நடைவெளிப் பயணம்



அடையாறு ஆலமரம்

அந்தக் காலத்தில் சென்னைக்கு சுற்றுலா வந்து போனவர்களை ‘‘காலேஜ் பார்த்தாயா?’’ என்று கேட்பார்கள். செத்த காலேஜ், உயிர் காலேஜ், மூர் மார்க்கெட் ஆகியவற்றுடன் அடையாறு ஆலமரமும் சென்னையில் பார்க்க வேண்டிய காட்சியாக இருந்தது. அன்று சென்னை போகிறவர்கள் இந்த இடங்களைப் பார்த்தால்தான், அவர்கள் பயணம் முழுமையடைந்ததாக நினைக்கப்படும். இந்த நான்கு இடங்களில் மூன்று பெரும் மாற்றம் அடைந்து விட்டன. உயிர் காலேஜ் எனப்பட்ட விலங்குகள் காப்பகம், இன்று உயிரியல் பூங்காவாக சென்னைக்கு வெளியே வண்டலூர் சென்று விட்டது.

ஆலமரம் என்பது அடையாறில் பிரம்ம ஞான சபையின் மிகப்பெரிய பரப்பில் ஓர் விளிம்பில் இருந்தது. இதன் வயது பற்றி விவாதம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புயலில் இது சாய்ந்து விட்டது. இதன் ஏராளமான விழுதுகள் தரையில் ஊன்றி, அவை தனி மரங்களுக்குரிய அளவை அடைந்து விட்டன. அன்று சாய்ந்த தாய் மரத்தை எப்படி நிறுத்தி வைப்பது என்று பல பொறியியல் நிபுணர்கள் யோசனை கூறினார்கள். ஏதேதோ செய்யப்பட்டது. ஆனால் தாய் மரத்தைக் காப்பாற்ற முடியவில்லை. உலகின் மிகப் பழைய, மிகப் பெரிய ஆலமரங்களில் ஒன்றைக் கொண்டது என்ற பெருமையை அப்போது சென்னை இழந்தது.

பிரம்ம ஞான சபை அடையாறில் 1882ம் ஆண்டு நிறுவப்பட்டபோது அந்த இடம் காடும், புதரும், நரி போன்ற மிருகங்களும் நிறைந்ததாக இருந்திருக்கும். கடற்கரையோரமாக மீனவக் குடியிருப்புகள். இன்று போனால் கூட, முதல் பத்து நிமிடங்களுக்கு அவர்கள் பேசுவது புரியாது. அவர்களுடைய சொல்லாட்சியும் உச்சரிப்பும் சிறிது பழகிய பிறகுதான், அவர்கள் என்ன தெரிவிக்க விரும்புகிறார்கள் என்று புரியும்.

ஒருமுறை நான் அந்தப் பக்கம் என் சைக்கிளில் சென்றிருந்தேன். அந்த நாளில் அங்கிருந்து ஆறின் வடக்குக் கரைக்கு ஒரு பலகைப் பாலம் இருந்தது. கைப்பிடிக்கு ஒன்றும் கிடையாது. அடி ஆழத்தில் கடலோடு கலக்கும் ஆற்றின் மீது அந்த இரண்டடிப் பலகைப் பாலத்தைப் பலர் பயன்படுத்திய வண்ணம் இருந்தார்கள். ஒரு அம்மாளிடம் பேசியபடி நான் அங்கு போனேன். என்னை அங்கே போக வேண்டாம் என்று அந்த அம்மாள் கூறியிருக்கிறாள் போல! அது புரியாது நான் அந்தப் பலகைப் பாலத்தில் சைக்கிளை தள்ளிக் கொண்டு போகத் தொடங்கினேன்.

 பத்தடி போய் விட்டேன். அப்போதுதான் அது மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் என்று விளங்கியது. திரும்பவும் முடியவில்லை. காற்று பலமாக அடிக்கிறது. கீழே தண்ணீர் ஆழம் தெரியாதபடி கடற்பக்கம் நகர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் சைக்கிளைக் கடலில் போட்டு விட்டு உயிர் தப்புவோமா என்றும் தோன்றியது.

இன்று அந்தப் பாலம் இல்லை. அடையாறு பரபரப்பும் நெரிசலும் நிறைந்த இடமாகி விட்டது. பிரம்ம ஞான சபையுள்ளே போக முடியாதபடி வாசல் கேட் அருகே ஏராளமான கடைகள்.   
‘பிரம்ம ஞான சபை’ என்று ‘தியசாபிகல் சொசைட்டி’க்குப் பெயர் வைத்ததே சங்கடத்துக்கு இடமளிப்பது. பிரம்ம ஞானம் அத்வைத தத்துவத்தின் இறுதி. தியசாபிகல் சொசைட்டி எம்மதமும் சம்மதம் என்று அடிப்படை கொண்டது. அதோடு, ‘உண்மை தவிர உயரிய மதம் எதுவும் இல்லை’ என்றும் கூறுகிறது.

 இந்த சொசைட்டியை நிறுவினவர்கள் பிளவாட்ஸ்கி என்ற ரஷ்ய சீமாட்டியும் கர்னல் ஆல்காட் என்ற அமெரிக்கரும். ஒருவர், அவர் உணர்ந்த பிரமாணங்களை வலியுறுத்துபவர். இன்னொருவர், அமெரிக்க ‘பிராக்மாடிஸம்’ எனப்படும் யதார்த்தத்துக்கு விசுவாசி. அடையாறில் நிறுவனத்தின் அகில உலக மையத்தை அமைத்த பிறகு இருவரும் இலங்கை சென்றனர். எம்மதமும் சம்மதம் அல்லவா? இவர்கள் கரையிறங்கிய உடனே ‘பான்சில்’ வழங்கப்பட்டது.

அதாவது அவர்கள் பௌத்தர்களாக ஏற்கப்பட்டார்கள். விசேஷச் சலுகையாக இவர்களுக்குக் கண்டியில் உள்ள பெரிய கோயிலில் உள்ள புத்த சின்னம் காட்டப்பட்டது. அது அசோகரின் மகன் மகேந்திரனே இலங்கைக்கு அளித்த புத்தரின் ஒரு பல். இரு வெள்ளைக்காரர்களுக்கு காட்டப்பட்டது என்பதனால், பத்திரிகைகாரர்கள் இவர்களை, ‘‘பல் எப்படியிருந்தது? நீங்கள்தான் ஆவியுலகை அறிந்தவர்களாயிற்றே? அது உண்மையாகவே கௌதம புத்தரின் பல்தானா?’’ என்று கேட்டிருக்கிறார்கள். பிளவாட்ஸ்கி பதில் தந்தார். ‘‘அது புத்தரின் பல் என்பதில் சந்தேகமே வேண்டாம்.’’

சிறிது பொறுத்துச் சொன்னார், ‘‘அது அந்தப் புண்ணிய மனிதனின் ஒரு முந்தைய பிறவியின் சின்னம்.’’‘‘முந்தைய பிறவி என்றால்?’’‘‘அவர் முதலையாக அவதாரமெடுத்தபோது...’’
அடையாறே ஐம்பது ஆண்டுகள் முன்பு எல்லா நேரங்களிலும் ஆவிகள் உலவுவது போன்ற சூழலில் இருக்கும். பிரம்ம ஞான சபை அங்கத்தினர்கள் வயதில் முதியவர்கள். இளம் வயதில் ஓடியாடி சம்பாதித்த பிறகுதான் இம்மாதிரி சபையில் சேர இயலும். இந்த முதியவர்கள் அந்நாளில் சைக்கிள் விடக்கூடிய இடமாக இருந்த அடையாறில் சைக்கிள் விடா விட்டால் உலகில் வேறெங்கு விட முடியும்? இந்த சைக்கிள்காரர்கள் எந்நேரமும் புன்னகை புரிந்த வண்ணம் இருப்பார்கள். இன்றும் இந்த சபையில் அயல் நாட்டினர் நிரந்தரப் புன்னகையோடு இருப்பார்கள். பயமாக இருக்கும். இந்தியர்கள் சுபாவமாக இருப்பார்கள்.

அடையாறு மரம் பிரம்ம ஞான சபை கூடும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆன்மிக குருக்களில் ஒருவராகக் கருதப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி இம்மரத்தடியில் உரை நிகழ்த்தியிருப்பதாகக் கூறுகிறார்கள். நானும் அவருடைய மரத்தடி உரைகளை  நிறையக் கேட்டிருக்கிறேன். அது வேறு மரத்தடி. உரை தொடங்குவதற்கு முன்பு கூடியுள்ளோர் ரகசியம் பேசிக்கொள்வது போலத் தணிந்த குரலில், ‘கால் வலி எப்படி இருக்கிறது’,

‘நல்ல இதய ஸ்பெஷலிஸ்ட் எங்கு கிடைப்பார்?’ போன்ற இம்மைக்குரிய, லௌகீக தகவல்கள் பரிமாறிக் கொள்வார்கள். உரை முடிந்த பிறகு நிசப்தமாகக் கலைவார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தியைக் கேட்ட பிறகு காலென்ன இதயமென்ன என்ற நிலையில் இருப்பார்கள். அதாவது, அவர் உரை கேட்டபிறகு எல்லாருமே அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் கலைவார்கள். இதில் ஒரு சங்கடமான விஷயம், சிலர் ஜே.கிருஷ்ணமூர்த்தியை விளக்கத் தொடங்கி விடுவார்கள்.

ருக்மணி தேவியின் கலாக்ஷேத்திரம் பிரம்ம ஞான சபையின் ஓர் அங்கமாக இயங்கியபோது, பாட்டு, நடன வகுப்புகள் ஆல மரத்தடியில் நடக்கும் என்று கூறுவார்கள். உலகின் மிகப் பெரிய மரங்கள், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ரெட்வுட் மரங்கள்தான் என்கிறார்கள். மிகுந்த அகலமும் உயரமும் கொண்ட இவை தேசியப் பொக்கிஷங்களாகக் கருதப்படுகின்றன. அந்த மாநிலத்தில் புயல், சூறாவளி ஆபத்துகள் குறைவு. வேறு பல மாநிலங்களில் வீசும் புயலும் காற்றும் முழு வீடுகளைப் பெயர்த்து எங்கோ தள்ளி விடும். ‘தி விஸார்ட் ஆஃப் ஓஜ்’ என்ற புகழ்பெற்ற கதையும் திரைப்படமும் இம்மாதிரிப் புயற்காற்றின் விளைவுகளாக உருவானவை.

தாய் மரத்தைக் காப்பாற்ற முடியவில்லை. உலகின் மிகப் பழைய, மிகப் பெரிய ஆலமரங்களில் ஒன்றைக் கொண்டது என்ற பெருமையை அப்போது சென்னை இழந்தது.

படிக்க

சாதத் ஹசன் மண்ட்டோ பம்பாய் திரைப்படத்துறையில் மிகவும் மதிக்கப்பட்ட எழுத்தாளர். ஆனால் இந்தியப் பிரிவினையின்போது ஒரு ஸ்டூடியோ எரிக்கப்பட்டதைக் கண்டு அவர் பாகிஸ்தானுக்குப் போய்விட்டார். அன்று பம்பாய் திரைப்படத்துறையில் பெரும்பான்மை நடிகைகள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் முஸ்லிம்கள். இங்கேயே தங்கினவர்களில் பலர், பெரும் புகழ் பெற்றார்கள். மஜ்ரு சுல்தான்புரி ‘பால்கே’ விருது பெற்றார். பாகிஸ்தான் சென்ற மண்ட்டோ முழு வீச்சோடு இயங்க முடியவில்லை.

அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அவருடைய சில கதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்தன. பின்னர் பல இந்திய மொழிகளிலும் வந்தன. அவருடைய கதைகளின் அடிநாதம் துயரம், வேதனை. அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகள், கட்டுரைகள் சில, பேராசிரியர் ராமானுஜம் மொழிபெயர்ப்பில் ‘மண்ட்டோ படைப்புகள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இப்போது இரண்டாவது பதிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினை பற்றிய அந்தரங்கமான உணர்வுகளைத் தரும் நூல். (மண்ட்டோ படைப்புகள் - சாதத் ஹசன் மண்ட்டோ, மொழிபெயர்ப்பு: ராமானுஜம், விலை: ரூ.375/-; நிழல் பதிப்பகம், 31/48, ராணி அண்ணா நகர், கே.கே. நகர், சென்னை-600078.)

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்