சுட்ட கதை! சுடாத நீதி!முழுமையாக விசாரித்து அறியாமல் எதிலும் இறங்கக்கூடாது!

கடலை ஒட்டியிருந்த அந்த நீர்ப்பரப்பில், ஒரு ஓய்வுநாளில் படகில் பயணித்தபடி மீன் பிடிக்க வந்தான் அவன். சிறிய அந்தப்படகில் இருந்தபடி தூண்டில் போட்டபடி பாட்டுக் கேட்பதும், சாப்பிடுவதும் அவனுக்குப் பொழுதுபோக்கு. கடல்நீர் பின்வாங்கி நிலத்துக்குள் வரும் அந்த நீர்ப்பரப்பில் அலைகள் ஆர்ப்பரிக்காத அமைதி நிலவும். ஆழமான நீர்ப்பரப்பு என்பதால் பெரிய
மீன்கள்கூட தூண்டிலில் சிக்கும்.

பல மாதங்களாக ஆபீஸ் வேலையாக வெளிநாடு போயிருந்துவிட்டு, இப்போதுதான் ஊருக்குத் திரும்பியிருந்தான் அவன். வந்த மறுநாளே இங்கு வந்துவிட்டான். மாதக்கணக்கில் பயன்படுத்தாது போட்டிருந்த தூண்டில் மக்கர் செய்ய, அதை சரிசெய்யும் பணியில் மூழ்கியிருந்த அவன், படகில் இருந்த ஓட்டையை கவனிக்கவில்லை. சில நிமிடங்களில் தண்ணீரில் படகு கவிழ்ந்துவிட, கவிழ்ந்த படகு மீது தாவி உட்கார்ந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.

அவனுக்கு நீச்சல் நன்றாகத் தெரியும். ஆனால் இந்த தண்ணீரில் ஆட்கொல்லி முதலைகள் நிறைய! பயந்தபடி இருந்தவனுக்கு தூரத்துக் கரையில் ஒரு ஆள் நிற்பது தெரிய, அவனிடம் சத்தமாக விசாரித்தான். ‘‘இங்க இருந்த முதலைங்க எல்லாம் காலியாகி நாலு மாசம் ஆச்சு!’’ என்று அந்த ஆள் சொல்ல, இவன் தைரியமாக தண்ணீரில் குதித்தான். கரையில் இருந்த ஆள் இவனை அதிர்ச்சியோடு பார்த்தான்.

‘‘அது எப்படி அவ்வளவு முதலைகளையும் காலி பண்ணீங்க?’’ என்று கரையில் நின்றவனிடம் கேட்டபடி நிதானமாக இவன் நீந்த, ‘‘கடல்ல இருந்து சுறா மீன் குட்டிங்க நாலஞ்சு இங்க வந்து எல்லா முதலைகளையும் காலி பண்ணிடுச்சுங்க. இப்ப அதுங்களுக்கு பயந்து யாருமே இங்க வர்றதில்லை!’’ என்று அந்த ஆள் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோதே தண்ணீரில் ஏதோ சலசலப்பு கேட்டது.
 நிதர்ஸனா