காதலிக்க நேரமில்லை... மீரா நந்தன்



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                    கேரளாவுக்கும் மீரா என்கிற பெயருக்கும் என்ன சம்பந்தமோ, அதே சம்பந்தம்தான் மீராவுக்கும், ஹோம்லியான அழகுக்கும் எனலாம். பாந்தமான அழகு விரும்பிகளின் உள்ளங்களை ஏற்கனவே ஒரு மீரா ஜாஸ்மின் கொள்ளை கொண்டுபோனபின் எஞ்சிய உள்ளங்களைக் கொள்ளையடிக்க கேரளத்திலிருந்து வந்தவர் மீரா நந்தன்.

எந்த மலையாள ஸ்டாருக்கும் முதல் படத்திலேயே கிடைக்காத வாய்ப்பு, 'முல்லா’ படத்தில் அறிமுகமான மீராவுக்கு கிடைத்தது. கேரளாவின் முன்னணி இயக்குநர் லால் ஜோஸின் படம் என்பதுதான் அந்தச் சிறப்பு. அந்தப் படத்துக்காக மீரா பெற்ற விருதுகள் ஏழு. அப்போதே தமிழில் ‘வால்மீகி’ கிடைக்க, பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட மீராவின் எதிர்காலம் கேரளாவில் எதிர்பார்த்ததைப் போலவும், தமிழகத்தில் எதிர்பாராததாகவும் அமைந்தது.

மலையாளத்தில் இந்த நிமிஷம் வரை 20 படங்களை முடித்து விட்டவர் தமிழில் நடித்த படங்கள் மூன்று மட்டுமே. நான்காவது படமான ‘சூரிய நகரம்’ இப்போது வெளியாகவிருக்க, மலையாளப் படங்களின் பிஸி ஷெட்யூலுக்கிடையில் சென்னை வந்திருந்தார் மீரா.

‘‘பெரிய நட்சத்திரங்களோடு நடிக்கணும்னு எந்தக் கனவும் இல்லை. நல்ல படங்கள்ல நான் இருக்கணும்...’’ என்று ஆரம்பித்த மீராவுக்கு ‘சூரிய நகரம்’ வெளிச்சம் காட்டக்கூடிய படமாக இருக்கிறது. ‘‘கிராமத்துப் பெண்ணா இதுல வர்றேன். காதல், பாசம், எமோஷன்னு எல்லா உணர்வுகளையும் கண்களாலேயே காட்டற கேரக்டர். துள்ளலா வர்ற சுட்டிப் பெண்ணா வசனங்கள் இருக்குன்னாலும், முகபாவங்கள்லயே பேசற முக்கியத்துவமான கேரக்டர். அதனால ‘சூரிய நகரம்’ ரிலீஸை நான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்...’’ என்ற மீரா, படத்தில் அவருக்கு ஹீரோவாகும் ராகுல் ரவீந்திரனின் நடிப்பையும் பாராட்டத் தவறவில்லை.

‘‘ஏற்கனவே ‘மாஸ்கோவின் காவிரி’ படத்துல அவர் நடிச்சிருந்தாலும், என் போலவே தமிழ்ல ஒரு திருப்பு முனைக்குக் காத்திருக்கவர். நல்ல கோ ஆர்ட்டிஸ்ட்...’’ என்றவருக்குப் படத்தில் அப்பாவாக நடித்திருப்பவர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். ‘‘பெரிய டைரக்டர்ங்கிற ஈகோ இல்லாம சக நடிகரா இருந்தவர், என் நடிப்பை மெருகேத்த பெருமளவு உதவிகள் செய்தார்...’’ என்கிற மீராவுக்கு கன்னடப் படவுலகமும் இப்போது கதவுகளைத் திறந்திருக்கிறது.

கடைசியாக அந்தக் கேள்வியை மீராவிடம் கேட்காமல் விட முடியாது என்பதால், படத்தின் இயக்குநர் மா.செல்லமுத்து மீராவிடம் காதலைச் சொன்ன நிஜ சம்பவத்தைக் கேட்டோம். அதைத் தொடர்ந்து ஷூட்டிங்கிலிருந்து பாதியில் வெளியேறினார் மீரா என்பது செய்தி.

‘‘அதைப்பத்தி இப்ப பேச வேண்டாம்னு நினைக்கிறேன். அவரோட விருப்பத்தை அவர் சொன்னார். அப்போதைக்கு அது எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும், பிறகு எனக்கு அதில் விருப்பமில்லைங்கிறதை விளக்கிட்டேன். எனக்கு என் முன்னேற்றம் மட்டுமே இப்போதைக்கு முக்கியம். அவரும் அதைப் புரிஞ்சுக்கிட்டதால சுமுகமா படம் முடிஞ்சு இப்ப ரிலீசுக்குத் தயாரா இருக்கு...’’ என்றபடியே கொச்சிக்குப் பறக்கத் தயாரானது மீரா பட்சி.
- வேணுஜி