ஃபார்முலாக்களும் ஈக்வேஷன்களும் நிறைந்த வேதியியலில் கடந்த ஆண்டு சென்டம் வாங்கியவர்கள் என்னவோ குறைவுதான். ஏழே முக்கால் லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1243 பேர் மட்டுமே இருநூறுக்கு இருநூறு.
‘‘போன வருஷ ரிசல்ட் எதிர்பாராதது. மத்தபடி வேறு சில பாடங்களை மாதிரி மாய்ஞ்சு மாய்ஞ்சு படிச்சாத்தான் முழு மார்க் எடுக்க முடியும்ங்கிற நிலை வேதியியல்ல இல்லை. இதுக்குன்னு ஒரு சக்ஸஸ் ஃபார்முலா இருக்கு. அதை கரெக்ட்டா அப்ளை பண்ணுகிறவர்கள் சாதிச்சிடுறாங்க. அந்த ஃபார்முலாவுக்குள்ள பசங்களைக் கொண்டு வர்றதுலதான் ஆசிரியர்களோட திறமை அடங்கியிருக்கு’’ என்கிறார் துரைசாமி. இவர் நாமக்கல் குறிஞ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் வேதியியல் ஆசிரியர். இவரின் வழிகாட்டுதலை அப்படியே பின்பற்றிய மாணவி சிந்துகவி கடந்த ஆண்டு மாநிலத்தில் 3வது இடம். வேதியியலிலும் 200.
கனிம, கரிம, இயற்பியல் வேதியியல் என மூன்று பிரிவுகளாக 22 பாடங்கள் (2 தொகுதிகள்) கொண்ட வேதியியலில் எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு. (50 மார்க் செய்முறைத் தேர்வுக்கு). 30 ஒரு மதிப்பெண் கேள்விகள், 15 மூன்று மதிப்பெண் கேள்விகள், 7 ஐந்து மதிப்பெண் கேள்விகள், 4 பத்து மதிப்பெண் கேள்விகள் என வரிசை கட்டுகின்றன வினாக்கள். இவற்றில் ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு மட்டும் அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டும். மற்ற கேள்விகளில் நிறையவே இருக்கின்றன சாய்ஸ்.
துரைசாமி சொல்லும் சக்ஸஸ் ஃபார்முலாவை பார்க்கலாமா?
30 ஒரு மதிப்பெண் கேள்விகள்ல 20 வரைக்கும் புத்தகத்துக்குப் பின்னாடி இருக்கிற ‘மாதிரி வினாக்கள்’ல இருந்துதான் கேக்கறாங்க. எல்லாப் பாடங்கள்ல இருந்தும் சம அளவுல இருக்கும். அதனால புக்பேக் மாதிரிகளை முழுக்கப் படிக்க வேண்டியது கட்டாயம். பாடத்தை முடிக்கிற அன்னன்னிக்கு படிச்சுட்டு,
முடிஞ்சா அந்தப் பகுதியை தனியா ஜெராக்ஸ் போட்டு வச்சுக்கலாம். தேர்வு ஹாலுக்குப் போற கடைசி அரைமணி நேரத்துக்கு அந்தத் தொகுப்பு பயன்படும். மீதமுள்ள 10 கேள்விகள்ல 5 பிடிஏ (பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிடும் புத்தகம்) புக்ல இருந்தும், இன்னொரு 5 புத்தகத்துல எங்காச்சும் இருந்தும் எடுக்கப்படுது. பிடிஏ புக்ல, புக்பேக்ல இல்லாத கேள்விகளா பார்த்துப் படிச்சாலே போதும். புத்தகத்துக்குள்ள இருந்து கேக்கற கேள்விகள் 3, 5, 10 மார்க் கேள்விகளுக்கான விடைகள்ல இருந்தே எடுக்கப்படலாம்ங்கிறதால அதுவும் ஈசிதான்.
மூன்று மதிப்பெண் கேள்விகள்ல சில பாடங்கள்ல இருந்து கேள்விகளே இருக்காது. 3, 5, 6, 13, 14, 17, 19, 20, 21 போன்ற பாடங்கள்ல இருந்து அவ்வளவா கேள்விகள் வர்றதில்லை. அதனால மூன்று மதிப்பெண் கேள்விகளுக்கு மத்த பாடங்கள்ல தீவிரமா கவனம் செலுத்தினாலே போதுமானது.
தனிமங்கள்ல டி, எஃப் தொகுதி தனிமங்கள், சேர்மங்கள்ல அனைவு, உயிரியல் அனைவுச் சேர்மங்களோட வெப்ப இயக்கவியல், வேதிச்சமநிலை, வேதிவினை வேகவியல், ஈதர்கள் போன்ற பகுதிகள்ல இருந்துதான் 5 மதிப்பெண் கேள்விகள் பெரும்பாலும் கேட்கப்படுது.
10 மதிப்பெண் கேள்விகளுக்கும் செலக்டிவ் பாடங்கள் இருக்கு. அணுக்கரு வேதியியல், மின்வேதியியல், கரிம வேதியியல் மாற்றியம், கார்பாக்ஸிலிக் அமிலங்கள் போன்ற பாடங்கள்தான் பெரிய கேள்விகளுக்கான பாடங்கள். இந்தப் பிரிவுல கடைசிக் கேள்வியானது கட்டாயக் கேள்வி. அது 16, 4, 13, 18ம் பாடங்கள்ல உள்ள கேள்வியாத்தான் இருக்கும்.

அப்பா லேப் டெக்னீஷியன் என்பதாலோ என்னவோ சிந்துகவியும் ‘வேதியியல்’ என்றால் இன்ட்ரஸ்ட் ஆகிவிடுகிறார்.
‘‘வேதியியலும் கணக்கும்தான் எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாடங்கள். இதுல எப்படியும் சென்டம் வாங்கியே ஆகணும்ங்கிற வெறியோட படிச்சேன். வேதியியல் பாடத்தைப் பொறுத்தவரை பழைய கேள்வித்தாள்கள்ல இருந்து நிறைய ரிப்பீட்டா கேக்குறாங்க. குறைஞ்சது அஞ்சு வருஷக் கேள்வித்தாள்களையாச்சும் பார்த்துட்டுப் போனா நல்லது.
அதேபோல ஏற்கனவே முழு சிலபஸ்ல தேர்வு எழுதுனப்ப ஏற்பட்ட தவறுகளைச் சரிபார்த்துக்கணும். சமன்பாடு, மூலக்கூறு வாய்பாடுகள் சில நேரத்துல குழப்பலாம். அதுங்களைத் தெளிவா மனசுல வச்சுக்கணும். இதையெல்லாம் ஃபாலோ பண்ணுனதாலதான் என்னால சென்டம் வாங்க முடிஞ்சது’’ என்கிறார் சிந்து.
ஃபைனல் டச்! ஒரு மதிப்பெண் கேள்விகளைத் திருப்பிப் பார்க்கலாம்.
மூலக்கூறு வாய்பாடுகளைச் சரிபார்க்க வேண்டும். தனியாக பட்டியல் போட்டு வைத்திருந்தால் சுலபம்.
வகுப்பறையில் ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் விடைத்தாள்களின் தவறுகளைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.
கட்டாயக் கேள்விக்கான ஃபார்முலாக்களைப் பார்க்கலாம்.