திருப்புமுனை நல்லி குப்புசாமி செட்டியார்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         ‘ஏழை உடுத்தியிருக்கும் ஆடையில், நெய்த நூல்களை விட கிழிசலை தைத்த நூல்களே அதிகம்’ என்கிற கவிதை வரிகளுக்கும், நெசவாளர்களின் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தன்னுடைய உழைப்பால் உலகத்திற்கே உணவு தருகிற விவசாயி பசியோடு படுக்கப் போவதும், மானம் மறைத்து மனிதனை நாகரிகமாக்கும் நெசவாளி கந்தல் உடை உடுத்துவதும் நம் தேசத்தின் யதார்த்தம். நெசவு செய்த ஒரு தொழிலாளியின் வாரிசுகள், தலைமுறைகளைத் தாண்டி தொழிலதிபர்களாக விளங்குவதுதான் நல்லி சில்க்ஸின் சரித்திரம். அதை நிகழ்த்திக் காட்டிய பெருமைதான் நல்லி குப்புசாமி செட்டியாரின் சாதனை.

‘‘இரண்டாம் உலகப் போரால் சென்னை அழியப்போகிறது என்கிற வதந்தி காட்டுத்தீ போல பரவியது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தங்கள் உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு பலரும் இடம்பெயர்ந்தார்கள். வணிகர்கள் கடைகளைச் சாத்திவிட்டு சொந்தபந்தங்களின் ஊர்களில் தஞ்சம் புகுந்தனர். சென்னை வீதிகள் வெறிச்சோடின. அரசு அதிகாரிகள், வேறு இடத்துக்குப் போக முடியாதவர்கள் மட்டுமே சென்னையில் இருந்தனர்.

 தி.நகர் வணிகர்களும் கடைகளைப் பூட்டிவிட்டுக் கிளம்பினர். அப்பாவுக்கு கடையைச் சாத்திவிட்டு காஞ்சிபுரம் போக விருப்பம் இல்லை. ‘எமன் முடிவு செய்துவிட்டால் எங்கிருந்தாலும் மரணம் வரும்; ஓடிப்போய் மறைந்துகொண்டால் விட்டுவிடவா போகிறான்’ என்று சொல்லி கடையைத் திறந்து உட்கார்ந்தார். அந்த தைரியம் எங்கள் வளர்ச்சிக்கு முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது. சென்னையில் வசித்தவர்கள் அந்த நாளில் ஒரு துண்டு வாங்க வேண்டும் என்றாலும் எங்கள் கடைக்குத்தான் வர வேண்டிய சூழல் இருந்தது. ‘சிக்கலான சூழலிலும், நல்லி சில்க்ஸ் போனால் நமக்குத் தேவையான உடைகள் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடம் பெற்றோம்.

கொஞ்ச நாளில் சகஜ நிலை திரும்பியது. வெளியூர் போனவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். பழக்கமான வாடிக்கையாளர்களே அதிகம் வந்த நிலை மாறி, புது வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வந்தனர். வாடிக்கையாளர்களைவிட சிறந்த விளம்பரம் தருபவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற உண்மை புரிந்தது. தாங்கள் நம்பும் ஒன்றை, நண்பர்களுக்கும் பரிந்துரை செய்து அழைத்து வந்தார்கள் நல்லியின் வாடிக்கையாளர்கள். இப்படி செய்கிற பரிந்துரைதான், நாங்கள் 575 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்ய அடிப்படை ஆதாரம். 

பிள்ளைகள் கையில் கடைகளை ஒப்படைத்த தாத்தா, காஞ்சிபுரத்தில் செட்டில் ஆனார். அப்பாவின் நிர்வாகத்தில் தி.நகர் கடை வந்தது. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வணிகம் எல்லாமே தி.நகரை மையப்பட்டே சுழன்று வந்தது. காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் கடை என்று கல்வியும், தொழிலும் சேர்த்தே பயின்றேன். இந்தியாவின் முக்கிய வணிக மையமாக மாறியுள்ள தி.நகரின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் பார்த்தபடி நான் வளர்ந்தேன். அப்பாவுக்கு என் மீது அதிகமான அன்பு. கடையைச் சாத்திவிட்டு, பொடிநடையாக என்னை அழைத்துப் போய் விருப்பமான ஐஸ்கிரீம் வாங்கித் தந்தவரை சீக்கிரமாகவே இழந்துவிட்டேன். பள்ளிப்படிப்பு முடிகிற நேரத்தில், அப்பா திடீரென காலமானார். மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத காலத்தில், என்ன பிரச்னையால் இறந்தார் என்கிற தெளிவுகூட எங்களுக்கு இல்லை.

வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்த வாழ்விலிருந்து மெதுவாக மீண்டு எழுந்து, வளர்ச்சியடைகிற காலத்தில் அப்பா மறைந்தார். ‘ஒரு கடை எப்படி இயங்க வேண்டும், வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும், விற்கிற பொருளின் தரத்திற்குச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன’ என்பது போன்ற அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வைத்திருந்தார். நல்ல ஊழியர்களையும் தயார் செய்திருந்தார். வளர்ச்சியை நோக்கி நகரவேண்டிய காலத்தில் அப்பா இறந்ததும் என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டில் நான் ஒரே பையன். அதிலும் சிறுவன். வங்கிக் காசோலையில் கையொப்பம் இடுகிற வயதுகூட அப்போது இல்லை. சித்தப்பாவின் மேற்பார்வையிலும், ஊழியர்களின் அர்ப்பணிப்பாலுமே கடை தொடர்ந்து இயங்கியது.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineவியாபாரம் குறித்து மற்றவர்களிடம் அப்பா பேசியதையும், ஊழியர்களுக்கு வேலை செய்வது பற்றி விளக்குவதையும் சின்ன வயதில் கவனித்ததில் ஓரளவு விஷயங்கள் புரிந்திருந்தது. ஆனால் பாதி புரிந்து, பாதி புரியாத நிலை. தாயின் கருவறையில் கேட்ட விஷயங்களை வைத்து, வியூகத்தை உடைத்து உள்ளே சென்று போரிடத் தெரிந்த அபிமன்யுவால் வெளியே வர இயலாமல் போன ஆபத்து போரில் மட்டுமல்ல; தொழிலிலும் வரும்.

சென்னையில் கிளை ஆரம்பித்த பிறகு வளர்ச்சி ஏறுமுகத்தில் இருந்தது. 1950ம் ஆண்டு 4 லட்சம் ரூபாயாக இருந்த ஆண்டு வியாபாரம், அடுத்த ஆண்டில் 6 லட்சமானது. அதற்கு அடுத்த ஆண்டில் இரண்டு மடங்கு ஆனது. அப்பாவின் உழைப்பு கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தது. 1953ம் வருடம் ஆகஸ்ட் 19ம் தேதி அப்பா மறைந்தார். அந்த வருடம் தொடங்கிய சில மாதங்களிலேயே நல்லி சில்க்ஸின் வியாபாரம் 18 லட்சமாக அதிகரித்து இருந்தது.  அப்பாவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை 13 வயது சிறுவனான நான் நிரப்புவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. துணி எடுக்க வருகிற எல்லோரும் அப்பாவையே விசாரித்தார்கள். அவர் இல்லாமல் வியாபாரம் மளமளவென சரிந்தது. அப்பா இறந்த செய்தியைக் கேட்டு கண்ணீரோடு கடையின் உள்ளே வராமல் அப்படியே திரும்பிப் போனார், சென்னையின் பிரபல தொழிலதிபரின் மனைவி.

‘கைராசிக்காரர்’ என்று அப்பா பெற்ற பெயரும் கடையின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது. ஒரு வாடிக்கையாளர், வீட்டுத் திருமணத்தில், எதிர்பார்த்த பணம் வராமல் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. ஜவுளிக்கான பணத்தையும் பெறாமல், சொந்தப் பணம் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியதை நன்றியோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். இவை எல்லாமே எனக்குள் விதையைப்போல விழுந்தன. 

கடையின் மேல் பகுதியில் வீடு இருந்ததால், வீட்டில் இருந்த நேரத்தைவிட, கடையில் இருந்த நேரமே அதிகம். ஊழியர்களைத் தயார்படுத்துவதில் அதிகம் கவனம் எடுத்துக்கொண்டேன். எங்கள் ஊழியர்களிடம் ஒழுக்கமும் நேர்த்தியான வேலைத் திறனும் இருக்கும். வாங்கிப் போன பொருளில் குறை இருப்பதாக வாடிக்கையாளர் சொன்னால், மறுப்பு சொல்லாமல் மாற்றித் தரவேண்டும். ‘நாம் விவாதிக்க வரவில்லை. வியாபாரம் செய்ய வந்திருக்கிறோம். அவர்கள் விருப்பப்படி நடந்துகொள்ளுங்கள்’ என்பதே என் அறிவுறுத்தலாகும். நூறு புடவை எடுத்துப் பார்த்துவிட்டு, ஒரு புடவையும் வாங்காமல் ஒருவர் போகலாம். முதல் புடவைக்கு ஊழியர் முகத்தில் இருந்த புன்னகை, அத்தனைப் புடவைக்கும் இருக்க வேண்டும்.

திருமண ஜவுளி எடுக்க வருபவர்கள் குடும்பத்தோடு வருவார்கள். அப்போது குடும்பத்தலைவரிடம் மட்டுமே கடையில் இருப்பவர்கள் பேச்சு கொடுப்பார்கள். அந்தக் குடும்பத்தில் 20 வயதில் ஒரு வாலிபர் இருந்தால், அவரை யாரும் கவனத்தில் கொள்ளமாட்டார்கள்.

 அவர்தான் அடுத்து அந்த குடும்பத்தின் தலைவராகப் போகிறவர். அவரையும் வரவேற்று, உபசரித்து, முக்கியத்துவம் தந்து பேசும்போது, ‘நம்ம கடை’ என்கிற உணர்வைப் பெற வைக்க முடியும். தாத்தா காலத்திலிருந்து கொள்ளுப் பேரன் காலம் வரை வாடிக்கையாளர்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர இந்த வரவேற்பும் உபசரிப்புமே காரணம்.

தி.நகர் கடந்து மற்ற இடங்களில் கிளைகள் திறக்கும்போது, கடை அமைகிற இடம் பற்றி அதிக கவனம்  எடுத்துக்கொள்வேன். எங்களின் தொடர்ந்த வளர்ச்சிக்கு முன்னோர்கள் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து கடை வைத்ததே முக்கியமான காரணம். நாம் எந்தப் பொருளை விற்பனை செய்கிறோமோ, அதை வாங்கும் மக்கள் வந்துபோகிற இடத்தில் கடை இருப்பது அவசியம்.

அதோடு தரமான பொருளை விற்பனை செய்ய வேண்டும். என் கடையில் தரமற்ற ஒரு பொருள் விற்பனைக்கு வராமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பல வழிமுறைகள் கடைப்பிடிக்கிறேன். வியாபாரத்தில் பணத்தின் தேவை மிகவும் அவசியம். ஆனால், ‘இப்படி ஏமாந்துட்டேனே’ என்று வாடிக்கையாளர் மனம் நொந்து தந்த பணத்திற்கு ஆயுள் மிகவும் குறைவு. வந்த வேகத்தில் இரண்டு மடங்காக வெளியில் போய்விடும். திருப்தி அடைந்த வாடிக்கையாளர் இன்னொரு வாடிக்கையாளரை அழைத்து வருவார். ஏமாற்றம் அடைந்த ஒருவர், பத்து பேர் வராமல் போகக் காரணமாகி விடுவார். ‘அஞ்சுவதற்கு அஞ்சாமல் போவது பேதமை’ என்கிறார் வள்ளுவர். வாடிக்கையாளர்களின் கோபத்திற்கு அஞ்சுகிறவர்கள் வளர்ச்சிப் பாதையிலேயே இருப்பார்கள் என்பது என் அனுபவம்.

18 லட்சம் ரூபாயிலிருந்து சரிந்து கொண்டிருந்த நல்லி சில்க்ஸின் ஆண்டு வர்த்தகம், நான் பொறுப்பேற்ற பிறகு 575 கோடி ரூபாய் ஆகியிருக்கிறது. உலகம் முழுவதும் 22 கிளைகள் இருக்கின்றன. ஏதுமறியாத சிறுவனாய் இருந்தபோது அறிமுகமான தொழில், எனக்கு வெறும் பணத்தை மட்டும் ஈட்டுத் தரவில்லை. ‘பத்மஸ்ரீ’ விருது போன்ற நாட்டின் அங்கீகாரங்களையும், எழுத்தாளர், சங்கீத கலா ரசிகர், சமூகத்தொண்டர் போன்ற பல அடையாளங்களையும் தந்திருக்கிறது. அந்தத் தொழிலுக்கு உண்மையாக இருந்தேன்; கடுமையாக உழைத்தேன். இவை இரண்டும் இருந்தால் பிறகு எல்லாம் தானாகவே வரும்’’ என்று சிரிக்கிறார்.

கலையும் செல்வமும் கைகோர்த்துச் சிறக்கும் பன்முகத்தன்மை கொண்ட வெகுசிலரில் நல்லி குப்புசாமி செட்டியாருக்குத் தனிச்சிறப்பு உண்டு.
(திருப்பங்கள் தொடரும்...)
த.செ.ஞானவேல்
படங்கள்: புதூர் சரவணன்