மான் கராத்தே



உதார் விட்டு ஊரைச் சுற்றும் வேலையில்லாத ராயபுரம் பையன் சிவகார்த்திகேயன், அதிரி புதிரி குத்துச் சண்டை வீரனாகும்(!) ஃபேன்டஸி படம்தான் ‘மான் கராத்தே’. சிவகார்த்திகேயனை அடுத்த முன்வரிசை ஹீரோ லைனில் கொண்டு வர பிரயாசைப்பட்டு ‘கெத்து’ காட்டியிருக்கிறார்கள்.

மலையடிவார சாது விக்ரமாதித்தன் கொடுத்த ஆசீர்வாதமும் பத்திரிகைச் செய்தியும் உண்மையாக, அதையே காசு பண்ணப் பார்க்கிறார்கள் சாஃப்ட்வேர் இளைஞர்கள் நால்வர். அந்த பத்திரிகை செய்திப்படி சிவகார்த்தி குத்துச்சண்டை வீரர் ஆனாரா? எப்படியிருந்தது அந்த வெற்றி என்பதுதான் மீதிக்கதை. ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த ஸ்டோரி நம்மை கேள்வி ஏதும் கேட்காமல் உட்கார வைக்கிறது. இயக்குநர் திருக்குமரன் முதல் பாதியில் சீனுக்கு சீன் சிரிக்க வைத்தால் போதும் என இறங்கி அடித்திருக்கிறார்.

இது சிவகார்த்திகேயனின் காலம். அவருக்குரிய கோட்டாவில் அடி பின்னுகிறார். ‘என்னை மேலே போக விடுங்கப்பா’ என்ற துடிப்பு அப்படியே நம் முன்னால் தெரிகிறது. பெரிய ஹீரோவுக்கு கூட அகப்படாத அறிமுக சூப்பர் குத்துப்பாட்டு கிடைத்திருக்கிறது. மனுஷன் வெளுத்துக் கட்டியிருக்கிறார். விட்டேத்தி பையனுக்கான சர்வ அலட்சியங்களும் கொட்டி நடக்கிற நடையும் பாவனையும் அலம்பலும் சலம்பலும் ஆஹா. காதலி ஹன்சிகாவை நினைத்து ஃபீலிங்ஸ் விடுவதாகட்டும்...

நண்பர்கள் கோஷ்டியை உண்டு இல்லையென கலாய்ப்பதாகட்டும்... அட்டகாசம் கார்த்தி. எல்லா பாடல்களிலும் வெளுத்துக் கட்டும் டான்ஸ்... நிச்சயம் டிஸ்டிங்ஷன் பாஸ். ஆனால், உங்க கேரக்டரை மட்டும் பார்க்காமல் மொத்தக் கதையும் கவனித்தால் உங்களுக்கும் நல்லது... எங்களுக்கும் நல்லது. இன்னும் அடுத்த வீட்டுப் பையனின் இமேஜிலேயே கொஞ்ச நாள் இருந்து விட்டுப்போகலாம். நீங்கள் ‘இன்று திங்கட்கிழமை’ என்று சொன்னால் கூட சிரிக்கிற வேளையில், கதையை முற்றாக பயன்படுத்திக்கொள்வதுதான் நல்லது ப்ரோ.

பாடல் காட்சிகளில் இறுக்க நெருக்கமான க்ளோஸ்களில் மட்டுமே ஹன்சிகாவுக்கு அழகு கூடுகிறது. ஆனால், முந்தைய படங்களுக்கு பரவாயில்லை. சிவகார்த்தியின் காதலை ரகசியமாக ரசிப்பதும், நேரில் ‘படீர் பட்டாசாக’ வெடிப்பதுமாக கொஞ்சம் ஈர்க்கிறார். இறுதிக் காட்சியில் குத்துச் சண்டையிலிருந்து கதறி அழுது விலகச் சொல்லும் காட்சியில் அவருக்குக் கண்ணீர் வந்தாலும், நமக்கு உணர்ச்சிப் பிரவாகம் கம்மிதான்.

இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகள், தியேட்டரை விட்டு வந்த பிறகும், ‘இப்படி ஒரு கதை நடப்பது சாத்தியம்தானா’ என்ற சந்தேகங்களைத் தோற்றுவிப்பது நிஜம். ரசனையான வசனங்கள், கலகல காட்சிகள் மாறி இறுதிப் பகுதி முழுக்க சென்டிமென்டில் பல்ஸ் பார்ப்பது ரொம்பவே அதிகம். பரீட்சை பண்ண வேண்டிய கதையையெல்லாம் அசிஸ்டென்ட்டுக்கு தாரை வார்க்கிறாரோ முருகதாஸ்!

சதீஷ் காமெடி நல்ல ஒத்துழைப்பு. கதைக்கு பொருத்தமில்லாமல் இருந்தாலும், சிவாவுக்கு பக்க வாத்தியமாக பிரமாதமாக வார்த்தை சுழற்றுகிறார் சூரி. கொஞ்ச நேரமே வந்தாலும் கலகல. பாடல் காட்சிகளில் சுகுமாரின் கேமரா குளுமை.

அனிருத் படத்திற்கு பெரும் ஆக்ஸிஜன். ‘ஓபன் தி டாஸ்மாக்’, ‘ராயபுரம் பீட்டரு’ பாட்டெல்லாம் சான்ஸே இல்லை. இளமை வழிகிற பாடல்களில் அனி... ஹனி!
விளையாட்டை விளையாட்டாக நினைக்காமல் இருந்திருந்தால், இன்னும் ரசித்திருக்கலாம்.

- குங்குமம் விமர்சனக்குழு