சகுனியின் தாயம்



இளமாறன் கோட்டையின் மேற்புறத்துக்கு சென்று விட்டதாலும், யவன ராணி தேரிலிருந்து குதித்து முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட பெரிய ஆட்டுக்குப் பின்னால் மறைந்துவிட்டதாலும் மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டது. ரத சாரதி இல்லாததால் புரவிகள் தறிகெட்டு ஓடி, குழுமியிருந்த மக்கள் கூட்டத்துக்கு இடையில் புகுந்தன. இதனால் கூச்சலும், புழுதியும் ஒரே நேரத்தில் எழுந்து அந்தப் பகுதியையே போர்க்களமாக மாற்றியிருந்தது.சூழலைப் புரிந்து கொண்ட புகாரின் உபதளபதி, துரிதமாக செயல்பட்டான்.

தேரை நிலை நிறுத்தாமல் இளமாறனையோ, யவன ராணியையோ பிடிக்க முடியாது. எனவே ரதத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்தவன், சுற்றும் முற்றும் பார்த்தான். சோழ வீரன் ஒருவன் குதிரையில் வந்து கொண்டிருந்தான். செய்கையால் அவனை குதிக்கச் சொல்லிவிட்டு புரவியின் போக்கிலேயே ஓடி அதன் மீது தாவி ஏறியவன், தேர் சென்ற பக்கத்துக்கு கடிவாளத்தை திருப்பினான்.

திசைகளற்று பறந்து கொண்டிருந்த ரதத்தை நெருங்குவது கடினமாக இருந்தது. வலப் பக்கமும், இடப் பக்கமுமாக தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தன. அதற்கு ஏற்ப தன் புரவியைத் திருப்புவது மலையை கயிற்றால் கட்டி இழுப்பதற்கு சமமாக இருந்தது. அவனை சுமந்திருந்த குதிரைக்கும் ஒன்றும் புரியவில்லை. எந்தத் திசையை நோக்கி தன் மீது அமர்ந்திருப்பவன் செலுத்துகிறான் என்று அறிய முடியாமல் தவித்தது. அதன் வாயிலிருந்து பெருக்கெடுத்த நுரை, அதிக நேரம் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தது.

புகாரின் உபதளபதியும் இதைப் புரிந்து கொண்டான். எனவே ஓரளவு ரதத்தை நெருங்கியதுமே, தான் வந்து கொண்டிருந்த குதிரையிலிருந்து காலை எடுத்தான். கடிவாளத்தைப் பிடித்தபடியே அதன் மீது எழுந்து நின்றான். கால்கள் தடுமாறின. சமாளித்தபடி தேரை பார்த்தான். சதுர வடிவிலான மையப்பகுதி அவன் பார்வையில் பட்டது. அதில் நின்றபடிதான் ரதத்தை செலுத்த வேண்டும்.
தேருக்கும் தனக்குமான தொலைவை கணக்கிட்டவன் புரவியின் முதுகில் தன் கால் கட்டை விரலை அழுத்தமாக ஊன்றினான்.

ஒரே தாவலில் ரதத்தின் மையப் பகுதியை குறி வைத்துத் தாவினான்.
ஆனால் -சாரதி இல்லாமல் தன் போக்கில் நான்கு கால் பாய்ச்சலில் பறந்த அந்தக் குதிரைகள் சட்டென்று வலப் பக்கம் திரும்பி விட்டன. இதனால் உபதளபதியின் கணக்கு பிசகியது. தேரின் மையப்பகுதியில் குதிக்க வேண்டியவன் எதிர்பாராமல் தரையில் விழுந்தான். நிலத்தில் படீரென்று மோதியதால் கவசத்துக்குள் சிறைப்பட்டிருந்த மார்பு அதிர்ந்தது. யுத்த பூமியில் எதுவும் நடக்கும். அதிர்ச்சியையும் காயங்களையும் வேதனையையும் வலியையும் பொருட்படுத்தக் கூடாது. இது பால பாடம்.

இதைக் கசடறக் கற்றிருந்ததால் சூழலை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். கணக்கு பிசகிவிட்டது தெரிந்ததுமே தன் கரங்களை நீட்டினான். ரதத்தின் பின் பக்க மரச் சட்டகத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டான். பிடிமானமற்று ஓடிய தேர், அவனையும் இழுத்துக் கொண்டு சென்றது. வலப் பக்கமும் இடப்பக்கமுமாக அவன் உடல் அல்லாடியது. தரையில் உராய்ந்ததால் கவசத்திலிருந்து பிறந்த நெருப்புப் பொறிகள் அவன் கைகளையே பொசுக்க முற்பட்டன. ஆனாலும் பிடியை அவன் தளர்த்தவில்லை. ரதத்தின் போக்கிலேயே இழுபட்டு சென்றவன் தன் மூச்சை இழுத்துப் பிடித்து தேருக்குள் சென்றான். கடிவாளத்தைப் பிடித்து புரவிகளை அடக்கினான்.

சட்டென்று வேகம் தடைப்பட்டதால் குதிரைகள் இரண்டும் தங்கள் முன்னங்கால்களை உயர்த்தின. நல்லவேளையாக கீழே யாருமில்லை. எனவே குளம்புகளை அவை கீழே இறக்கியபோது எவரும் நசுங்கவில்லை.ரதம் நிலைபெற்றதும் அதிலிருந்து உபதளபதி இறங்கினான். காலை மடக்க முடியவில்லை. முட்டிகளிலிருந்து வழிந்த குருதி அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அவனைத் தடுத்தது. தலையை உயர்த்தி கோட்டையின் மேற்புறத்தைப் பார்த்தான். அசந்துவிட்டான். இதுநாள் வரை அவன் பார்த்திராத இந்திரஜாலத்தை அங்கே இளமாறன் நிகழ்த்திக் கொண்டிருந்தான். வாட் பயிற்சியை எங்கிருந்து கற்றானோ... காற்றைக் கிழித்தபடி அவை நர்த்தனமாடிக் கொண்டிருந்தன. தவறு... அது நாட்டியமல்ல; ருத்ர தாண்டவம்.

இளமாறனின் கைகளில் இப்போது இரு வாட்கள் முளைத்திருந்தன. தன்னிடமிருந்த வாளைத் தவிர சோழ வீரனிடமிருந்த வாளையும் கைப்பற்றியிருக்க வேண்டும். தேரை நிலைநிறுத்த தான் முயற்சிக்கும்போது இந்தக் காரியத்தை இளமாறன் முடித்திருக்க வேண்டும் என்பதை உபதளபதி புரிந்து கொண்டான். கரங்களுக்கு ஒன்றாக அவற்றைப் பிடித்தபடி இளமாறன் வித்தை காட்டிக் கொண்டிருந்தான். பொதுவாக வாட் பயிற்சி பெறுபவர்கள் எந்தக் கை பழக்கத்தில் உள்ளதோ அந்தக் கரத்தில்தான் வித்தை பயில்வார்கள். மாறாக இளமாறன் வலக் கைக்கு சமமாக இடக் கையிலும் பயிற்சி பெற்றிருந்தான். இது நாள் வரை அதை பயிற்சி மைதானத்தில் மட்டுமே நிகழ்த்திக் காட்டியவன் இப்போது முதல்முறையாக களத்தில் அதைப் பயன்படுத்துகிறான். ஆனாலும் முழுமையாக அதை செயல்படுத்தவில்லை. அப்படித்தான் உபதளபதிக்கு தோன்றியது.

ஏனெனில் இளமாறன் யுத்தம் புரியவில்லை. ஏதோ சிறு குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவது போலவே வாட்களை சுழற்றினான். யாரும் தன்னை நெருங்காமல் பார்த்துக் கொள்வது மட்டுமே குறிக்கோளாக இருந்தது. மற்றபடி சோழ வீரர்களுக்கு காயத்தையும் ஏற்படுத்தவில்லை. உயிரையும் போக்கவில்லை. ஒரே சமயத்தில் இரு சக்கரங்கள் சுழல்வது போல் அவன் கைகளில் இருந்த வாட்கள் சுழன்றன. இதன் மூலம் தன் முன்பக்கத்தையும், பின் பக்கத்தையும் ஒருசேர தடுத்து நிறுத்தினான். வாட்களின் சுழற்சியால் அவன் உண்டாக்கிய அரணைக் கடந்து சோழ வீரர்களால் அவனை நெருங்க முடியவில்லை.

குனிந்தான். நிமிர்ந்தான். கோட்டைச் சுவருக்குத் தாவினான். அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக பாய்ந்தான். ஓரிடத்தில் நிற்கவுமில்லை. மற்றவர்களை நிற்கவும் விடவில்லை.
ரசிப்பதை நிறுத்திவிட்டு செயலில் இறங்க முடிவு செய்த உபதளபதி, தன் கால் வலியை பொறுத்துக் கொண்டு கோட்டையின் மேற்புறம் செல்லும் படிக்கட்டை நோக்கி ஓடினான். இரண்டு இரண்டு படிகளாகத் தாவி ஏறி மேலே சென்றவன் இளமாறனை நெருங்க முயற்சி செய்தான்.முடியவில்லை.

காரணம், அவனை நெருங்குவதற்குள் அந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது.தன் இரு கரங்களில் இருந்த வாட்களை சுழற்றியபடியே சோழ வீரர்கள் அனைவரையும் மறுபகுதிக்கு அழைத்துச் சென்றிருந்த இளமாறன், உபதளபதி தன்னை நோக்கி வருவதை பார்த்து புன்னகைத்துவிட்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கோட்டைக்கு வெளியே குதித்தான். ஓடிச் சென்று அந்த இடத்தை அடைந்த உபதளபதி குனிந்து பார்த்தான். திகைத்து நின்றுவிட்டான். பெருக்கெடுத்து ஓடிய காவிரியில் இளமாறன் மறைந்திருந்தான்.

‘‘உடனே காவிரியின் இரு கரைகளையும் முற்றுகையிட்டு இளமாறனை உயிருடனோ பிணமாகவோ பிடியுங்கள்...’’ என்று கட்டளையிட்டு விட்டு வந்த வழியே மைதானத்தை நோக்கி விரைந்தான். தப்பித்துச் சென்ற யவன ராணியை பிடிப்பது ஒன்றே இப்போது உபதளபதியின் குறிக்கோளாக இருந்தது. ஆனால், எவ்வளவு தேடியும் ராணியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதை சோழ மன்னரிடம் அவன் தலைகுனிந்தபடி அறிவித்தபோது அங்கிருந்த சீன சக்கரவர்த்தி மர்மமாக புன்னகைத்தார். ‘‘அவள் எங்கு சென்றிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும்...’’ 
‘‘அது எந்த இடம்?’’ - கேட்ட சோழ மன்னர் பெருநற்கிள்ளியின் கண்கள் கோவைப் பழமாக சிவந்திருந்தன. 
‘‘ஆடுகள் சென்ற இடம்...’’

‘‘அதாவது ஆட்டு மந்தைகள் இருக்கும் பகுதி என்கிறீர்களா?’’
‘‘இல்லை. புகார் தளபதியின் மாளிகை...’’
‘‘அங்கு ஆடுகள் வளர்க்கப்
படுவதில்லையே...’’

‘‘உண்மைதான். முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆடு எங்கும் வளர்க்கப்படுவதில்லை...’’‘‘என்ன சொல்கிறீர்கள்?’’ சேர மன்னர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சட்டென்று இடையில் புகுந்தார். ‘‘இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை...’’ கண்களை சுருக்கிய சீன சக்கரவர்த்தி தன் முன் நின்றிருந்த இரு மன்னர்களையும் பார்த்தார். பிறகு மெல்ல அந்த விஷயத்தை சொன்னார். ‘‘முழங்கை அளவுக்கு கொம்புகளை கொண்ட ஆடு இந்த உலகத்திலேயே கிடையாது...’’

என்ன யோசித்தான் என்று தெரியாது. ஆனால், முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட அந்த ஆட்டை நோக்கி மகேஷ் சென்றான். முன்பு போலவே கண்ணாடிச் சுவர் அவனைத் தடுத்தது. கைகளை உயர்த்தி சுவரை அடித்துப் பார்க்க முயன்றான். என்ன ஆச்சரியம்! சுவர் எதுவும் அவன் கரங்களுக்குத் தட்டுப்படவில்லை. எளிதாக அந்தப் பக்கம் சென்றது. உடனே கை சென்ற பக்கத்தில் நுழைய முயன்றான். பழையபடி முட்டிக் கொண்டான். ‘‘வேதாளம், என்ன இது? எனக்கு ஒண்ணும் புரியலையே?’’ ‘‘அது அப்படித்தான் மகேஷ்...’’ - வேதாளம் சிரித்தது.

இந்த முறை தன் கால்களை உயர்த்தினான். கைகள் போலவே அதுவும் எந்தப் பிரச்னையும் இன்றி காற்றில் அசைந்தது.சட்டென்று அப்போதுதான் மகேஷுக்கு உண்மை புரிந்தது. தலை வழியாக செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிச் சுவர் தடுத்து நிறுத்தும்...உடனே தரையில் அமர்ந்தான்.

கால்களை நீட்டினான். அப்படியே நகர்ந்து நகர்ந்து ஆட்டை நெருங்கினான். மகேஷின் தந்திரத்தைப் புரிந்து கொண்ட ஆடு, தன் கொம்பை முன்னால் நீட்டியபடி ஓடி வந்தது. தன்னை முட்ட வரும் ஆட்டிலிருந்து தப்பிக்க சடாரென்று மகேஷ் எழுந்து நின்றான். தொம்.கண்ணாடிச் சுவரில் முட்டிக் கொண்டான்.

‘ஆஹா... இதுவா விஷயம்’ என்று நினைத்தவன் பழையபடி தரையில் அமர்ந்து நகர்ந்தான். முன்பு போலவே அவனை நோக்கி அந்த ஆடு பாய்ந்து வந்தது. இம்முறை அவன் எழுந்திருக்கவில்லை. பதிலாக படுத்தபடியே உருண்டான். தோராயமாக கண்ணாடி சுவரின் அகலம் இவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டவன் அதையும் தாண்டி உருண்ட பிறகு எழுந்து நின்றான்.
இப்போது எந்த சுவரும் அவனைத் தடுக்கவில்லை. பாய்ந்து வந்த ஆட்டின் கொம்பை பிடித்தான். ரஜினி நடித்த ‘முரட்டுக்காளை’ படத்தை டி.வி.யில் பார்த்தது நினைவுக்கு வந்தது. அந்தப் படத்தில் அவர் எப்படி காளை மாட்டை அடக்குவாரோ, அப்படி அவன் அந்த ஆட்டை அடக்க முற்பட்டான்.

ஆடு அவனை தரதரவென்று இழுத்துக் கொண்டு சென்றது. விடாமல் அந்த ஆட்டுடன் சென்றவன் தன் கால்களால் அதை எட்டி உதைத்தான். அவ்வளவுதான். அந்த ஆடு சட்டென்று மறைந்தது. பதிலாக அங்கு அழகிய தேவதை தோன்றினாள். அத்துடன் அவனை வணங்கவும் செய்தாள்.
‘‘எனக்கு சாப விமோசனம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் மகேஷ்...’’

தன் மனக்கண்ணில் தோன்றிய முழங்கை அளவுக்கு கொம்புகளை கொண்ட ஆட்டையே சகுனி உற்றுப் பார்த்தார். ஆடு... ஆம், இதே ஆடுதான்... அதனால்தான் தன் குடும்பமே அழிந்தது...
பற்களைக் கடித்தார். காந்தார தேசத்து ஜோதிடர் என்றோ தன் தந்தையுடன் உரையாடியது அன்றும் அவர் செவியில் துல்லியமாக ஒலித்தது. மறக்கக் கூடிய சம்பாஷணையா அது?
‘‘இளவரசிக்கு மாங்கல்ய பாக்கியம் இல்லை...’’‘‘என்ன சொல்கிறீர்கள் ஜோதிடரே...’’ சுபாலன் அலறினார்.

‘‘கிரகங்கள் சுட்டிக் காட்டுவதைத்தான் சொல்கிறேன். மணமானதுமே இளவரசியின் கணவர் மரணமடைவார்...’’
‘‘கடவுளே! இதென்ன சோதனை... இதற்கு பரிகாரமே இல்லையா?’’
‘‘இருக்கிறது மன்னா...’’
‘‘என்ன அது?’’

‘‘ஜாதகப்படி இளவரசிக்கு இரு கணவர்கள்...’’
‘‘ம்...’’‘‘இரண்டாவது கணவருக்கு ஆயுள் கெட்டி. அதனால் செயற்கையாக நாமே முதல் திருமணத்தை நடத்தி வைத்து மணமகனைக் கொன்று விடலாம்...’’
சொன்ன ஜோதிடரையே உற்றுப் பார்த்தார் சுபாலன்.

டிரைவர் சட்டென்று பிரேக் பிடித்தான். முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஸ்காட் வில்லியம்ஸ், சீட் பெல்ட் போட்டிருந்ததால் கண்ணாடி மீது மோதாமல் தப்பித்தான்.
ஆனால், பின்னிருக்கையில் குழந்தையை அணைத்தபடி இருந்த இளவரசனும், திவ்யாவும் பிடிமானம் இல்லாததால் முன்னிருக்கையில் மோதிக் கொண்டார்கள்.
சமாளித்து தங்கள் இருக்கையில் அமர்ந்தவர்கள் முன்பக்க கண்ணாடி வழியே சாலையை பார்த்தார்கள்.
சாலைக்கு குறுக்கே வந்து நின்ற ஆடு, காரையே உற்றுப் பார்த்தது.
டிரைவர் ஹாரன் அடித்தான். அது நகரவில்லை.

‘‘ஷிட். இறங்கி அதை விரட்டு...’’ சலிப்புடன் ஸ்காட் வில்லியம்ஸ் முணுமுணுத்தான்.
எஞ்சினை அணைக்காமல் இறங்கிய டிரைவர் அந்த ஆட்டை நோக்கி சென்றான்.
அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.

‘‘அசையாம அப்படியே இரு...’’ என ஸ்காட் வில்லியம்ஸின் கழுத்தில் கத்தியை வைத்தபடி இளவரசன் அடிக்
குரலில் சீற, டிரைவர் சீட்டுக்கு பாய்ந்த திவ்யா, வண்டியை கிளப்பினாள்.

‘‘தன் பெயரில் இருப்பதை எல்லாம் உன் பெயருக்கு மாற்றிக் கொடுப்பதாக தலைவர் சொன்னதும், ஏன் பயந்து ஓடி வருகிறாய்?’’
‘‘அவர் பெயரில் கோர்ட் வாரன்ட்தான் வச்சிருக்கார்!’’

‘‘காபி நல்லா இல்லாததுக்கு ‘கூட்டணி சரியில்லாததுதான் காரணம்’னு தலைவர் சொல்றாரே... ஏன்?’’
‘‘டிகாக்ஷன், பால், சர்க்கரை சரியா சேரலையாம்!’’

‘‘அந்த வீட்டு மாமியார் கத்திக்கிட்டே இருக்கும்போது, மருமகள் ஏன் வீட்டுக்கு வெளியில வர்றாங்க?’’
‘‘மாமியார் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்யறாங்களாம்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

(தொடரும்)

கே.என்.சிவராமன்