இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு அரசியல்வாதிகள் மேல் என்ன திடீர் கடுப்போ... ‘‘தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு குற்றம் புரியும் மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப் பெறுவதற்கான வழி வகைகளை யோசிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என்று அதிரடியாக சொல்லியிருக்கிறார். இன்னொரு பக்கம், ‘‘எல்லோரும் ஓட்டு போடும் வகையில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டம் வர வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. இருவர் சொல்வதும் சாத்தியமா?
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)‘‘இந்திய ஜனநாயக முறையை உலகமே இன்னிக்கு ஆச்சரியத்தோட பாக்குது. ஒரே கட்சி ஆண்ட போதும் சரி... இப்ப கூட்டணி ஆட்சியிலயும் சரி... சின்னச்சின்ன குழப்பங்கள் அப்பப்ப வந்து போனாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கையிலதான் அதிகாரம் இருக்கும். மத்த சில நாடுகள் போல அடிக்கடி ஆட்சிகள் மாறிட்டே இருக்கிறதும், எந்த நேரத்துல ஆட்சி கவிழ்ந்து புரட்சி வெடிக்குமோன்னு பயந்துட்டு இருக்கற நிலையும் இங்க இல்லை. வலுவான நம்ம தேர்தல் ஆணையம் திறமையாகவே தேர்தல்களை இங்க நடத்திட்டிருக்கு. அப்படிப்பட்ட ஆணையத்துக்கு நிறைய அதிகாரங்கள் தேவைங்கிறதுல எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கணும்’ங்கிறது சாத்தியமில்லாதது.
ஒரு எம்.பியையோ, எம்.எல்.ஏவையோ திரும்பப் பெறும்போது அவர் சார்ந்த சமூகத்து மக்கள் அதை ஜாதிப் பிரச்னையாக்க முயல்வாங்க. பல இனத்து மக்கள் ஒற்றுமையா வாழ்ந்திட்டிருக்கிற இடத்துல, இது சமூகரீதியான பிளவுகளை ஏற்படுத்திடும். அதோட, இன்னிக்கு மீடியாவோட வளர்ச்சி விபரீத விளைவுகளைத் தர்றதா இருக்கு. வெறும் புகார் மட்டுமே கூறப்பட்ட ஒருத்தரைப் பத்திக்கூட தினமும் செய்தி வெளியிட்டு, மக்கள் மத்தியில அவரைக் குற்றவாளியாக்கி, அவருக்கெதிரா போராட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு வழிவகுத்திடுறாங்க.
அப்படிப்பட்ட சமயங்கள்ல ‘முதல்ல அவரைத் திரும்பப் பெறணும்; வழக்கை எதிர்கொண்டு பிறகு அவர் நிரபராதின்னு நிரூபிக்கட்டும்’னு வாதங்கள் வரலாம். ‘எந்த நேரத்துல நம்ம பதவிக்கு யார் வேட்டு வைப்பாங்களோ’ங்கிற பயத்துலயே அவங்களாலும் நிம்மதியா பணிகளைச் செய்ய முடியாது.
தவிர, இந்த உரிமையை யாருக்கு, எப்படிக் கொடுக்கலாம்ங்கிறதுலயும் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் வரலாம். அதனால என்னைப் பொறுத்தவரைக்கும் இது சாத்தியமில்லாததுன்னு மட்டுமில்ல, தேவையில்லைன்னும் சொல்வேன்’’ என்கிற பீட்டர், ‘வாக்களிப்பதைக் கட்டாயம் ஆக்க வேண்டும்’ என்கிற அத்வானியின் கருத்தை ஆதரிக்கிறார்.
‘‘ஓட்டுப் போடாதவங்களுக்கு அரசு சலுகைகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலமா எல்லாரையும் வாக்குச்சாவடிக்கு வரவழைக்க நினைக்கறதுல தப்பில்லை. ஜனநாயகம் செழிக்கணும்னா அதுக்கு மக்களும் முழுமையா சப்போர்ட் பண்ணித்தானே ஆகணும்? காங்கிரஸ்காரன் சொல்றான்னா கண்ணை மூடிக்கிட்டு எதிர்க்கற பி.ஜே.பி.க்காரங்க மாதிரி நாங்க இல்லை. ஆக்கபூர்வமான விஷயங்களை யார் சொன்னாலும் ஏத்துக்குவோம்’’ என்கிறார்.
தமிழிசை சௌந்தர்ராஜன் (பி.ஜே.பி.)‘‘ஓட்டு போடறதைக் கட்டாயமாக்கறதை எப்பவோ பண்ணியிருக்கணும். பாரதிய ஜனதா ரொம்ப நாளாவே இதைச் சொல்லிட்டுத்தான் இருக்கு. சம்பளத்தோட லீவ் கொடுத்து ஓட்டு போடப் போகச் சொன்னா, லீவை நல்லா என்ஜாய் பண்றாங்க. ஓட்டு போடறதுக்குப் போகறதுக்குக் கஷ்டமா இருக்கு. சிலருக்கு பூத்ல போய் வரிசையில நிக்கறதுக்கு வருத்தமா இருக்கு. ஒரு தொகுதியில 40 சதவீதம் ஓட்டு பதிவாகியிருந்தா, 60 சதவீதம் மக்களோட கருத்தே தெரியாமப் போகுதே! பிறகெப்படி அதை ஜனநாயகத் தேர்தல்னு சொல்ல முடியும்? அதனால அத்வானிஜியோட கோரிக்கை அவசரமா பண்ண வேண்டிய ஒண்ணு’’ என்கிற தமிழிசை ‘மக்கள் பிரதி நிதிகளைத் திரும்பப் பெறுவதையும் வரவேற்பதாக’ சொல்கிறார்...
‘‘நல்ல விஷயம் இது. கொண்டு வந்தா, தேர்தல்ல நிக்கறவங்களுக்கு ஒரு பயமும் பொறுப்புணர்ச்சியும் தானா வரும். ரிசல்ட் அறிவிச்ச நிமிடத்துலயே சேட்டைய ஆரம்பிக்கிற வேலையையெல்லாம் பண்ண மாட்டாங்க. தொகுதியில வேலைகளும் ஒழுங்கா நடக்கும். ஆனா, அரசியல் காழ்ப்புணர்ச்சியில தவறா இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாதபடி பார்த்துக்கணும். என்னைக் கேட்டா, திரும்பப் பெறுவதற்கு முன்னால ஒரு இடைப்பட்ட வாக்கெடுப்பு நடத்தி, குற்றச்சாட்டுக்கு ஆளாகிறவங்களுக்கு எச்சரிக்கைகூட தரலாம்!’’
- அய்யனார் ராஜன்