பட்டிமன்றமும் இந்த பாப்பையாவும்



அம்மாகிட்ட எவ்வளவோ சொல்லிப் பாக்குறேன்... ‘வாசுதேவனோட காதலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லே’ன்னு... அம்மா நம்பலே. ‘ஏண்டா உனக்கு இந்த வேண்டாத வேலை’ன்னு வெளுத்து வாங்கியிருச்சு. ‘சரி, அந்தப் பயலோட சகவாசம் வச்சுக்கிட்டதுக்கு கிடைச்ச பரிசு இது’ன்னு எல்லாத்தையும் வாங்கிக்கிட்டேன்.

ஓடிப்போன அந்தப் படுபாவிப்பய, ஒருவாரம் கழிச்சு எனக்கு கடிதம் எழுதுறான். ‘அண்ணே... நானும் என் நாயகியும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்ல கல்யாணம் முடிச்சிட்டோம். கையில இருந்த காசெல்லாம் செலவாகிருச்சு. உன் கையில பணமிருக்காதுன்னு எனக்குத் தெரியும். என் நாயகியோட வீடு இந்த முகவரியில இருக்கு... அவளோட அம்மாவுக்கு நாங்க ஓடிவந்தது தெரியும். நீ அங்கே போயி, ‘மாப்பிள்ளை செலவுக்கு பணம் கேட்டார்’னு வாங்கி கீழே இருக்கிற முகவரிக்கு அனுப்பு. அதைச் செய்யாம, எங்க வீட்டுக்கு தகவல் சொல்லி, ஆளுகளை அழைச்சிக்கிட்டு இங்கே வந்தின்னா என்னைக் கண்டுபிடிக்க முடியாது. நீ அவமானப்பட்டுப் போயிருவே’ன்னு எழுதியிருக்கான். கீழே கும்பகோணத்துல உள்ள ஒரு அச்சகத்தோட முகவரி இருக்கு.

அந்தக் கடிதத்தை எடுத்துக்கிட்டு நேரா வாசுதேவனோட வீட்டுக்குப் போனேன். ‘நான்தான் உங்க மகனை அனுப்பி வச்சேன்னு நீங்கள்லாம் சந்தேகப்படுறதில நியாயம் இருக்கு. என் கூடவே சுத்திக்கிட்டு திரிஞ்ச பய அவன். ஆனா, என்கிட்டயே சொல்லாம இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிப்புட்டான். நீங்க என்னை நம்புறீங்களோ, நம்பலையோ... உங்க பையன் எனக்கு கடிதம் எழுதியிருக்கான். இதை வச்சு அவனைக் கண்டுபிடிக்கப் பாருங்க’ன்னு சொல்லி கடிதத்தைக் குடுத்தேன். அரை மனசோட கடிதத்தை வாங்கிப் படிச்சவங்க, ‘நீயும் எங்ககூட கிளம்பு’ன்னு சொல்லிட்டாங்க.

எனக்கு அம்மாவை நினைச்சு வயிறு கலக்கமெடுக்குது. தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு வீட்டுக்குப் போனேன். ‘வாசுதேவன் வீட்டுல என்னை ரொம்ப சந்தேகப்படுறாங்க. அவங்களுக்கு உண்மை தெரியணும்னா நான் போயே ஆகணும்’னு அம்மாகிட்ட சொன்னேன். என்ன நினைச்சுச்சோ... ‘சரிய்யா, பொண்ணு வீட்டுக்கும் தகவல் சொல்லி அவுகளையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வாய்யா’ன்னு அனுப்பிருச்சு. மொத்தம் அஞ்சு பேரு... கிளம்பிட்டோம்.
நேரா கும்பகோணம் போய் இறங்குனோம். பஸ் ஸ்டாண்டுக்கு எதிரிலேயே ஏதாவது சாப்பிட்டு கிளம்புவோம்னு சொன்னாங்க.

நான் ரொம்ப வீறாப்பா, ‘முதல்ல அவங்களை கண்டுபிடிக்கணும்... அப்பறம்தான் சாப்பாடெல்லாம்’னு சொல்லிட்டேன். அந்தக் கடிதத்தில இருந்த அச்சகத்தைத் தேடி நடக்குறோம்... வழியில ஒரு சின்ன சந்து. அங்க ஒரு டிபன் கடை இருக்கு. எனக்குப் பசியெடுக்கிற மாதிரி இருந்துச்சு. ‘சரிங்க, இங்கேயே சாப்பிட்டுப் போயிடுவோம்’னு சொன்னேன். ‘ஏண்டா கிறுக்குப் பயலே... பஸ்ஸ்டாண்டுக்கு எதிரிலேயே பெரிய ஓட்டல்கள்லாம் இருந்துச்சுல்ல. அதெல்லாம் விட்டுட்டு இங்கே சாப்புட கூப்புடுறியே’ன்னு வாசுதேவனோட மாமா திட்டத் தொடங்கிட்டார். ஜமீன் பரம்பரை ஆச்சே... ஆனா, சாப்பிட்டே ஆகணும்னு நான் உறுதியாச் சொன்னேன். ஏன் அவ்வளவு உறுதியா சொன்னேன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குக் காரணம் தெரியலே!

கடைக்குள்ள போயாச்சு. பல் தேய்க்கிறதுக்காக பாத்ரூம் பக்கம் போனேன் பாருங்க... மேலேயிருந்து, ‘உஸ்... உஸ்’னு ஒரு சத்தம். அண்ணாந்து பாக்குறேன். வாசுதேவன் பய. மேலேயிருந்து அழைக்கிறான்.  ‘பய படுகெட்டிக்காரன்... எங்கே கொண்டாந்து விட்டானோ, அங்கேயே கூட்டிக்கிட்டு வந்துட்டான்ல’ன்னு சொல்லிட்டு என்னை முறைக்கிறார் பெண்ணோட மாமா.

அதுக்கப்புறம் அவனையும் அந்தப் பொண்ணையும் மதுரைக்கு அழைச்சுக்கிட்டு வந்து தனியா வீடெல்லாம் குடுத்து, நல்லாத்தான் பாத்துக்கிட்டாங்க. ஆனா, இன்னைவரைக்கும் நான்தான் ரெண்டுபேரையும் வழியனுப்பி வச்சேன்னுதான் அவனோட சந்ததிகள் நம்பிக்கிட்டிருக்காங்க!இதை இவ்வளவு விரிவா ஏன் சொன்னேன்னா, எனக்கு ஏகப்பட்ட படிப்பினைகளைத் தந்த சம்பவம் இது. வாழ்க்கையை திடமா அமைச்சுக்கிற அளவுக்குத் திறமை இல்லாம, அறியாப்பருவத்தில இளவட்டங்கள் எடுக்கிற முடிவு இருக்கே... அது பெத்தவங்களை எப்படியெல்லாம் காயப்படுத்துதுன்னு பக்கத்தில இருந்து பாத்தேன். காதல் மேல எனக்குப் பெரிய மரியாதை உண்டு. அது ஆக்கபூர்வமான விஷயம்தான். ஆனா எது காதல், அதை எப்ப அனுபவிக்கணும்னு புரியாம நம்ம புள்ளைகள் நிறைய தடுமாறுதுகளேய்யா. வேலைவெட்டி எதுவுமில்லாம, ஒரு தகுதியையும் வளர்த்துக்கிடாம, காதலிக்கிறேன் பேர்வழின்னு சொல்லி, வீட்டைவிட்டு ஓடி வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிக்குதுகளே..!

காதலை உள்வாங்கிக்கவே ஒரு பக்குவம் வேணும். அன்புதானேய்யா காதலோட அடிப்படை. முந்தாநாள் அறிமுகமான ஒருத்தர் மேல அன்பு பாராட்டி, இவ்வளவு காலம் வளத்து ஆளாக்குனவங்களோட அன்பை உதாசீனப்படுத்திட்டுப் போறது எந்த வகையில சரியா இருக்கும்? நியாய, அநியாயங்களை அலசிப்பாத்து தீர்ப்புச் சொல்ற ஒரு பட்டிமன்ற நடுவரா மட்டும் இல்லாம, ரெண்டு பிள்ளைகளுக்கு தகப்பனா, நாலைஞ்சு பேரன் பேத்திகளுக்குத் தாத்தாவா நின்னு யோசிக்கிறபோதும் என்னால அந்த வலியை உளப்பூர்வமா உணரமுடியுதுய்யா...  

வாசுதேவனுக்கு காதலிக்கிற அளவுக்கு பக்குவமோ, வயசோ இல்லே. அப்போ அவனுக்கு 17 வயசு. 18 வயசுவரைக்கும் எல்லாருமே குழந்தைகள்தான்னு சொல்றாங்க. இந்த வயசுல ஏற்படக்கூடிய இயல்பான இனக்கவர்ச்சியை காதல்னு நம்பிட்டான். கல்யாணத்துக்குப் பிறகும் அவனுக்குப் பொறுப்பு வரலே. நிறைய கெட்ட சகவாசங்கள். சொல்லிப்பாத்தேன். திட்டிப்பாத்தேன். திருந்தலே. கடைசியா, காலம் அவனை தண்டிச்சிருச்சு. நோயில இருந்து அவனை மீட்க நிறைய முயற்சிகள் நடந்துச்சு. எதுவும் பலன்தரலே... ரொம்ப சிரமப்பட்டு இறந்து போனான். அவனோட துன்ப நாட்கள்ல ஆனமட்டும் தொடர்ந்து உதவிகள் செஞ்சேன். இப்பவும் அவனை நினைச்சா, நன்றிப்பெருக்குல என் கண்ணு கலங்குது!

வாசுதேவனைப் போலவே என் மனசுக்கு நெருக்கமான இன்னொரு நண்பர் அருணாசலம் சார். எம்.ஏ. முதல் வருடம் படிக்கிறபோது கிடைச்ச நண்பர். வயசுல மூத்தவரு. ரொம்ப கண்டிப்பானவரு. கூட்டுறவு சொசைட்டியில முதுநிலை ஆய்வாளரா வேலை செஞ்சார். வேலைக்கு லீவு போட்டுட்டு எம்.ஏ. படிக்க வந்திருந்தார். இவரோட தம்பி பழனிச்சாமி இன்டர்ல என்னோட படிச்சவர். அதனால என்னைப் பத்தியும், என் குடும்ப நிலை பற்றியும் எல்லா விபரமும் அருணாசலத்துக்குத் தெரியும். மேலமாசி வீதியில அவரோட மாமனார் வீட்டுல தங்கி படிச்சிக்கிட்டிருந்தாரு.

அப்போ ஒரு சைக்கிள் வச்சிருந்தேன். அதிலதான் கல்லூரிக்குப் போவேன். கல்லூரியில இருந்து திரும்பும்போது ரெண்டுபேரும் பேசிக்கிட்டே நடந்து வருவோம். வழியில கட்டாயப்படுத்தி சாப்பிடக் கூட்டிட்டுப் போயிடுவாரு. எனக்கு வெட்கமா இருக்கும். ‘கையில காசில்லே சார்’னு சொல்லுவேன்... ‘எனக்கு எல்லாம் தெரியும் சார்... நான் பாத்துக்கறேன்’னு சொல்லுவார்.
 
நான் தியாகராஜர் கல்லூரியில எம்.ஏ. சேந்ததே பெரிய கதை. பணம் கட்ட வழியில்லே. அங்கேஇங்கே கடன்பட்டு அட்மிஷன் ஃபீஸ் மட்டும் கட்டிட்டேன். ‘ஸ்காலர்ஷிப் வாங்கித் தர்றேன். தைரியமா படி’ன்னு எங்க துறைத்தலைவர் சொல்லியிருந்தார்.  டேர்ம் ஃபீஸ், எக்ஸாம் ஃபீஸ் எதுவும் கட்டலே. மனசுக்குள்ள பெரிய சுமையா என்னை அழுத்திக்கிட்டிருக்கு. இந்த வேளைலதான் என்னை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குன இன்னொரு சம்பவம் நடந்துச்சு.
நான் நல்லா படம் வரைவேன்ங்கிறது கல்லூரியில பலபேருக்குத் தெரியும். ராஜமாணிக்கனார்னு எங்க துறைப் பேராசிரியர். சில படங்களைக் குடுத்து, Ôஇதை அப்பிடியே வரைஞ்சு குடுடாÕன்னு கேட்டாரு. நானும் வரைஞ்சு குடுத்தேன். அதைப் பார்த்த எங்க கல்லூரியோட நூலகர்  அவரு பேரு வேணாம் ‘எனக்கும் கொஞ்சம் படம் வரைஞ்சு குடு’ன்னு கேட்டார்.

 நல்ல மனுஷன்தான். அது தேர்வு நேரம். படிக்க ஏகப்பட்ட பாடங்கள் இருந்துச்சு. அதுபோக, இடதுகை மார்பு பக்கமா ஒரு கட்டி வந்திருச்சு. அந்தத் தொந்தரவு வேற... தேர்வுக்கு பணம் கட்டமுடியலேங்கிற கவலை ஒருபக்கம். அவர்கிட்ட போய், ‘லீவு விட்ட பிறகு வரைஞ்சு தர்றேன்’னு சொன்னேன். ஆனா, இதை அவர் வேறுவிதமா எடுத்துக்கிட்டார். அதுக்காக அவர் குடுத்த தண்டனை இருக்கு பாருங்க, அது என் வாழ்க்கையையே மாத்தப் பாத்துச்சு.

அவர் என்ன பண்ணிட்டாரு... நேரா எங்க துறைத்தலைவர்கிட்டப் போயி, ‘பாப்பையா இருக்கானே. அவன்  உங்களைப் பத்தி வெளில தப்புத்தப்பா பேசுறான். உங்களுக்குப் புடிக்காதவங்ககிட்ட எல்லாம் சகவாசம் வச்சிருக்கான். அவனோட நடவடிக்கையே சரியில்லே’னு ஓதி விட்டுட்டாரு. சும்மாவே அங்கே அப்போ ஏகப்பட்ட அரசியல். அதுக்குள்ள என்னையும் சேர்மானம் சேத்துவிட்டுட்டாரு..
 
இதெல்லாம் எனக்குத் தெரியாது. பல்கலைக்கழகத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் குடுத்துக்கிட்டு இருக்காங்க. எல்லாரைப் போலவும் நானும் வரிசைல நிக்கிறேன். எனக்கு மட்டும் குடுக்கலே. ‘உனக்கு குடுக்கக்கூடாதுன்னு பிரின்சிபல் சொல்லியிருக்காரு’ங்கிறாங்க. எனக்கு கண்ணு ரெண்டும் இருட்டிக்கிட்டு வருது. பக்கத்துல நின்ன அருணாசலம் என்னைத் தோளோட அணைச்சுக்கிட்டாரு.
சரி... அடுத்த வாரம்சந்திப்போமா!
சாலமன் பாப்பையா