கடைசிப் பயணத்துக்கு அட்வான்ஸ் புக்கிங்!



வடிவேலு சொல்வாரே... ‘பிளான் பண்ணாம எதையுமே பண்ணக் கூடாது’. அப்படி யோசித்த சிலரது வித்தியாசமான ஐடியா இது. இந்த உலகத்தில் நம் ஆட்டம் முடிந்த பின் ஒரு பயணத்துக்கு ரெடியாவோமே... தாரை தப்பட்டை முழங்க, உறவுகள் அழுது வழியனுப்ப... அந்த இறுதிப் பயணத்துக்கும் இப்போதே முன்பதிவு செய்வதுதான் லேட்டஸ்ட் பிளான்!

சேலம் காக்காயன் கல்லறைத் தோட்டத்தில் அட்வான்ஸ் புக்கிங் சிஸ்டம் அமலுக்கு வந்துள்ளது. வீடு கட்ட நிலம் தட்டுப்பாடு இருப்பதைப் போலவே கல்லறைத் தோட்டத்திலும் இடப்பற்றாக்குறை. அதனால் இங்கு இதுவரை 7 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலும் ஆண்கள். மனைவி புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் இடம்பிடித்துள்ளனர். மரணத்துக்குப் பின்னரும் அருகில் இருந்தபடி வாழ்வோம் என நம்புகின்றனர்.

பணம் கட்டி இடத்தை உறுதிசெய்தவுடன் நாலுக்கு எட்டு அடி குழிக்கான இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த இடத்தில் ‘ரிசர்வ்ட்’ என எழுதப்பட்டுள்ளது. தனது கல்லறை எப்படி அமைய வேண்டும் என டிசைன் செய்து அதற்கான பணத்தையும் கட்டி விடுகின்றனர். கல்லறைகளை கிரானைட் கற்களால் அழகுபடுத்தி, உருவத்தை புள்ளி ஓவியமாக செதுக்க ரூ.3 லட்சம் வரை இப்போதே பணம் கட்டிவிட்டு, தங்களது மரணத்தை அழகாக வழியனுப்ப காத்திருக்கின்றனர் சிலர்!

‘‘என் மனைவி மரியாள் இறந்து ஒரு மாதம் ஆகிறது. கடைசி மூச்சு வரை என்னை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். அவரிடம் கோபத்தையே பார்க்க முடியாது. அவரது கல்லறையை அழகுபடுத்தும் பணி நடக்கிறது. இறந்த பிறகு அவருக்கு அருகிலேயே இருக்கும்படி எனக்கான இடத்தையும் புக்கிங் செய்து விட்டேன். அடுத்த தலைமுறையினர் இந்தக் கல்லறையைப் பார்க்கும்போது நாங்கள் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்ந்தோம் என்பதைப் புரிந்து கொள்வார்கள்’’ என்கிறார் சூரமங்கலம் ராபர்ட்.

‘‘நாங்கள் பரம்பரையாக கல்லறையை அழகுபடுத்தும் தொழில் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் அழகான கிரானைட் கற்களில் பெயர்கள் மட்டும் செதுக்கப்பட்டன. இப்பொழுது கணினி மூலம் இறந்தவரின் புகைப்படத்தையும் பதிக்கின்றனர். லட்சங்களை செலவளித்து கல்லறையில் கலைநயத்தை உருவாக்குகின்றனர். ஐரோப்பாவில் இறந்தவரின் போட்டோ ஹேண்ட் எட்ச்சிங் முறையில் புள்ளி ஓவியமாக செதுக்கப்படுகிறது. இது கொஞ்சம் சவாலான விஷயம். செலவு அதிகம் பிடித்தாலும் நம் ஊரில் புள்ளி ஓவியங்களுக்கு மவுசு அதிகம்’’ என்கிறார் கல்வெட்டு கலைஞர் டேனியல்.

உயிருடன் இருக்கும்போதே ஊசலாடும் திருமண பந்தங்களுக்கு நடுவே, இறந்த பின்னரும் இணைந்துவாழ இடம்பிடிப்பது ஆச்சரியம்தான். இக்கல்லறைகள் அன்பின் தத்துவத்தை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும்!
ஸ்ரீதேவி, மாரிமுத்து