புத்தாண்டு சபதம் 2011



சபதம் எடுப்பதே அதை உடைப்பதற்குத்தான் என வேடிக்கையாகச் சொல்லப்படுவதுண்டு. ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்கிற ரீதியில், ஆண்டுகள் மாறினாலும் பலரின் சபதங்கள் மாறுவதில்லை. பிரபலங்கள் இந்த விஷயத்தில் எப்படி? புத்தாண்டு பிறந்த வேளையில் அவர்களைச் சந்தித்ததில் சபதங்களும் பிறந்தன!

ஸ்ரேயா
சமீபத்துல மும்பையில மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்பா தொடங்கினேன். ‘மத்தவங்களுக்கு உதவணும்!’ என்னோட இந்த வருஷ சபதம் மட்டுமல்ல... நிரந்தர சபதமும் இதுதான்!

பார்த்திபன்
2010ல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ தவிர என்னோட வேறெந்த படமும் ரிலீசாகலை. 2011ல கண்டிப்பா 3 படங்கள் ரிலீஸ் பண்ணி வெற்றி பெற வைக்கணும்!

வாசுகி
நம்மைச் சுத்தி பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு எனர்ஜிகளுமே இருக்கு. நாம செய்யற விஷயங்களையும், நம்மைச் சுத்தி இருக்கிற நபர்களையும் பொறுத்தது அந்த எனர்ஜிகள். இந்தப் புது வருஷத்துலேர்ந்து நெகட்டிவ் எனர்ஜியை அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு, அதுலேர்ந்து விலகி இருக்கப் போறேன். அப்புறம்... வேலை, வேலைனு ஓடறதுல குடும்பம், நட்புனு எத்தனையோ நல்ல விஷயங்களை மிஸ் பண்றோம். யாருக்கு நாம முக்கியமா இருக்கோமோ, அவங்களுக்காகவும் நேரம் ஒதுக்கியே தீரணுங்கிற சபதத்தையும் எடுத்திருக்கேன்.

பழநிபாரதி
புத்தாண்டு சபதம் என்பது செயற்கையானது. வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுமே மனிதனுக்கு சவாலாகத்தான் இருக்கிறது. காலத்தின் கணக்குக்குள் மனிதன் அடங்குவது இல்லை. கடிகாரத்தின் வட்டத்துக்குள்ளும், நாட்காட்டியின் தாள்களுக்குள்ளும் சிக்கித் தவிக்கிறது மனித வாழ்க்கை. நாட்காட்டியின் ஒவ்வொரு தாளைக் கிழிக்கிறபோதும், உயிரின் ஒரு இழை அறுந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு கணமும் நாம் புதிதாய் பிறந்திருக்கிறோம் என்று மனதை உற்சாகமாக வைத்திருப்பதுதான் முக்கியம்.

பாரதி பாஸ்கர்
புத்தாண்டு சபதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த சபதங்கள் எடுக்கப்படும் நிமிடத்தோடு மறந்து போகக்கூடியவை. நான் அப்படி ஏதும் சபதங்களை எடுத்துக் கொள்வதும் இல்லை.

எம்.எஸ்.பாஸ்கர்
ஒவ்வொரு வருஷப்பிறப்பு அன்னிக்கும், போன வருஷத்தில யாரோட மனசும் புண்படும்படியா நடந்திருக்கோமான்னு ஒருதடவை யோசிச்சுப் பாப்பேன். இந்த வருஷம் எந்த சூழ்நிலையிலயும் மத்தவங்க மனசு புண்படுற மாதிரி நடக்கக்கூடாதுன்னு சபதம் எடுத்துக்குவேன்.

முரளிவிஜய்
எல்லா கிரிக்கெட் பிளேயர்ஸுக்கும் இருக்கிற கனவுதான். இந்த வருஷம் நடக்கப்போற உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில இடம் பிடிக்கணும். உலகக்கோப்பையை வாங்குற இந்திய வீரர்கள்ல நானும் ஒருத்தனா இருக்கணும்.

அபிநயா
தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி என்னை ஒரு குழந்தை மாதிரி கொண்டாடுது. வர்ற வருஷத்தில தமிழ்ல முன்னணி நடிகைங்கிற பேர் எடுக்கணும். இதுதான் என் சபதம். இது நிறைவேற ஆண்டவன் கருணையும் வேணும்.

உஜ்ஜயினி
உருப்படியான விஷயங்களை மட்டுமே பண்றதும், ஆரோக்யமா இருக்கிறதும் தான். ஆரோக்யம்னு பார்த்தா, சரியான எடையை மெயின்டெயின் பண்றதுதான் முக்கியம். இப்போதைக்கு நான் ரொம்ப மோசமான ஷேப்ல இருக்கேன். முன்னைவிட நிறைய வெயிட் குறைச்சிருக்கேன்னாலும், அது போதாது. இன்னும் நிறைய குறைக்கணும்!


மயில்சாமி அண்ணாதுரை
கடந்த வருஷத்துல என்னென்ன குறைகள் இருந்ததோ அதை இந்த வருஷம் சரி செய்யணும்னு நினைப்பேன். 2010&ல நிறைய வெளியிடங்களுக்குப் போய் வந்தேன். அதை குறைச்சுக்கலாம்னு நினைக்கிறேன். அதே நேரத்துல மாணவர்கள் தொடர்புள்ள நிகழ்ச்சிகள்ல நிச்சயம் கலந்துப்பேன். தன்னார்வ அமைப்புகளோட இணைந்து என்னால முடிஞ்ச உதவிகளை செய்யணும்.

விஜய் ஆன்டனி
டைம் மேனேஜ்மென்ட்டுங்கிற விஷயத்துல நான் ஜீரோ. அதை இந்த வருஷம் சரி பண்ணியாகணும். தினம் 8 மணி நேரம் தூங்கியே ஆகணும். என்னோட வேலை சார்ந்த ஒவ்வொரு விஷயங்களுக்கும் எவ்வளவு நேரத்தை செலவிடறேங்கிறதை கணக்கு எழுதி வைக்கணும். இதுவரைக்கும் எப்ப தோணுதோ, அப்பதான் ஜிம் பக்கம் எட்டிப் பார்த்திட்டிருக்கேன். புது வருஷத்துலேர்ந்து ரெகுலரா ஜிம் போகணும்.

கார்த்தி
எவ்வளவு லேட்டா வந்தாலும் அரை  மணி நேரம் உடற்பயிற்சி செய்துட்டுத்தான் தூங்கப்போகணும்னு முடிவெடுத்திருக்கேன். மாசத்துக்கு ஒரு புத்தகமாவது படிக்கணும்னும் சபதம் ஏற்றிருக்கேன்.
தொகுப்பு: ஆர்.வி., நீலா, திரவி, குருவி