மிதுன ராசிக்காரான உங்களிடம் சில பிரத்யேகமான குணங்களைப் பார்க்க முடியும். ‘‘அப்படியே அவுங்க தாத்தா மாதிரியே விரலை நீட்டி நீட்டி என் பையன் பேசறான் பாரு. அவரும் இப்படித்தான்! யாராவது பொய் பேசிட்டா கோபத்துல ஆகாயத்துக்கும் பூமிக்குமா குதிப்பாரு, கண்ணெல்லாம் சிவந்திரும்...’’ - இப்படி தந்தை வழிப் பாட்டனாரின் குணாதிசயங்களைக் கடத்தும் குரோமோசோம்களுடன் உங்கள் மகன் இருந்தால், உங்கள் ஜாதகத்தில் ராகு யோகமாக இருக்கிறார் என்று அர்த்தம்.
ஆபீஸில் தலைக்கு மேல் வேலை கிடந்தாலும், உடம்புக்கு முடியாமல் போனாலும்கூட நித்ய பூஜை தவறாமல் செய்வீர்கள். ‘‘அநாவசியமா வெளியில் எதையும் சாப்பிட மாட்டாரு. ட்ரீட், பார்ட்டின்னு யார் கூப்பிட்டாலும் எனக்கு வேலை இருக்குன்னு ஒதுங்கிப்பாரு’’ என்று வாழ்க்கைத்துணையும், ‘‘சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்த்தாலும் எம்பொண்ணு எங்கப்பாவத்தான் கொண்டு வந்திருக்கா’’ என்று அம்மாவும் பூரிப்போடு சொல்வதற்குக் காரணமானவரே கேதுதான். உதிக்கும்போது விதிக்கப்பட்ட கிரக அமைப்புகளின்படிதான் குழந்தைகள் பிறக்கிறார்கள்.
மிதுன ராசிக்காரரான உங்களுக்கு பூர்வபுண்யாதிபதியாக சுக்கிரன் வருவதால், பிள்ளைகள் மூக்கும் முழியுமாக, சுருண்ட முடியோடு அழகாக இருப்பார்கள். பிள்ளைகளை திருவிழா வைத்து தேரில் ஏற்றாத குறையாக அழகு பார்ப்பீர்கள். உங்களில் பலருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருக்கிறது. ‘‘அப்பா, இன்னும் இந்த ஓவர் முடியல. இன்னும் ரெண்டு பந்து இருக்குப்பா... ஏம்பா வெறும் ஸ்பின்னா போடுற’’ என்று அப்பாவிடம் நண்பனைப் போல் சகஜமாக, உரிமையுடன் பிள்ளைகள் பேசும் அளவிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பீர்கள். உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தவுடன் அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீசத்தொடங்கும்.
இங்கே சில நுணுக்கமான ஜாதக விஷயங்களை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். உங்களின் சொந்த ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் உங்கள் பிள்ளைகள் திரைத்துறையில் மிளிர்வார்கள். நல்ல பாடகராகவோ, பாடல் எழுதுபவராகவோ, நடிகராகவோ, இயக்குனராகவோ புகழ் பெறுவார்கள். சுக்கிரனுடன் உங்கள் ராசிநாதனான புதனும் சேர்ந்திருந்தால், சிறந்த ஆடிட்டராகவும், சிற்பக் கலைஞராகவும், கட்டிட, வாகன வடிவமைப்பாளராகவும் விளங்குவார்கள். மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது உங்கள் பிள்ளைகளிடம் கிரியேட்டிவிட்டி சற்றே அதிகமாக இருக்கும். தேர்வில் கூட வினாக்களுக்கு பதிலளிக்கும்போது உங்கள் பிள்ளைகள் சொந்த நடையில் விடையளிப்பார்கள்.
சுக்கிரன் சனியுடன் சேர்ந்திருந்தால் பிள்ளைகள் அயல் நாடு சென்று உயர்கல்வி முடிப்பார்கள். பெரிய நிறுவனம், தொழிற்கூடங்கள் வைத்து நடத்துப வராகவும் இருப்பார்கள். உங்கள் ராசிக்கு சத்ரு ஸ்தானாதிபதியாக செவ்வாய் வருவதால், ஐந்தாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருந்தாலோ, சுக்கிரன் அல்லது புதனுடன் சேர்ந்திருந்தாலோ குழந்தை பாக்கியம் தடைபட்டு கிடைக்கும். உங்கள் அறிவுரையை அலட்சியப்படுத்துபவர்களாகவும் குழந்தைகள் இருப்பார்கள். உங்கள் பாதகாதிபதியாக குரு வருவதால், குரு ஐந்தில் இருந்தாலும் மருத்துவத்தின் உதவியாலும், நவீன சிகிச்சையாலும் குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்.
‘நான் மிதுன ராசிதான்... ஆனால் என் ராசிக்கு பூர்வபுண்யாதிபதியாக வரும் சுக்கிரன் என் ஜாதகத்தில் பலம் பெற்றிருக்கிறாரா அல்லது பலவீனமாக இருக்கிறாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் என்ன செய்ய வேண்டும்’ என்று உங்களுக்குள் கேள்வி எழுந்தால், சுக்கிரனை பலப்படுத்தும் சில பரிகாரங்களைச் செய்யலாம்.
வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சில நாட்களில் மொச்சைப் பயிறையும் கலந்து சாப்பிடுங்கள். பொன்னி அரிசியுடன் அவரைக்காய், பீன்ஸ் போன்றவற்றை தானமாகக் கொடுங்கள். குடும்பங்களால் புறக்கணிக்கப்பட்டு வாழும் காதல் திருமணத் தம்பதியருக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள். பெரிய நெல்லி மரக்கன்றை நட்டுப் பராமரியுங்கள். வெள்ளியால் ஆன ஆபரணங்களை ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு தானமாகக் கொடுங்கள். சுக்கிரன் கண் பார்வைக்கும் அதிபதியாக வருகிறார். எனவே அடிப்படை வசதியில்லாத கிராமப்பகுதிகளில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த உதவுங்கள்.
அப்படி செய்வோருக்குத் துணையாக இருங்கள். கோயில் யானையின் ஒருநாள் உணவுச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

மிதுன ராசியில் மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு திருமணம் தாமதமாக நடந்தால் குழந்தை பாக்கியம் உடனே கிட்டும். பொதுவாக இவர்களுக்கு 28 முதல் 34 வயதிற்குள் குழந்தை பாக்கியம் அமைந்து விடும். ஏனெனில் ஏறக்குறைய 20 வயது முதல் பாதகாதிபதியான குரு தசை நடப்பதால், தாமதத்திற்கு வாய்ப்புகள் உண்டு.
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் பொதுவாக ஒரே ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ள விரும்புவார்கள். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது வாழ்க்கைத் துணையின் ஜாதகத்தில் 5ம் வீட்டில் ராகு, கேது, செவ்வாய் இல்லாமல் இருப்பது நல்லது. 24 முதல் 32 வயதுக்குள் மகப்பேறு அமையும். இவர்கள் விருச்சிக ராசி வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது.
புனர்பூசம் நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு திருமணம் விரைந்து முடியும். குழந்தை பாக்கியமும் உடனே கிடைக்கும். சிலருக்கு, ‘‘அண்ணனுக்கு இன்னும் முடியல... அதுக்கு அப்புறம்தான் எனக்கு’’ என்று மூத்த சகோதரி அல்லது சகோதரனால் திருமணம் தள்ளிப்போகும். 30 வயதுக்குள் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு.
மிதுன ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக, குழந்தை வரத்தை தருபவராக துலாச் சுக்கிரன் வருகிறார். சுக்கிரன் பலவீனமாக இருப்பின், பெருமாள் ஆலயத்தை வணங்குவது சிறப்பாகும். அதிலும், குழந்தை வரமெனில் சொல்லவே வேண்டாம். வெண்ணெய் ஏந்திய கிருஷ்ணனான நவநீத கிருஷ்ணனை தரிசித்தாலே போதும். அப்படிப்பட்ட தலமே மதுரை மாநகரில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலயம். ஒருமுறை இந்த கிருஷ்ணனை தரிசியுங்கள். தன்னைப் போலவே ஒரு குழந்தையை உங்கள் இல்லத்திலும் தவழச் செய்வான்.
அடுத்ததாக கடக ராசியைப் பார்ப்போமா...
‘‘அப்பா... இவர் பேர் வாஞ்சிநாதன்தானே. சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையனை சுட்ட வீராதி வீரன் இவர்தானே? அசோகச் சக்கரவர்த்திதானே முதல்முதலாக சாலையெங்கும் மரங்களை நட்டவர்’’ என்றெல்லாம் வரலாற்றுப் பூர்வமாக கேள்விக்கணைகளை அடுத்தடுத்து தொடுக்கும் அளவிற்கு நாட்டுப்பற்றையும், மொழி, இனப்பற்றையும் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்ப்பதில் உங்களுக்கு ஈடு இணையாக யாரும் வர முடியாது. ‘‘வீடு, மனை சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ... அழியாத செல்வமான அறிவுச் செல்வம்தான் முக்கியம்’’ என்று அடிக்கடி கூறுவீர்கள்.
உங்களுக்கு சில நுணுக்கமான ஜாதக விஷயங்களைக் கூற விரும்புகிறேன். சொந்த ஜாதகத்தில் கீழேயுள்ள அமைப்புகள் இருந்தால் ஒப்பிட்டுக் கொள்ளலாம். உங்கள் ஜாதகத்தில் பூர்வபுண்ய ஸ்தானாதிபதியாக செவ்வாய் வருவதால், வீர தீரமுள்ள பிள்ளைகள் உங்களுக்குப் பிறப்பார்கள். பளிச்சென்று பேசுபவர்களாகவும், பொதுநலன் விரும்பிகளாகவும் இருப்பார்கள். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்

ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் நாடாளும் யோகம் உங்கள் பிள்ளைகளுக்கு உண்டாகும். எலெக்ட்ரிக்கல், ராணுவம், போலீஸ், அரசியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். செவ்வாய் சுக்கிரனுடன் சேர்ந்திருந்தால் முதல் தர பில்டர்ஸ் ஆக உங்கள் பிள்ளைகள் இருப்பார்கள். செவ்வாய் குருவுடன் சேர்ந்திருந்தால் நீதித் துறை யிலும் சாதிப்பவர்களாக இருப்பார்கள். சந்திரனுடன் சேர்ந்திருந்தால் கம்ப்யூட்டர், ஆர்க்கி டெக்ட், ஜவுளித்துறை, கலைத் துறை போன்ற வற்றில் மிளிர்வார்கள்.
உங்கள் பூர்வபுண்யாதிபதியான செவ்வாய், அதன் பகைக் கோளான சனியுடன் அல்லது ராகுவுடன் சேர்ந்திருந்தால் குழந்தை பாக்கியம் தடைபட்டுக் கிடைக்கும். சிலருக்கு சற்றே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்க நேரும். செவ்வாய் பலவீனமாக இருந்தால் அடிக்கடி கோபப்படுபவர்களாகவும், கூடா பழக்கமுள்ளவர்களாகவும், ரத்த சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்களாகவும் இருப்பர். சிலரது பிள்ளைகள் சரும நோய் உள்ளவர்களாவும் இருப்பர்.
செவ்வாயை பலப்படுத்த என்ன செய்யலாம்? முக்கியமாக உடன்பிறந்தவர்களோடு விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்த தானம் செய்யுங்கள். சகோதரனை இழந்து வாடுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். உயிரியல் பூங்காவில் வளரும் புலியைப் பராமரிக்க ஆகும் செலவில் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முயலுங்கள். அரசு சாலையை விரிவுபடுத்துவதன் பொருட்டு உங்கள் வீட்டுக்கு அருகே சாலை வருவதாக இருந்தால் கொஞ்சம் விட்டுக் கொடுக்க முயலுங்கள்.
கடக ராசியில் புனர்பூச நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் 25 முதல் 32 வயதுக்குள் திருமணம் செய்து கொள்வது நல்லது. உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் தாமதமானால் குழந்தை பாக்கியம் பிரச்னையில் முடியும்.
பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு 24- 27 அல்லது 35-42 வயதுக்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இடையில் கேது தசை வருவதால் வாழ்க்கைத்துணைக்கு ராகு, கேது, சனி ஆகிய கிரகங்களின் தசையில்லாமல் திருமணம் முடிப்பது நல்லது.
ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு பிள்ளை பாக்கியம் உடனே கிடைக்கும். திருமணமும் 23 வயதிலேயேகூட நடைபெறும் வாய்ப்பிருக்கிறது.
கடக ராசிக்காரர்களின் பூர்வபுண்யாதிபதியாக விருச்சிக செவ்வாய் வருகிறார். செவ்வாயின் அதிபதியாக விளங்கும் முருகப் பெருமானை வழிபடுவது மிகுந்த நலம் தரும். அதிலும் பாலசுப்ரமணியராக இருப்பின் உங்களுக்கு விரைவில் அந்த பாக்கியம் கிட்டும். அப்படிப்பட்ட தலமே நாமக்கல்லுக்கு அருகேயுள்ள மோகனூர் ஆகும். இத் தலத்தில் பழநி முருகனைப்போல கையில் தண்டம் ஏந்தி பாலகனாகக் காட்சி தருகிறார் முருகன். இவரை ஒருமுறை தரிசித்து வாருங்கள்... விரைவில் உங்கள் இல்லத்தில் மழலைக் குரல் ஒலிப்பதை நேரடியாக உணர்வீர்கள்.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
முனைவர் கே.பி.வித்யாதரன்