குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

குழந்தைகளுக்கு நாம் எவ்வளவு கற்றுக் கொடுக்கிறோமோ அதே அளவு அவர்களிட மிருந்தும் கற்றுக் கொள்ளலாம். ‘‘நீ இப்போ பூரா சாதத்தையும் சாப்பிடாட்டி நான் சாப்பிட்டுடுவேன்’’னு சொன்னா, ‘‘எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு தட்ட மட்டும் என்கிட்டே கொடுத்திடுங்க’’ன்னு லாஜிக்கலா பேசறாங்க. ‘‘குறும்பு பண்ணாதடா, மூணு கண்ணன் வந்து புடிச்சுட்டுப் போயிடுவான்’’னு சொன்னா, ‘‘ரெண்டு கண்ணுல பார்த்தா மூணா தெரியுதே, மூணு கண்ணுல பார்த்தா ரெண்டா தெரியுமா’’ன்னு கேட்கிறா ப்ரீ கேஜி படிக்கிற என் பொண்ணு. ‘‘தண்ணில விளையாடாதே...

 சளி பிடிக்கும்’’னு மிரட்டுனா, ‘‘மீன் எப்பவும் தண்ணியிலயே இருக்கே... அதுக்கு என்ன ஜலதோஷமா பிடிச்சுக்கிச்சு?’’ன்னு சட்டம் பேசறாங்க. ‘‘உனக்கு விளையாட தம்பி பாப்பா வேணுமா, தங்கச்சி பாப்பா வேணுமா?’’ன்னு கேட்டா, ‘‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், சோட்டா பீம் பொம்மை போதும்’’னு குடும்பக் கட்டுப்பாடே பண்ணிடுறாங்க.

இப்படியாக, குழந்தைகளிடம் நாம் விரும்புவதே அந்த பெரிய மனுஷத்தனத்தைத்தான். ஆனா, அதே சமயம் அவர்கள் வளர வளர நாம் அவர்களிடம் விரும்பாததும் அதையேதான்.
மற்ற மாநிலங்கள் எல்லாம் ஒண்ணுக்கொண்ணு வளர்ச்சில போட்டி போட்டுக்கிட்டு இருக்கு, நாம என்னடான்னா கிளப்புக்குள்ள வேட்டிய விடலன்னு பேசிக்கிட்டு இருக்கோம். நம்மாளுங்க பண்ற புரட்சியப் பார்த்து,

முதல்வரே இந்தப் பிரச்னையில தலையிட்டு, ‘தமிழர் கலாசாரத்துக்கு எதிரான கிளப்புகளுக்கு தடை’ன்னு சொல்லியிருக்காங்க. ரொம்ப நல்ல விஷயம்தான்! ஆனா இந்த கிளப் கலாசாரமே தமிழர் பண்பாடு இல்லைங்களேம்மா. நம்ம முன்னோர்கள், மூதாதையர்களைப் பொறுத்தவரை... மந்தையும் வீட்டுத் திண்ணையும்தானே கிளப்?

அம்மா வேற இப்படி அறிக்கை விட்டாச்சா, அடுத்தது விலையில்லா அம்மா பிராண்ட் வேட்டிகள் தரலாம்னு ஏதாவது மினிஸ்டருக்கு மூளையில மணியடிச்சு இருக்கும். இப்போ மேட்டர் என்னனா, மொதல்ல இந்தக் காலத்துல எத்தனை தமிழர்கள் வேட்டியக் கட்டுறாங்க? எனக்கு தெரிஞ்ச காலேஜ் பையன்கிட்ட ‘‘வேட்டி கட்டத் தெரியுமா’’ன்னு கேட்டேன், அதுக்கு அவன் சொன்ன பதில்... ‘‘வேட்டி எல்லாம் தாஜ்மகால் மாதிரி பிரதர்... பார்க்க நல்லா இருக்கும், ஆனா கட்டுறவனுக்குத்தான் கஷ்டம் தெரியும்!’’

மே 2011: வரும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு மின்வெட்டு இருக்காது  - மின்துறை அமைச்சர்
ஜனவரி 2012: வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மின்வெட்டு இருக்காது - மின்துறை அமைச்சர்
ஜூலை 2012: வரும் நவம்பர் மாதத்திற்குப் பிறகு மின்வெட்டு இருக்காது  - மின்துறை அமைச்சர்
டிசம்பர் 2012: வரும் மே மாதத்திற்கு பிறகு மின்வெட்டு இருக்காது - மின்துறை அமைச்சர்
ஜூன் 2013: வரும் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு மின்வெட்டு இருக்காது - மின்துறை அமைச்சர்
நவம்பர் 2013: வரும் மார்ச் மாதத்திற்குப் பிறகு மின்வெட்டு இருக்காது - மின்துறை அமைச்சர்
ஏப்ரல் 2014: வரும் ஜூன் மாதத்திற்குப் பிறகு மின்வெட்டு இருக்காது - மின்துறை அமைச்சர்
ஜூலை 2014: வரும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு மின்வெட்டு இருக்காது - மின்துறை அமைச்சர்
நானும், ‘என்னடா இது... அமைச்சருக்கு இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு இல்லையோ... எப்பவும் ஒரே மாதிரி பேசறாரே’ன்னு யோசிச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது, அவரோட தொழில் ரகசியம். யோசிங்க, மக்களே யோசிங்க! ஜனவரிக்கு பிறகோ, ஜூனுக்கு பிறகோ, அக்டோபருக்கு பிறகோ, டிசம்பருக்கு பிறகோ மின்வெட்டு எப்படி வரும்? ஜனவரிக்கு பிறகு பிப்ரவரி வரும்; ஜூனுக்கு பிறகு ஜூலை வரும்; அக்டோபருக்கு பிறகு நவம்பர், டிசம்பருக்கு பிறகு ஜனவரிதானே வரும்!

‘பெண்களின் அழகை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகை, அழகான பெண்கள். இரண்டாவது வகை, மிக அழகான பெண்கள். மூன்றாவது வகை, மிக மிக அழகான பெண்கள். நாலாவது, மனைவி. ஆமாங்க... எத்தனையோ அழகான பெண்கள் இருந்தாலும் மனைவிதான் அவங்களை விட அழகான பெண்ணா இருந்தாகணும்; டிசைன் அப்படி. அஞ்சாவது அம்மா, அம்மாக்கள் ஏன் அழகுன்னு சொல்லித்தான் தெரியணுமா என்ன?

கடைசி இரண்டு வகைப் பெண்களைப் பற்றி உங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்காது. இப்போ முதல் மூன்று வகையை விளக்குறேன். அதாவது, அழகான பெண்கள், மிக அழகான பெண்கள், மிக மிக அழகான பெண்களுக்கு என்ன வித்தியாசம்னா, சூப்பரான ஹீரோயின்ல சூப்பரா இருக்கிறது பாவனா மேன ன்னா, சூப்பரான ஹீரோயின்ல சுமாரா இருக்கிறது சிந்து மேனன். சுமாரான ஹீரோயின்ல சூப்பரா இருக்கிறது லட்சுமி மேனன்னா, சுமாரான ஹீரோயின்ல சுமாரா இருக்கிறது... சரி வேணாம் விடுங்க! இந்த பாராவின் முதல் வரிய மீண்டும் படிங்க!


மனிதன் என்னைக்கு சிந்திக்க ஆரம்பித்தானோ அப்ப ஆரம்பித்தது ஆயுத கலாசாரம். கைகளே மனிதனின் முதல் ஆயுதம், கற்கள் இரண்டாவது ஆயுதம். அப்புறம் இலை, தழைகளால் உடலை மறைக்கும் சதவீதம் அதிகமாகி அதிகமாகி நவீனமாக நவீனமாக... ஆயுதத்திலும் முன்னேறத் தொடங்கிவிட்டான். கற்களைத் தொடர்ந்து, கம்பு, வில் அம்பு, ஈட்டி, வேல், கத்தி, துப்பாக்கி என தமிழ் சினிமா டைட்டில் போல பல ஆயுதங்கள் செய்தான்.

உச்சகட்டமாக சென்ற நூற்றாண்டில் ஏவுகணை, அணுகுண்டுகளையும் கண்டுபிடித்து பயன்படுத்தி விட்டான். ஆனால் இவை எல்லாவற்றையும் விட மிக மோசமான ஆயுதத்தை அவனுக்கே தெரியாமல் தினமும் பயன்படுத்துகிறான். சொற்கள்தான் அந்த பேராயுதம். ஆனா, இதுல என்ன பிரச்னைன்னா, இந்த சொற்கள் என்னும் ஆயுதத்தை வைத்து அடுத்தவரை புண்படுத்தும் அதே நேரத்தில், தனக்கே தெரியாமல் தானும் தற்கொலை செய்துகொள்கிறான். கருத்து: பேச்சை குறைங்கண்ணே!

இந்த வார  குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...

ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் பணியாளரை வற்புறுத்தி சப்பாத்தி சாப்பிட வைத்த சிவசேனா எம்.பி., ராஜன் விகாரே!