கேள்வி பதில்கள்



கல்லூரியில் 2ம் வருடம் படிக்கிறேன். எனக்கு துப்பறியும் நிபுணராக ஆசை. பெண்களுக்கு இந்தத் துறையில் வரவேற்பு எப்படியிருக்கிறது? துப்பறியும் நிபுணராக யாரை, எப்படி அணுகுவது? பிரத்யேகமாக ஏதாவது படிக்க வேண்டுமா?
சி.கார்த்திகா, செங்கல்பட்டு.

பதில் சொல்கிறார் துப்பறியும் நிபுணர் அருள்மணிமாறன்.
துப்பறியும் நிபுணராக பிரத்யேக கல்வித்தகுதி அவசியமில்லை. இந்தத் துறைக்கு கஷ்டப்பட்டு வருவதைவிட, இஷ்டப்பட்டு வருவதே சிறந்தது. துப்பறியும் நிபுணராக விரும்புவோர், முதலில் துப்பறியும் நிறுவனம் ஒன்றை அணுகி, அதில் பயிற்சியாளராகச் சேர வேண்டும். முதல் 3 மாதங்களுக்கு சீனியர்களுடன் களங்களுக்கு அனுப்பப்படுவார்கள். யாரிடம் எப்படிப் பேச வேண்டும், சிக்கலான ஒரு சூழலில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும், ஆபத்தான சந்தர்ப்பங்களில் எப்படித் தப்பிக்க வேண்டும் என எல்லாவற்றையும் பயிற்சியின்போது தெரிந்து கொள்வார்கள்.

சமயோசித புத்தி மிக முக்கியம். ஏதேனும் ஒரு தற்காப்புக்கலை தெரிந்து வைத்திருப்பது நல்லது. 2 மற்றும் 4 சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்து வைத்திருப்பது ப்ளஸ். இது 9 டூ 5 வேலை இல்லை. எந்த நேரமும் வேலை வரலாம்.

பெண்களும் இந்தத் துறையில் இருக்கிறார்கள். ஆனாலும், நேரங்கெட்ட வேளைகளில் உழைக்க வேண்டும் என்பதால் பலருக்கு சரிப்படுவதில்லை. தவிர துப்பறிவதற்காக பார், கிளப் மாதிரியான இடங்களுக்குப் போக வேண்டி வரும். பெண் துப்பறியும் நிபுணர் என்றால், பாதுகாப்பு கருதி அவருக்குத் துணையாக இன்னொரு ஆணையும் அனுப்ப வேண்டி வரும். ஒரு பெண் சென்றால்தான் துப்பு கிடைக்கும் என்கிற கேஸ்களும் உண்டு. அதுபோன்ற இடங்களில் பெண் நிபுணர்களின் பங்கு தவிர்க்க முடியாதது.

அசாத்திய துணிச்சலும், சமுதாய விமர்சனங்களைக் காதில் போட்டுக் கொள்ளாத அலட்சியமும், தொழிலின் மீது அளவு கடந்த வெறியும் இருந்தால், பெண்களும் இந்தத் துறையில் சாதிக்கலாம். வாழ்த்துகள்!

மொபைல் போன் செலவு கன்னா பின்னாவென எகிறுகிறது. பில்லில் எந்தத் தவறும் இல்லை. இதை எப்படிச் சரிசெய்வது?
 ஆர்.ராஜமாணிக்கம், சென்னை5.

பதில் சொல்கிறார் நுகர்வோர் நல ஆலோசகர் ஐயப்பன்

மொபைலை கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்துகிறீர்களா? உடனடியாக போஸ்ட்பெய்டிலிருந்து ப்ரீபெய்டுக்கு மாறிவிடுங்கள். மொபைல் எண்ணை மாற்றாமலே இப்படிச் செய்ய முடியும்.

போஸ்ட்பெய்டிலேயே தொடர எண்ணினால் உங்கள் மொபைல் பிளான் சரியானதுதானா என பாருங்கள். சேவை நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டங்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு சிக்கனமாக இருக்கக்கூடும்.

தேவையற்ற அல்லது பயன்படுத்தாத சேவைகளுக்கு சந்தா செலுத்துகிறீர்களா? உடனே நிறுத்துங்கள்.

எல்லா அழைப்புகளையுமே அதிக நேரம் பேசுவீர்கள் எனில் 'பெர் மினிட் பில்லிங்’ முறையைத் தேர்ந்தெடுங்கள். மற்றவர்களுக்கு ‘பெர் செகண்ட் பில்லிங்’ முறை சிறந்தது.

அடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்புவீர்களா? ‘எஸ்எம்எஸ் பேக்’ வாங்கிக்கொள்ளுங்கள். 22 ஆயிரம் எஸ்எம்எஸ் பேக் 60 ரூபாய் என்பது போல சல்லிசாகக் கிடைக்கிறது. இல்லையென்றால் ஒரு எஸ்எம்எஸ் ஒரு ரூபாய்!

எஸ்எம்எஸ்ஸே போதும் என்பது போன்ற காரியங்களுக்கு அதை மட்டுமே பயன்படுத்துங்கள். போன் செய்யத் தேவையில்லை.

ரிங்டோன், வால்பேப்பர் போன்றவற்றை கணினியிலிருந்து மொபைலுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். நேரடியாக மொபைல் இன்டர்நெட்டை பயன்படுத்தி டவுன்லோடு செய்வதில் செலவு
அதிகம்.

சில சேவை நிறுவனங்கள் இரவு நேரங்களில் பேசுவதற்கு மலிவுக்கட்டணமே வசூலிக்கின்றன. உங்களுக்கு இச்சேவை உண்மையிலேயே பயன்படுமானால் தேர்ந்தெடுக்கலாம்.

இவை எதுவும் உங்களுக்குப் பலன்தராது போனால், சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ரூ.19 செலவில், மொபைல் எண்ணை மாற்றாமலே சேவை நிறுவனத்தை மட்டும் மாற்றும் வசதி வந்துவிட்டது!