குப் பொருத்தமா வந்தார். அந்தப் பகிர்தலோட என் இளமைப் பருவ பள்ளிவாழ்க்கை, நடுத்தர வர்க்க குடும்பச் சூழல்னு எல்லாத்தையும் சேர்த்து ‘தோனி’யா உருவாக்கினோம். உரையாடலை ஞானவேலே எழுதியிருக்கார்.
படம் பார்த்து முடிக்கிறபோது உங்க குழந்தைகளை நீங்க வேறா பார்ப்பீங்க. நீங்களே உங்களுக்கு வேறா தெரிவீங்க. கற்றல் ஏன் துன்பமாச்சு, கற்பித்தல் ஏன் பாரமாச்சுன்னு யோசிக்க வைக்கும் படம். கல்வி இறுக்கத்தால குழந்தை பாதிக்கப்பட, படிக்க வைக்கிற நாமும் ஏன் பாதிக்கப்பட்டு சின்னவனா ஆகிப்போனோம்ங்கிற கேள்விக்கு விடையும் கிடைக்கும்.
படத்துல என் மகனா நடிக்க ஒரு சிறுவன் தேவைப்பட, தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத்தோட மகன் ஆகாஷ் நினைவுக்கு வந்தான். ஆனா அவன்கிட்ட எப்படி கதை சொல்லி சம்மதம் கேட்க..? அதனால பூரி ஜெகன்னாத்தைக் கூப்பிட்டேன், கூடவே அவர் மகனையும் கூட்டி வரச் சொல்லி அப்பாவுக்குக் கதை சொல்லி முடிச்சு, மகன்கிட்ட ‘எப்படி இருக்கு’ன்னு கேட்டேன். ‘என் கதைதான் இது. நான் நடிக்க ஆசைப்படறேன். உங்க கதையில வர்ற பையன் கிரிக்கெட் வீரனாக ஆசைப்படறான். அது ஒண்ணுதான் வித்தியாசம்...’னான். ‘நான் உன்னை நடிக்க வைக்கிறேன். நீ நடிக்கிறியா..?’ன்னு கேட்டதும் உடனே சம்மதம் சொன்னான். இதுதான் நிஜம்.
என் மகளா நடிக்கிற பெண் ஸ்ரீஜிதாவும் ஒரு அசோஸியேட் டைரக்டரோட மகள்தான். இவங்களைப் பிறந்ததுல இருந்தே பார்த்துக்கிட்டிருக்கிறதால வேலை எளிதாச்சு. தாய் இல்லாத பெண் குழந்தைகளுக்கு, தாயுள்ளம் தானே வரும்ங்கிற நிலையை ஸ்ரீஜிதா அழகா வெளிப்படுத்தியிருக்கா. நாசர், ராதிகா ஆப்டே, முரளி ஷர்மா, தணிகலபரணி, பிரம்மானந்தம்னு திறமையான நடிகர்கள் வந்து சேர, ஒளிப்பதிவை கே.வி.குகன் தாங்கியிருக்கார்.
இசைஞானி இளையராஜா வந்து படத்துக்கு வேறு அர்த்தம் கொடுத்தார். எல்லாமும் முடிஞ்சு நான் பார்த்த படம் அவர் கைபட்டதும் வேறாகி, இன்னும் ஆழமாவும் அழுத்தமாகவும் ஆனது. படத்தில் என் பங்களிப்பு 20 சதவீதம்னா அவரோட பங்களிப்பு 80 சதவீதம்னு சொல்வேன். ஒரு சூழலுக்கு ஓடத்தை உருவகமா சொன்னா, ‘படகோட்டி விளையாடும் பருவம் போய் நிஜமான ஓடம் போல நாம் ஆனோம்...’னு பாடலாவே வரிகளைப் போட்டு அவர் இசைக்கிறார். அவரோட நடந்து வந்த பயணத்தை, பெற்ற அனுபவங்களை ஆத்மார்த்தமா பேசணும்னுதான் அவரோட பயணிச்ச கே.பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா மாதிரி பெரியவங்களையெல்லாம் கூப்பிட்டு ஆடியோ விழாவில பகிர்ந்துக்கிட்டேன்...’’
‘‘இனி நடிகன் பிரகாஷ்ராஜுக்காக இயக்குநர் பிரகாஷ்ராஜ் ஒரு படம் இயக்குவாரா..?’’
‘‘என்னைக்குமே நடிகனுக்காக கதை இல்லை. நான் நடிகனா தெரிவதே படைப்புகளாலதான். ஒட்டுமொத்த ஓவியத்துல ஒரு வர்ணம்தான் நடிகன். ஆனா இயக்குநரா தொடர இன்னும் இரண்டு கதைகள் மனசில ஓடிக்கிட்டிருக்கு. முடிவானதும் பகிர்ந்துக்கிறேன்..!’’
- வேணுஜி