‘‘நான் கொஞ்சம் பேசலாமா..?’’ என்று சுகுமாரைப் பார்த்து கையை உயர்த்தியபடி ராதா கேட்டதும் எல்லோருக்குமே அதிர்ச்சி. ராதாவின் குணம்தான் எல்லோருக்கும் தெரியுமே..!
கோபாலகிருஷ்ணன் அவசரமாகக் குறுக்கிட்டு, ‘‘இந்தா... இது என்ன புதுப்பழக்கம், பொண்ணு பேசறது... நாங்க பேசாத விஷயத்தையா நீ பேசிடப் போறே... காபி டம்ளர்களை வாங்கிட்டு உள்ளே போ!’’ என்றார்.
சுகுமாரின் அப்பா அவரைக் கையமர்த்தினார்.
‘‘அட... என்னங்க நீங்க? எந்த உலகத்துல இருக்கீங்க... இன்னிக்கு நிறைய இடங்கள்ல பையனும் பொண்ணும்தான் முதல்ல பேசறாங்க... அப்புறம்தான் பெரியவங்க பேசிக்கறாங்க. ஆனா, உங்க வீட்டுப் பொண்ணுங்களை நீங்க கட்டுக்கோப்பா வளர்த்திருக்கீங்க. ‘இந்தப் பெண்ணைப் புடிச்சிருக்கு... போய் பேசுவோம்’னு என் பையன் வந்து சொன்னப்போ, ‘பொண்ணு என்னடா சொல்லுது’ன்னுதான் நான் கேட்டேன்.
‘பொண்ணு இந்த விஷயமெல்லாம் என்கிட்டே பேசாதீங்கனு சொல்லிடுச்சு. அப்புறம் அவங்க அக்காகிட்டே பேசினேன்’னு அவன் சொன்னான். இப்படி வெளியிடங்கள்லகூட அடுத்த ஆம்பளைகிட்ட பேசாத பொண்ணை, வீட்டுக்குள்ளேயும் பேசக்கூடாதுன்னா என்ன அர்த்தம்? அதும் அந்தப் பொண்ணு எல்லார்கிட்டேயும் பொதுவாதானே பேசணும்னு சொல்லுது...’’ என்று சொல்லிவிட்டு ராதா பக்கம் திரும்பி, ‘‘நீ சொல்லும்மா...’’ என்றார்.

மொத்த குடும்பத்தினரும் திகிலோடு ராதாவைப் பார்த்தார்கள்.
‘‘இப்படிப்பட்ட அன்பான குடும்பத்திலே சம்பந்தம் பண்றது எங்க வீட்டுல சந்தோஷமான விஷயம்தான். ஆனா, காலையில் எங்க வீட்டுல ஒரு சம்பவம் நடந்திடுச்சு. எங்க விஜயா அக்காவைப் பார்க்க வந்த மாப்பிள்ளை, ‘திருப்தியா இல்லை’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அந்தக் கஷ்டத்துல இருக்கோம் நாங்க... இந்த நிலைமையிலே நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கறது சரியா இருக்காது.
சொல்லப் போனா என்னைவிட எங்க அக்கா பொறுமைசாலி... குணமானவ... என்னைவிட உங்க வீட்டுக்கு மருமகளா வர்ற தகுதி எங்க விஜயா அக்காவுக்குத்தான் இருக்கு. நீங்க எங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்...’’ என்று ராதா சொல்லிமுடிக்க, சுகுமார் திடுக்கிட்டுப் போய் எழுந்தான். அவனைக் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்துவிட்டு எழுந்தார் அவனுடைய அப்பா.
‘‘அம்மா ராதா... உங்க அக்கா குணத்துல எவ்ளோ உயரத்துல வேணா இருக்கலாம். ஆனா அக்காவுக்கு மனக் கஷ்டம் இருக்கற நேரத்துல நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டாம்னு நினைக்கிறே பாரு... இந்த இடத்துல நீ அவளை விட உசந்துட்டே! நாங்க எவ்வளவு காலம்னாலும் காத்துக்கிட்டிருக்கோம்.
எங்க வீட்டுக்கு நீதான் மருமக...’’ என்று ராதாவின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்துச் சொல்லிவிட்டு சுகுமார் பக்கம் திரும்பி, ‘‘என்னடா... நீ என்னமோ சொல்ல வந்தியே..?’’ என்றார்.
‘‘இல்லப்பா... நான் சொல்ல வந்ததைவிட நீங்க ஸ்டிராங்கா சொல்லிட்டீங்க. என் மனசிலே நினைச்சது ராதாவைத்தான். அதைத்தான் சொல்ல ஆசைப்பட்டேன். ராதாவை நினைச்சா நிஜமாவே ரொம்பப் பெருமையா இருக்கு...’’ என்றான்.
கோபாலகிருஷ்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்ட சுகுமாரின் அப்பா, ‘‘சார்... இன்னும் என்ன சார்... சம்பந்தி, பொண்ணுகளை தங்கமா வளர்த்திருக்கீங்க. நீங்க எப்போ சொல்றீங்களோ, அப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்... மத்த சம்பிரதாயங்கள் எல்லாமே உங்க இஷ்டம்...’’ என்று நெகிழ்ச்சியோடு சொன்னார். அதே வேகத்தில் மனைவி பக்கம் திரும்பி, ‘‘என்னம்மா... நீ ஒண்ணும் சொல்லாம உட்கார்ந்திருக்கே..?’’ என்றார்.

‘‘எப்பவும் கடைசியா என்கிட்டே கேட்டா என்ன சொல்றது..?’’ என்று அந்தம்மா முகத்தை நொடித்துக் கொள்ள, ‘‘இல்லைம்மா... என்னதான் பார்லிமென்ட்ல சட்டம் பாஸ் பண்ணினாலும் ஜனாதிபதி ஒப்புதல் கொடுக்கலைன்னா சட்டம் பாஸ் ஆகாது... நீ சொன்னாத்தானே சட்டமாகும்...’’ என்றார் சிரித்தபடி.
‘‘இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை... சுகுமாரா! நல்ல பொண்ணாத்தான் பார்த்திருக்கேடா...’’ என்றாள்.
எல்லோரும் சிரிக்க, விடுவிடுவென்று உள்ளே நடந்தாள் ராதா. அறைக்குள் நின்றிருந்த விஜயாவுக்கு கண்கள் கலங்கி இருந்தன. உள்ளே நுழைந்த ராதாவின் கைகளை அழுத்தமாகப் பற்றினாள். ராதா எதுவும் பேசாமல் அமைதியாக ஒரு கணம் நின்றுவிட்டு பின்வாசல் பக்கமாகச் சென்றாள். அவள் பின்னாலேயே சென்றாள் சீதா.
கிணற்றடியில் போய் உட்கார்ந்த ராதாவின் எதிரே அமர்ந்த சீதா அவள் தோள்களைத் தொட்டு, ‘‘இன்னிக்குத்தான் நம்ம வீடே பெருமைப்படுறமாதிரி ஒரு விஷயத்தைப் பேசியிருக்கே...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் கைகளைத் தட்டிவிட்டாள் ராதா.
‘‘வாயை மூடுடி... நானே செம கடுப்புல இருக்கேன். என்ன சொல்லி இந்தாளைத் தள்ளி விடலாம்னு யோசிச்சுக் கிட்டிருந்தப்போ,
‘அக்காவுக்கு முடியலை... அவளும் நல்லவதான்’னு சென்டிமென்ட் டிராமா போட்டு அவனை விஜயா தலையில் கட்டிடலாம்னு பார்த்தா, அந்தப் பெரிசு ஃபீல் பண்ணி காரியத்தைக் கெடுத்துடுச்சு... இதுக்கு நேரடியா இந்தாளை எனக்குப் புடிக்கலைனு சொல்லியிருக்கலாம் போல. நானே பெரிய பள்ளம் தோண்டி, அதுல நானே விழுந்துட்டேன்...’’ என்று ராதா புலம்பப் புலம்ப, சீதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘‘அடிப்பாவி... உனக்குள்ளே இத்தனை விஷமா? நிஜமாகவே அந்த ஆளுக்கும் விஜயா அக்காவுக்கும் கல்யாணம் பேசியிருந்தா அந்தாளு உன்கிட்டேயிருந்து தப்பிச்சிருப்பாரு... இவ்ளோ கேவலமான ஜென்மமா இருக்கியே... ச்சீ...’’ என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று உள்ளே போனாள்.
‘‘அப்போ நாம சம்பந்திங்கறதுக்கு அடையாளமா இந்த வெத்திலை பாக்கை மாத்திக்குவோம்... விசாலம்... நீ போய் நம்ம மருமக தலையிலே பூ வச்சுட்டு, போன் நம்பரை வாங்கிட்டு வந்து பயகிட்டே கொடு. அடடா... அதெல்லாம் அவங்ககிட்டே ஏற்கனவே இருக்கும்ங்கறதை மறந்துட்டேன். நீ பூவை வெச்சுட்டு வா!’’ என்று மனைவியை அனுப்பினார். அந்தம்மா நேரே சீதாவிடம் வந்து, ‘‘ராதா எங்கேம்மா... வெக்கப்பட்டுக்கிட்டு உள்ளே இருக்காளா..?’’ என்றபடி வீட்டுக்குள் போனாள்.

சீதாவுக்கு இந்தக் குடும்பத்தைப் பார்க்க பாவமாக இருந்தது.
‘‘விடுங்க மேடம்... இந்த இடம் விட்டுப் போனது நல்லதுக்குன்னு நினைச்சுக் கோங்க... உங்க நேர்மைக்கும் பிரியத்துக்கும் ஃபைனான்ஸ் தொழிலில் இருக்கற ஆள் சரிப்பட்டு வரமாட்டார். நல்லவங்களுக்கு எப்பவுமே நல்லதுதான் நடக்கும். கவலையை விடுங்க...’’ என்றார் கலைச்செல்வன்.
பள்ளிக்கூடம் செல்லும் தெருவில் இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். பிரேயர் ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. அதனால், இருவரும் பேசிக் கொண்டே நிதானமாக பி.டி. ரூமுக்கு வந்தார்கள்.
‘‘இல்லை சார்... அப்படிப் பார்த்தா அந்த ஆளு என் தங்கை சீதாவைக் கேட்கிறாரே. அவ மட்டும் நல்லவ இல்லையா? அவளுக்கு மட்டும் கெடுதல் நடக்கலாமா..?’’ என்றாள்.
‘‘இது ஒரு மேட்டரா... கொஞ்சம் நிதானமாப் பேசி அந்த இடத்தை அத்து விட்டுறலாம்... உங்களுக்கு முடிஞ்சு, ராதாவுக்கும் முடிஞ்சு, அப்புறம்தான் சீதாவுக்கு... அதுவரைக்கும் அந்தாளுக்கு பொறுமை இருக்காது. வேற இடம் தேடி தானா போயிடுவாரு பாருங்க...’’ என்று கலைச்செல்வன் சொன்னது விஜயாவுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
‘‘என் வருத்தம், மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொல்லிட்டாரேங்கறது இல்லை சார். இன்னும் சொல்லப் போனா இத்தனை நாள் வந்து பார்த்துட்டு புடிக்கலைனு சொல்லிட்டுப் போனவங்க மேலெல்லாம் மரியாதை வந்திடுச்சு இந்தாளு நடத்தையால.
பொண்ணுங்க வேலைக்குப் போகணும்... அவங்க சுதந்திரமா இருக்கணும்... அவங்களுக்கு தனி வாழ்க்கை இருக்கு... அவங்க ஆசைகளுக்கு மதிப்பு கொடுக்கணும்னு என்னென்னவோ பேசறாங்க... ஆனா, செவத்த தோலும் ஸ்லிம்மான உடம்பும் இல்லைன்னா, ‘தங்கச்சியைத் தர்றியா’ன்னு கேட்கறாங்க... வேண்டாம்னு வெளிப்படையாச் சொல்றவங்களை விட இந்த மாதிரி ஆட்கள் ரொம்ப டேஞ்சர்’’ என்றாள்.
கலைச்செல்வனுக்கு விஜயாவைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.
‘இவளுடைய அறிவு ஏன் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை... இவள் சொல்லிக் கொடுத்த கணக்கு எஞ்சினியரிங் வரைக்கும் பயன்படுகிறது என்று சொல்லும் மாணவர்கள் எத்தனை பேர்... கையில் பிரம்பே எடுக்காமல் எல்லோரையும் அன்பால் கட்டிப் போடும் ஆளுமையை ஏன் யாரும் உணரவில்லை... ஒட்டுமொத்த குடும்பத்தையும் தன் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டு உழலும் இந்த அன்பு ஏன் யாருக்கும் புரியவில்லை... இந்த மனிதர்களுக்கு என்னதான் வேண்டியிருக்கிறது... இவளைப் புரிந்து கொள்ளும் மனிதர்கள் ஏன் இல்லை...’ என்று கலைச்செல்வன் யோசித்த நொடியில்,
‘‘சரி சார்... நான் ரூமுக்குப் போறேன். என்னைப் புரிஞ்சுக்கிட்ட ஒரே ஜீவன் நீங்கதான். அதான் என் கஷ்டத்தையெல்லாம் உங்ககிட்டே கொட்டிடுறேன்... ஸாரி!’’ என்று சொல்லிவிட்டு எழுந்து போனாள் விஜயா.
கலைச்செல்வன் விதிர்த்துப் போய் உட்கார்ந்திருந்தார்.