வாசகர் கடிதங்கள்



விலைவாசி உயர்வைச் சமாளிக்கணும்னா, மல்லிகா பத்ரிநாத் சொல்ற மாதிரி வெங்காயம் இல்லாத மாற்று அயிட்டங்களைத்தான் இனி சமைக்கணும்!
 எம்.சம்பத், கரூர்.

‘டூலெட் திருடர்கள்’ படித்தோம். நூதன திருடர்களை ‘டூ லேட்’ என்று சொல்ல இடம்கொடுக்காமல் விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் காவல்துறை.
த.சத்தியநாராயணன், சென்னை38.

இந்த வார ‘வாசகர் கவிதைகள்’ அனைத்தும் படிப்பவரையும் எழுதத் தூண்டுபவையாக உள்ளன. பின்புலமாக அமைந்த கவின்மிகு ஓவியம் கண்களுக்கு விருந்து!
எஸ்.எம்.பாலசுப்ரமணியன், தேனி.

கண்ணுல தண்ணி வர வைக்குது வெங்காயம். நீங்க ‘கனவுக்கன்னி’ யார்னு ஊரெல்லாம் வாக்கெடுப்பு நடத்தறீங்க. எங்களுக்கு ரொம்ப அவசியம்யா!
பி.முத்துகிருஷ்ணன், திருச்சி.

‘இன்னும் பலருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படாமலே இருக்கிறது’ என்ற நாஞ்சில் நாடனின் கருத்து, சக படைப்பாளிகளைப் பாராட்டும் அவரது பரந்த மனதைக் காட்டுகிறது.
என்.கிருஷ்ணன், கோயம்புத்தூர் 6.

இங்க ஏ.டி.எம். மெஷினை ரூமோட பேத்து எடுத்துட்டுப் போற சம்பவமெல்லாம் நடந்திட்டிருக்கு. இந்த லட்சணத்துல அதுல தங்கம் கிடைக்கும்னா, இப்பவே வரிசைகட்ட ஆரம்பிச்சிடுவாங்களே... லவட்டத்தான்!
கே.ரமேஷ், பள்ளிப்பாளையம்.

உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை இன்றைய தலைமுறை மறந்ததாலேயே சின்னஞ்சிறு வயதிலேயே சர்க்கரை நோய்க்கு உள்ளாகிறார்கள். செய்ய வேண்டிய பரிகாரங்களை இன்றே தொடங்கலாம்.
த.கோவிந்தராஜன், குடியாத்தம்.

சேனல்கள் பெருகிவிட்ட காலத்திலும் காமிக்ஸ் புத்தகத்தாலும் இன்னும் குழந்தைகளைக் கவர முடியும் என்று நம்புகிற விஜயனை பாராட்டியே ஆக வேண்டும்.
சின்னஞ்சிறு கோபு, மயிலாடுதுறை.

நம்மூர் பொம்மனாட்டிங்கதான் புருஷனை முந்தானையிலயே முடிஞ்சு வச்சிருக்கணும்னு நினைப்பாங்க. ஹாலிவுட் நடிகை இப்படி இருக்கார்ங்கிறது ஆச்சரிய சேதிதான்.
 ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவன் நான். கடைசிப் பக்கத்தைப் படிக்கிறபோது, இதையெல்லாம் பள்ளிக்கூடத்துல மாணவர்களுக்குச் சொல்லாம விட்டுட்டோமேன்னு நினைக்கச் சொல்லுது.
ச.ஆ.கேசவன், கோவில்பட்டி.  

ஓல்டு கார்களும் கரன்ட் ஸ்டார்களும் இணைந்த காலண்டரைத் தயாரிக்க புகைப்படக் கலைஞர் வெங்கட் ராம் ரொம்பவே மெனக்கெட்டிருப்பார். பிசியா இருக்கிறவங்களை வச்சு பிசினஸ் பண்ணணும்னா சும்மாவா?
எஸ். தேன்மொழி, நாகர்கோவில்.

‘டாய்லெட்டைத் திறந்து வச்ச மாடல்’ சேதி புல்லரிக்க வச்சிடுச்சு. பணம் வருது சாரே!
 ராஜ்மோகன், சீர்காழி.