நரையை மறைக்க நிறைய வழி!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                         கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிற எனக்கு இப்போதே நரைமுடி தோன்ற ஆரம்பித்துள்ளது. டை உபயோகிப்பதும் ஆபத்து என்கிறார்களே... இள வயதில் வருகிற நரைப் பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா?
- டி.சங்கீதா, சென்னை.

பதில் சொல்கிறார் சரும மருத்துவரும் ட்ரைகால ஜிஸ்ட்டுமான தலத் சலீம்

முடியின் வேர்க்கால்களில் உள்ள மெலனோசைட்ஸ் என்கிற நிறமிகள்தான் கூந்தலுக்கு கருமை நிறத்தைத் தருபவை. இந்த மெலனின் உற்பத்தி குறைவாக இருப்பது, பரம்பரை வாகு, சத்துக் குறைபாடு, மன அழுத்தம், உப்புத்தண்ணீரில் தலை குளிப்பது, வாழ்க்கைமுறை மாற்றங்கள் என நரை வரப் பல காரணங்கள்... இளவயதில் ஒன்றிரண்டு முடிகள் நரைக்கத் தொடங்கியதுமே உஷாராகி மருத்துவரை அணுகி, சத்துக்குறைபாடு இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். வைட்டமின் பி5 மற்றும் பி12 சத்து குறைவாக இருந்தால், மருந்துகள் மூலம் சரி செய்யலாம்.

தவிர்க்க முடியாத பட்சத்தில் கூந்தலை கலரிங் செய்ய வேண்டும் என்றால் அமோனியா கலக்காததாகப் பார்த்து உபயோகிக்கலாம். சுத்தமான ஹென்னாவுடன் டீ அல்லது காபி டிகாக்ஷன், நெல்லிக்காய் சாறு, பீட்ரூட் சாறு, கத்தா பவுடர், துளசி பவுடர், வேப்பிலை பவுடர் எல்லாம் கலந்து இரும்புப் பாத்திரத்தில் முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் ஒரு முட்டையை அடித்துக் கலந்து, தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் நரை மறையும். சைனஸ் உள்ளவர்கள், இக்கலவையில் நான்கைந்து லவங்கத்தைப் பொடித்துச் சேர்த்துக் கொள்ளலாம்.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது, சாப்பாட்டுக்கு முன் சிட்டிகை (நக இடுக்களவுக்கு) ட்ரை ஈஸ்ட் எடுத்துக் கொள்வதெல்லாம் நரையைக் கட்டுப்படுத்தி, முடியின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.

பேருந்து நிலையங்கள், மோட்டல்களில் பிஸ்கெட், வாட்டர் பாட்டில் போன்றவற்றின் எம்ஆர்பி விலையை விட கூடுதலாக 5 ரூபாய் வரை வைத்து விற்கிறார்கள். இதுபற்றி யாரிடம் புகார் செய்வது?
- செந்தில்வேலன்,
நசரத்பேட்டை.

பதில் சொல்கிறார் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்

தமிழகத்தின் தலைநகரில் உள்ள கோயம்பேடு தனியார் பேருந்து நிலைய த்திலேயே இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன. விழிப்புணர்வு மூலமாகவே இந்த மோசடியைத் தவிர்க்க முடியும்.

பொருளின் கவரில் குறிப்பிட்டிருக்கும் அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதலாக விற்பது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குற்றம். அதிக விலைக்கு விற்றாலோ, குறிப்பிட்டுள்ள எடையை விட குறைவாக இருந்தாலோ, முதலில் சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் ரசீது கேட்க வேண்டும். ரசீது தர மறுத்தால் பொருளை வாங்கிக்கொண்டு வந்து, பேக்கிங்கை பிரிக்காமல் வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின், முறைகேடாக பொருட்களை விற்ற அந்த கடைக்காரருக்கு ‘உங்கள் மீது ஏன் வழக்குத் தொடரக்கூடாது’ என்று கேட்டு பதிவு அஞ்சலில் கடிதம் அனுப்புங்கள். அவர் அக்கடிதத்தை பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சியான அக்னாலட்ஜ்மென்ட்டை பத்திரமாக பெற்றுக் கொள்ளுங்கள். ஒருமாத காலத்துக்குள் பதில் வராதபட்சத்தில், கலெக்டர் தலைமையில் இயங்கும் நுகர்வோர் பாதுகாப்புக் குழுவுக்கு அஞ்சல் மூலமாகவோ, நேரிலோ புகார் அளிக்கலாம். புகார் செய்பவரின் பெயர், முழுமையான முகவரி,

எதிர்மனுதாரரின் பெயர், முகவரி, பொருள் வாங்கிய தேதி, அதற்காக செலுத்தப்பட்ட தொகை, வாங்கப்பட்ட பொருளின் விபரம், அந்தப் பொருளின் கவர், எதிர்நோக்கும் நிவாரணம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மாவட்ட குறைதீர் மன்றம் இருதரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முடிவு திருப்திகரமாக இல்லாவிட்டால் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

உங்கள் பகுதியில் நேர்மையாக செயல்படும் நுகர்வோர் பாதுகாப்புக் குழு மூலமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளலாம். சந்தேகங்களுக்கு தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தை (212, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4. தொலைபேசி: 24940687, 24618900) அணுகலாம்.