தமிழ்ப் பெண்களை தமிழ்ப் படத்தில் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்படிக் கொடுப்பினை பெற்ற படம் அம்மா கிரியேஷன்ஸின் 'அரவான்’. இயக்குநர் ஜனநாதனால் கண்டெடுக்கப்பட்ட தன்ஷிகா, பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழர் பகுதிக் கதை சொல்லும் ‘அரவானு’க்காக வசந்தபாலனால் தேர்வு செய்யப்பட்ட தமிழச்சி. ஆறடி உயர நாயகன் ஆதிக்கென்றே அளவெடுத்து செய்தது போல அம்சமாக இருக்கும் தன்ஷிகாவிடம் பேசினோம்.
‘‘உங்களைக் கண்டெடுத்தவர் ஜனநாதன்னா, பெண்டெடுத்தவர் வசந்த பாலன்னு சொல்லலாமா... ‘அரவான்’ல ரொம்பக் கஷ்டப்பட்டீங்க போலிருக்கே..?’’ - கேட்டதும் சிரித்த தன்ஷ், தன்யனாக்கினார்.
‘‘வசந்தபாலன் சார் மாதிரி ஒரு கடுமையான உழைப்பாளியைப் பார்க்க முடியாது. ஒரு அற்புதமான படைப்பைத் தர, ஓய்வே இல்லாமல் உழைக்கக் கூடியவர். அனேகமா படம் முடிஞ்சு இப்பதான் அவர் ரிலாக்ஸாகியிருப்பார்னு நினைக்கிறேன். அதனால என்ஜாய் பண்ணித்தான் அவர் டைரக்ஷன்ல நடிச்சேன். காடு மேடெல்லாம் ஷூட்டிங் பண்ணியதுல ஒரு ரத்தக்காயம் இல்லாத நாளைப் பார்க்கிறது அரிதா இருந்ததுங்கிறது நிஜம். ஆனா அது எல்லாமே படத்தோட நேர்த்திக்குத்தானே தவிர, ஆர்ட்டிஸ்டைக் கஷ்டப்படுத்த இல்லை...’’ என்று உற்சாகமாகித் தொடர்ந்தார்.
‘‘நான் நகரத்துல வளர்ந்த பொண்ணு ன்னாலும் என்னை ஒரு பண்டைய கிராமத்துப் பெண் கேரக்டர்ல நடிக்க நம்பிக்கை வச்சுத் தேர்ந்தெடுத்தவர் வசந்தபாலன் சார். முதல்ல படத்தோட லைன் சொன்னார். அந்த ஃபீல் பிடிச்சிருந்தது. போட்டோ செஷன் வச்சு என் படங்களைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆன அவர், உடனே ஓகே பண்ணினார்.
என்னை வச்சு அவர் எடுத்த முதல் சீனே படத்தோட கிளைமாக்ஸ்தான். முதல்நாளே கிளைமாக்ஸான்னு அரண்டு போனாலும், டயலாக்குகளை வாங்கி நிறைய முயற்சிகள் எடுத்து நடிக்கத் தயாரானேன். ஒட்டுமொத்த படத்தோட உணர்ச்சியையும் தாங்கி நிற்கப் போற காட்சியா ஆனதால, தப்பே வந்துடக்கூடாதுன்னு நடிச்சேன். நான் வசனம் பேசி முடிச்சதும் கூடி நின்ன 500 பேரும் கைதட்டினாங்க. என்கூட அந்த சீன்ல ஆதியும், பசுபதியும் நடிக்கவே... யாருக்கு அந்த கைதட்டுன்னு புரியாம நின்னேன். ‘யு டிட் அ ஒண்டர்ஃபுல் ஜாப்...’னு டைரக்டர் சொன்னப்பதான் அது எனக்கான பாராட்டுன்னு புரிஞ்சது...’’

‘‘படத்துல ‘நிலா... நிலா...’ பாடல்ல ஆதியோட செம ரொமான்ஸ் போல இருக்கு..?’’
‘‘இன்னைக்கு கிராமங்கள்ல இருக்கிற பெண் தெய்வமான ‘வனப் பேச்சி’ ங்கிற கேரக்டர் தான் என்னது. அரவானுக்காக உயிரையும் கொடுக்கிற கேரக்டர். அதை விளக்கத்தான் திருமணமான நிலைல, அத்தனை நெருக்கம் காட்டி நடிக்க வேண்டி வந்தது. உங்க கண்ணுக்கு ரொமான்ஸ் மட்டும் தான் தெரிஞ்சது. ஆனா பாடலுக்கான லீட்ல நான் ஓடும் போது கற்கள் தடுக்கி கீழே விழுந்ததுல கால் முட்டியெல்லாம் ரத்தம். அடுத்த சீனே, பாறைல முட்டி போட்டு நிற்கிற சீன்.
எனக்காவது பரவாயில்லை. ஒரு சீன்ல 150 கிலோ எடையுள்ள ஒரு எருமைக் கன்னுக்குட்டியைத் தூக்கிக்கிட்டு ஓடணும் ஆதி. சரியா வரணும்ங்கறதுக்காக அது போல ஆறு டேக்குகளுக்குப் பல மைல் ஓடினார். பாவம்...’’ என்ற தன்ஷிகாவிடம், ‘‘படத்துல ஆதியுடனான காதல் நிஜத்திலும் வந்துடுச்சா..?’’ என்று இயல்பாகக் கேட்டு வைத்தோம்.
‘‘ஆதியுடன் எனக்குப் படத்துல வந்தது பதினெட்டாம் நூற்றாண்டுக் காதல் மட்டும்தான். செய்யும் தொழிலைக் காதலிக்கத் தெரிஞ்சவங்களுக்கு வேற காதல் வராது. படிப்பைப் பாதியில விட்டுட்டு நடிக்க நேர்ந்திருக்குன்னா, இங்கே எனக்கு ஏதோ சாதிக்க வேண்டியிருக்குன்னு அர்த்தம். அதுக்காகவே டைரக்டர்கிட்ட போராடி டப்பிங்கையும் நானே பேசியிருக்கேன்...’’ என்றார் தன்ஷிகா தன்னம்பிக்கை ஷிகாவாக.
ஸாரி... ராங் கொஸ்டியன் டூ ரைட் பெர்ஸன்..!
- வேணுஜி
அட்டை மற்றும் படங்கள்:புதூர் சரவணன்
நன்றி: ஸ்டுடியோ செட் ஃபயர்