அரிது அரிது சினிமா விமர்சனம்



‘மானிடராகப் பிறத்தல் அரிது’ என்று அவ்வையார் சொன்ன அதே விஷயம் தான். அப்படிப்பட்ட மானிட உயிரை பயங்கரவாதத்தினால் அழித்துக் கொண்டிருக்காதீர்கள் என்று சொல்ல வருகிறார் இயக்குநர் கே.ஆர்.மதிவாணன். அதை இங்கிருந்து சொன்னால் உலகத்தின் காதுகளில் விழுமோ விழாதோ என்று இங்கு ஆரம்பித்து ஆஸ்திரேலியா வரை பயணப்பட்டு அங்கே வைத்து சொல்கிறார். அதைச் சொல்வதற்கு பலிகடாவாக அமைவது ஒரு அப்பாவி இளைஞன்.

அந்த வேடத்தில் ஹரீஷ்கல்யாண் நடித்திருக்கிறார். சத்தம் பிடிக்காத சைக்கோ டாக்டரான அப்பாவினால் சலனமில்லாதவராக மாற்றப்படும் ஹரீஷ், படம் முழுவதும் நடைப்பிணமாகவே வருகிறார். காற்றில் அசையும் சருகு, பஞ்சு இவற்றை மட்டுமே பின்பற்றி காற்று போகும் போக்கில் போய்க்கொண்டே இருக்கும் அவரது நிலை பரிதாபகரமானது.

ஒல்லிப்பிச்சான்களெல்லாம் ஆக்ஷன் ஹீரோக்களாகி அடித்துத் துவைக்கும் தமிழ்சினிமாவில் படம் முழுதும் வாய் பேசாமல் நடைப்பிணமாகவே அலைந்து நடிக்க ஒத்துக்கொள்வதற்கு மனோதைரியம் மிக வேண்டும். அது இருக்கிறது ஹரீஷுக்கு. அந்த தைரியத்துக்கு போனஸாக ஒரே ஒரு பாடலில் மட்டும் அவரை ஆட்டுவித்து நடனம் ஆட விட்டிருக்கிறார் இயக்குநர்.

நாயகி உத்ராவுக்கு இது முதல் படமென்று நம்ப முடியவில்லை. தெற்றுப்பல் தெரிய அழகாக சிரிக்கத்தெரிந்த உத்ராவுக்கு நடனம் ஆடுவது கால்வந்த கலையாகியிருக்கிறது.

எல்லாவகை நடனங்களுக்கும் ஒத்துழைக்கும் அவரது பாடி லாங்குவேஜ் அபாரமாக இருக்கிறது. மோகம் கொண்ட பெண்ணொருத்தியின் கையில் ஹரீஷ் சிக்கும்போது அந்தப்பெண்ணை ஹரீஷின் தாயென்று நினைத்து நிம்மதிப்பெருமூச்சு விடுவதிலும், மோகம் தீர்ந்த அந்தப்பெண்ணால் மீண்டும் வீதிக்கு வந்த ஹரீஷைப் பார்த்து மனம் உடைந்து, அவரைத் துரத்தி வரும் ஆள்களிடமிருந்து மீட்க ஓடுவதிலும் அபாரமாகச் செய்திருக்கிறார் உத்ரா.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் கதையென்பதால் அங்கே இந்தியர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களையும் அங்கங்கே தொட்டுக்காட்டியிருக்கிறார் இயக்குநர். அதேபோல் வாழ வழியில்லாதவர்களை மனித வெடிகுண்டுகளாக மாற்றும் பயங்கரவாத இயக்கம் ஒன்றையும், அங்கே அழைத்து வரப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டு தங்கள் வாழ்க்கையை மனமில்லாமல் இழக்கத் துணியும் அப்பாவி இளைஞர்களின் நிலையையும் கூட சொல்லியிருக்கிறார்.

ஹரீஷின் சைக்கோ அப்பாவாக வரும் நடிகரும், மனித வெடிகுண்டாக மனமில்லாமல் அதிலிருந்து விடுபடத்துடிக்கும் இளைஞராக வருபவரின் தேர்வும் நன்றாக இருக்கிறது. எஸ்.தமனின் இசையில் ஆறு பாடல்களும் இளமைத்தூக்கலாக ஒலிக்கின்றன. படத்தின் தன்மைக்கேற்றவாறு ஆஸ்திரேலியாவைக் காட்டியிருக்கும் அருள்செல்வனின் ஒளிப்பதிவும் நன்று. இன்னொருவர் இயக்க உதவினால் மட்டுமே இயங்க முடியும் என்ற நிலையிலும் மனம் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் ஹரீஷின் நிலை கொடுமையாக இருக்கிறது. தன்னைக் காதலிக்கும் பெண்ணைப் புரிந்து கொள்ளவும், தனக்கு எதிராக நடக்கும் அத்தனை சம்பவங்களையும் புரிந்துகொள்ளவும் ஹரீஷால் முடிகிறது என்கிற நிலையில் கிளைமாக்ஸில் உடலில் வெடிகுண்டு கட்டப்பட்டு அவர் வெடித்துச் சிதறும்போது மனம் பதைபதைக்கிறது.

இருந்தும் கலைப்படமா, கமர்ஷியல் படமா என்று புரியாமல் இரண்டுக்கும் இடையில் சாவதானமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம். சிக்கலான கதையில் பல விஷயங்களை ரசிகர்களே புரிந்து கொள்ளட்டும் என்று புரியவைக்க முயற்சி செய்யாமல் விட்டிருப்பதும் குறை. அரிது அரிது   அபாயச் சங்கு..!
 குங்குமம் விமர்சனக்குழு