குங்குமம் ஜங்ஷன்



ஹாட் முத்தம்!

பரபரப்பு கிளப்பி தங்கள் படத்தைப் பற்றிப் பேசவைக்க பாலிவுட் பிரபலங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்கள் ராணி முகர்ஜியும் வித்யா பாலனும். ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆவதற்கு முன்னால் முக்கிய நகரங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகள் நடத்தி விளம்பரம் தேடுவதை பாலிவுட் ஸ்டார்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஜெசிகா லால் கொலை வழக்கு உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட ‘நோ ஒன் கில்டு ஜெஸிகா’ படம் ஜனவரி முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகிறது. ராணியும் வித்யாவும் இதில் இணைந்து நடிக்கிறார்கள். படத்தை பரபரப்பாக்க இருவரும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்க... அது தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது. இதைவிட பெரிய விளம்பரம் ஏது?

என்ன மர்மம்?

பெனாசிர் சுடப்பட்டு இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் பலரும் உண்மையில் அவருக்கு துரோகம் செய்வதாக குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. பாகிஸ்தானை ஆள்வது பெனாசிரின் கணவர். எல்லா பதவிகளிலும் இருப்பது அவரது கட்சி ஆட்கள். ஆனால் பெனாசிர் கொலை தொடர்பான விசாரணைக்கு உளவு அமைப்புகளும் உயர் அதிகாரிகளும் முட்டுக்கட்டை போடுவதாக ஐ.நா. நியமித்த விசாரணைக்குழு குற்றம் சாட்டியிருக்கிறது. இதில் என்ன மர்மம் இருக்கிறது?

கையால் ஓட்டும் கார்!

கண்டுபிடிப்புகளுக்குக் காரணிகளாக இருப்பது தேவைகளே. கும்பகோணத்தைச் சேர்ந்த எஞ்சினியர் உதயகுமாருக்கும் அப்படியான தேவை ஏற்பட்டது. போலியோ தாக்கி இரு கால்களும் செயலிழந்தாலும், கார் ஓட்டுவது இவரது கனவு. ஆனால், லைசென்ஸ் கிடைக்கவில்லை. உதயகுமார் சோர்ந்துபோகவில்லை. பாஸ்கரன் என்ற நண்பர், தான் வாங்கிய புத்தம்புது காரை வழங்க, டாக்டர் சந்திரசேகரன் ஆலோசனைகள் தர, நான்கே வருடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கார் ரெடி. இதில் ஆக்சிலேட்டர், கியர், பிரேக், கிளட்ச் என அனைத்தையும் கைகளாலேயே இயக்கலாம். ஓட்டிக் காண்பித்து லைசென்ஸும் வாங்கிவிட்டார்.

தண்ணீரில் நடக்கலாம்!

எந்த வித்தையும் கற்றுக்கொள்ளாமலே நீங்கள் தண்ணீரில் நடக்கலாம் காஷ்மீர் போனால். ஆம்! காஷ்மீரின் தால் ஏரி உறைந்து தண்ணீர் பனிக்கட்டி ஆகியிருக்கிறது இந்த சீசனில். சுற்றுலா பயணிகள் அதன்மீது உற்சாகமாக நடக்கிறார்கள். கடைசியாக கடந்த 86ம் ஆண்டு இப்படி உறைந்ததாம்.

டிராக்டரும் ஓட்டுவோம்!

‘இதெல்லாம் ஆம்பிளைங்க சமாசாரம்’ என்று சொல்லி ஒதுக்கி வைத்த பல வேலைகள் இன்று பெண்கள் மயமாகிவிட்டன. நேற்றுவரை நாற்று நட்டு களையெடுத்த பெண்கள் இன்று டிராக்டரில் ஏறி உழவு செய்யவும் தொடங்கி விட்டார்கள். ஆள் பற்றாக்குறையால் விவசாய வேலைகள் ஸ்தம்பிக்கும் நிலை. இந்நிலையில் திருப்பூரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மகளிர் பண்ணைக்குழுக்கள் அமைத்து, அக்குழுவில் இடம்பெறும் பெண்களுக்கு டிராக்டர் ஓட்டுவது உள்ளிட்ட வேலைகளையும் கற்றுக்கொடுக்கிறார்கள். உடுமலை அருகே கொங்கல்நகரம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையும், மகேந்திரா டிராக்டர் கம்பெனியும் இணைந்து பெண்களுக்கு டிராக்டர் ஓட்டும் பயிற்சியை அளித்து வருகிறார்கள். 25 நாள் பயிற்சி; 30 பெண்கள் பங்கேற்றுள்ளார்கள். திருப்பூர் மாவட்ட கிராமங்கள் அனைத்திலும் இப்பயிற்சி முகாம் நடக்கவுள்ளது.

துப்பாக்கி பிடிக்கும் மாணவிகள்!

காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்களின் எழுச்சிக்குப் பிறகு கிரிக்கெட் தவிர்த்த பிற விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வம் திரும்பத் தொடங்கியுள்ளது. குறிப்பாக துப்பாக்கி சுடுதல். கோவையில் இரண்டு தனியார் பள்ளிகள் தங்கள் வளாகத்திலேயே துப்பாக்கி பயிற்சி அளிக்கின்றன. பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் 100 மாணவர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள். இதில் பலர் மாணவிகள். 57 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த பயிற்சிக்களத்தின் ஒரு பகுதியில் இப்போது எல்.எம்.டபிள்யூ. நிறுவனம் ரூ.3.50 லட்சம் செலவில் குளிர்சாதன உள்ளரங்கு துப்பாக்கிக் களத்தை உருவாக்கியிருக்கிறது. ரைபிள், ஏர்பிஸ்டல் ரக துப்பாக்கிகளால் பயிற்சி பெறலாம். இதை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

சச்சின், சாய்னா, ஜ்வாலா!

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனோடு இணைத்து கிசுகிசுக்கப்பட்ட பாட்மின்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா அடுத்த பரபரப்பு கிளப்பியிருக்கிறார். ‘‘சச்சின் டெண்டுல்கர், சாய்னா நெஹ்வாலைவிட நான்தான் இந்த ஆண்டு விருதுகளுக்குத் தகுதியானவள்’’ என அதிரடியாக பேட்டி கொடுத்திருக்கிறார். ‘‘பின்னே என்ன? சச்சினுக்கு 20 வருஷங்களாக கொடுக்கிறார்கள். சாய்னாவுக்கும் இந்த வருஷம் முழுக்க கொடுக்கிறார்கள். கொடுத்தவருக்கே திரும்பத் திரும்ப கொடுத்தால் எப்படி? அப்புறம் எங்களை எல்லாம் எப்போது கண்டுகொள்வது?’’ என்பது அவரது ஆதங்கம்.

தகவல் களஞ்சியம்!

நாளுக்கு நாள் சென்னை விரிந்துகொண்டே செல்கிறது. புதிது புதிதாக ஏரியாக்கள் உருவாகின்றன. ஏதேனும் முகவரியை விசாரித்தால் ஆட்டோக்காரர்களே விழிக்கிறார்கள். சென்னையின் முழுமையான தகவல்களை உள்ளடக்கி ஒரு டைரக்டரியை வெளியிட்டிருக்கிறது ‘கெட்இட்’ நிறுவனம். இந்த டைரக்டரியில், அவசர கால சேவைகள், பொதுவசதிகள், கோயில்கள், சுற்றுலாத் தலங்களின் தொலைபேசி எண்களோடு, 1 லட்சத்து 10 ஆயிரம் தொழில்முனைவோர் பற்றிய விபரங்கள் அகர வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது.