கச்சேரி



‘‘ஹலோ சுப்பண்ணா! ராமய்யர் பேசறேன். உமக்கு சங்கீதக்காராளோட லக்ஷணம் என்ன தெரியுமா?’’

‘‘ஓ தெரியுமே! ஆம்பளை வித்வானா இருந்தா நல்ல கலர் ஜிப்பா, பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், ஏழு, எட்டு பவுன்ல செயின் ஜிப்பாவுக்கு மேல தொங்கணும். கையில நல்ல பட்டையா ப்ரேஸ்லெட், ஏழோ, எட்டோ மோதிரம் கையில. வித்வாம்சினியா இருந்தா நல்ல பட்டுப்புடவை, ஜிமிக்கி, நகைநட்டு, இத்தியாதி... சரிதானே?’’

‘‘சுப்பண்ணா! உமக்கு தெரிஞ்ச லக்ஷணம் இவ்வளவுதான். சங்கீதக்கார லக்ஷணத்துல வஸ்திரம், வபுஸ் (சரீரம்), வாக்கு, வித்தை, வினயம் என்று ஐந்து ‘வ’காரங்கள் சேர்ந்திருக்க வேண்டும். நல்ல ஜரிகையோட ஸ்பெஷல் தறியில் தயாராகற வேஷ்டி அல்லது பட்டுப்புடவை, சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய மலர்ந்த புன்னகை முகம், கீர்த்தனைய பாடி பாடி பகவத் குணத்தை சொல்லிச் சொல்லி மெருகேறின வாக்கு, சங்கீத நிபுணங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் புலமை, அடக்கம் இதுதான் நான் சொன்னது...’’

‘‘ஐயர்வாள்! இப்படி எல்லா குணங்களும் உள்ள சங்கீதக்காரா உண்டா..?’’

‘‘ஓய்! இது மட்டுமல்ல. கந்தர்வக் குரல், அபார கற்பனைத் திறமை, மின்னல் வேகத்தில் பேசும் சங்கதிகள், எந்த மொழியில் வேண்டுமானாலும் பாடற பாடாந்திரம், நல்ல குரு, லய விஷயங்கள்ல ஒரு பிடிப்பு... இப்படி எல்லாம் சேர்ந்த கலவையா சங்கீதக்காரரை பார்த்திருக்கீரா?’’

‘‘நீங்க சொல்றது சுதா ரகுநாதனைத்தானே... ஐயர்வாள்! பல வருடங்களாக பல்லாயிரம் ரசிகர்களை தொடர்ந்து சொக்க வைக்கிற திறமையையும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும்!’’

‘‘உண்மைதான். கிருஷ்ண கான சபையில அவரோட கச்சேரி கேட்ட அனுபவம்தான் இப்படி யோசிக்க வைச்சுது. கானடா ராகத்துல ‘நீ அல்லால் இனி யாரென்னைக் காப்பார்’ என்று சுதா பாடினதைக் கேட்டு ரசிகர்கள், ‘நீ அல்லால் இனி யாரெங்களை சொக்க வைப்பார்’ என்று சொல்லாமல் சொன்னார்கள். வயலின் வாசிச்சது ஸ்ரீராம்குமார். இவர் பக்கத்துல இருந்தா பல பாட்டுக்காராளுக்குச் சௌகரியம். எந்த வார்த்தைய மறந்தாலும் எடுத்துக் கொடுப்பார்.’’

‘‘வயலின் வாசிப்பாரோல்லையோ?’’

‘‘ஓய்! வயலின்ல அப்படியே சங்கதிகளை கூடவே வாசிச்சு, ரெட்டை பாட்டு மாதிரி உணர்வைக் கொடுப்பார்னு சொன்னேன். அவ்வளவு சுருதி சுத்தம். திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்கத்தோட சுதா கச்சேரின்னா ரசிகாளுக்கு கொண்டாட்டம். ‘நீவாடனே’ பாட்டு. பிறகு அன்னிக்கு கரஹரப்ரியா ராகம்தான் மெயின்!’’

‘‘இந்த ராகம் செம்மங்குடி ஐயர்வாளோட சொத்துதானே?’’

‘‘ஆமாம் ஓய்! அவர் ஆண்டு அனுபவிச்சுவிட்டு, பெரிய மனசோட சங்கீத உலகிற்கு உயில் எழுதி வச்சுட்டுப் போன சொத்துதான் கரஹரப்ரியா.’’

‘‘ஃப்ரீயா ‘கரகர’ன்னு மெல்றதுக்குன்னு நிறைய அயிட்டம் சொல்றேளே ஐயர்வாள்!’’

‘‘இதைக் கேளும் ஓய்! சுதாவோட கரஹரப்ரியா அவ்வளவு சுகம். ‘பக்கலநிலபடி’ கீர்த்தனை, தியாகராஜர் எவ்வளவு பெரிய மகான்! ‘சந்திரனைப் பழிக்கும் முகத்தையும், அழகிய பற்களையுமுடைய அன்னை சீதையே! லக்ஷ்மணனே! ராமபிரானுக்கு இருபுறமும் நின்று நீங்கள் சேவை புரியும் மர்மத்தை எனக்குத் தெரிவிக்கலாகாதா?’ அப்படின்னு இந்தப் பாட்டுல கேக்கிறார்...’’

‘‘தியாகராஜர் இந்தப் பாட்டுல சொன்ன மாதிரி சுதாவுக்கு இருபுறமும் ஸ்ரீராமும், வைத்தியும் சங்கீத சேவை செஞ்சு கச்சேரிய உசத்திட்டாங்கன்னு சொல்லுங்க...’’

‘‘ஆமாம் சுப்பண்ணா! தியாகராஜர் பாட்டுல ராமர் நடுவுல இருக்கார். இந்தக் கச்சேரியில பின்னால ராமன் மோர்சிங். ராமன் மோர்சிங் ரெட்டை தம்புரா மாதிரி. அதுதானே ஆதார சுருதி!’’

‘‘சரியா சொன்னீங்க...’’

‘‘சுப்பண்ணா! மியூஸிக் அகாடமியில மான்டலின் ஸ்ரீநிவாஸ் கச்சேரி...’’

‘‘ஆஹா! அவர் பிறவிக் கலைஞர் இல்லையா?’’

‘‘ஆமா! சர் யெஹுதி மெனுஹின், பீதோவன் போன்று ஸ்ரீநிவாஸும் பிறக்கும்போதே சங்கீத சம்பத்தோட முழுமையா பிறந்தவர். ரெண்டு அடி மான்டலின் வாத்தியத்துல, நாலு ஸ்தாயி மின்னல் வேகத்துல பிசிறில்லாம வாசிச்சு, சுகமா கேட்கறவாளோட இதயத்தைத் தொட்டவர். அன்னைக்கு மான்டலின் கச்சேரில பக்க வாத்தியங்கள் வயலின் ஸ்ரீநிவாஸ ராவ், மிருதங்கம் ப்ரவீன், கஞ்சிரா செல்வகணேஷ், மோர்சிங் கண்ணன். கல்யாணி அடதாள வர்ணம். ‘கணநாயகம்’ முத்துஸ்வாமி தீட்சதர், ருத்ரப்ரியா ராகத்துல பாட்டு. அப்புறம் ஒரு தோடி ராகத்த வாசித்த மான்டலினுக்கு ஒரு கோடி கொடுக்கலாம். ‘ராவே ஹிமகிரி’ங்கற சியாமா சாஸ்திரியோட ஸ்வர ஜதிய ஸ்ரீநிவாஸ் வாசிச்ச அழகு சொல்லி மாளாது. ப்ரவீன் மிருதங்கத்துல பரம சௌக்யம்.’’

‘‘அண்ணா! இப்ப எல்லாம் டான்ஸுக்கு உள்ள அயிட்டங்களான ஜதிஸ்வரம் போன்றவை எல்லாம் பாட்டுக் கச்சேரிக்கு வந்துடுத்தா?’’

‘‘ஓய்! உமக்கு அரைகுறை ஞானம்னு அடிக்கடி காமிச்சிக்கிறீர். நான் சொன்னது ஸ்வர ஜதி. சியாமா சாஸ்திரியோட அற்புதமான படைப்பு அது. கச்சேரில அதிகமா யாரும் தொடறதே இல்ல. அப்படியே டான்ஸ் அயிட்டத்தை பாடினா என்ன இப்போ? பாட்டு, பரதம், நாடகம்னு முக்கனிகள் சேர்ந்தது ஓய் நம்ம மேடைகள்!’’

‘‘பாட்டுல பரதம் சரி. நாடகம் எங்கண்ணா வந்தது?’’

‘‘பாடும்போது நடிக்கறோமில்லையோ! நான் சொல்றது கைய பெரிசா ஆட்டி பாடும்போது வயலின் வித்வான் கண்ல குத்தி, அவர் கண்லேர்ந்து கண்ணீர் மல்க ஆரம்பிச்சி ரணகளமாகும் போது, ரசிகா எல்லாம், ‘ஆஹா! என்ன பாவமான பாட்டு... வயலின் வித்வானே கண்கலங்கிட்டார்’னு நினைக்க, மிருதங்க வித்வான் குலுங்கிச் சிரிப்பாரு...’’

‘‘ஏன் அண்ணா! மிருதங்க வித்வான் பக்கம் ரொம்ப யாரும் கை நீட்டறதில்லையே..?’’

‘‘அவர்தான் மிருதங்கத்தோட கல், புல் எல்லாம் எடுத்துண்டு வந்துட்டு, பாடறவர் கண்ல படறா மாதிரி கல்ல மட்டும் வச்சுடுவார்.’’

‘‘ஓஹோ! அந்த பயத்துலதான் கண்ணுல அடிக்கடி கைய ஒத்திக்கறாளா?’’

‘‘ஓய்! விஷயத்துக்கு வாரும். ஸ்ரீநிவாஸ் அன்னிக்கு மெயினா வாசிச்ச நடபைரவி என்ன அற்புதம்..! அவர் சொன்னா அந்த ராகம் நடக்கறது; உட்காருது; ஓடறது. என்ன ஒரு கன்ட்ரோல். தெய்வப்பிறவிப்பா ஸ்ரீநிவாஸ். ப்ரவீன், செல்வகணேஷ், கண்ணன் காம்பினேஷன் ரொம்ப ஜோர்.’’

‘‘கேட்கவே சுகமா இருக்கு ஐயர்வாள்!’’

‘‘சுப்பண்ணா! பார்த்தசாரதி சபையில சஷாங் புல்லாங்குழல். இவரும் ஒரு பிறவிக் கலைஞர்தான். இவருடைய இசையும் தேவ கானம்தான். அன்னிக்கி கச்சேரில அக்கரை சுபலக்ஷ்மி வயலின். பிரபல மிருதங்க வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் மிருதங்கம்.’’

‘‘ஐயர்வாள்! மிருதங்க வித்வான் கோபாலகிருஷ்ணன் சகலகலா வல்லவராச்சே?’’

‘‘ஆமாம். பாட்டு, வயலின், மிருதங்கம்... இப்படி பல விஷயங்கள் தெரிஞ்சவர். சஷாங் புல்லாங்குழலுக்கு அப்படி ஒரு நாதமயமான வாசிப்ப வாசிச்சார் அன்னிக்கு. சஷாங்கிட்ட புல்லாங்குழலே ஐக்கியம் ஆயிடுச்சுன்னு சொல்லலாம். குளுமை, இனிமை, வேகம், விரலடி சங்கதின்னு பல விஷயங்கள் அந்தக் குழல்ல. சாருமதி ராகத்த அவர் வாசிச்ச அழகுல, சுபலக்ஷ்மியும் அக்கறையோட வாங்கி வாசிக்க, ரசிகர்கள் மனசுல எழுந்த சந்தோஷங்கள் அலையா மோதி சக்கரையா இனிச்சு, இக்கரைக்கு வர்றத்துக்கு பல நேரம் ஆச்சு.’’
‘‘ஐயர்வாள்! சாருமதி ராகம்னாலே, ‘மோக்ஷமுகலதா’ பாட்டுதான் ஞாபகம் வருது...’’

‘‘சரியா சொன்னீர். அததான் வாசிச்சார். சங்கீதம்னா என்னன்னு தியாகராஜர் எவ்வளவு அழகா சொல்லியிருக்கார் இதுல. ‘(உயிர்) மூச்சு மற்றும் (உடல்) வெம்மையின் சேர்க்கையினால், பிரணவ நாதம் ஏழ் பதங்களாகித் திகழ, வீணை இசையில் திளைக்கும் சிவனின் உள்ளம் அறியுமா? சாட்சாத்காரமே! உனது தூய பக்தி கலந்த இசை அறிவற்றோருக்கு முக்தி உண்டாக்குமோ?’ இந்த பக்தியோட சஷாங் வாசிச்சு, கோபாலகிருஷ்ணனின் மிருதங்க நாதத்தோட அந்த அரங்கத்தையே நாதமயமாக்கி விட்டா...’’

‘‘ஐயர்வாள்! உம்ம அடுத்த வார விமர்சனத்துக்காக இப்போ இருந்தே காத்திண்டிருக்கேன்!’’
(தொடரும்)
சங்கீத சமுத்திரன்