மத்தவங்க துயரத்துல பங்கெடுத்துக்கிறது பெரிய கொடுப்பினை!



உயிரோடு இருக்கும்வரை பெண்கள் நுழையமுடியாத இடங்களில் ஒன்று மயானம். எந்த உறவாயினும் பந்தம், வீட்டின் முகப்பு வரைதான். சடங்குகள், சாங்கியங்கள், பேய்கள், பிசாசுகள் என பெண்களைத் தடுக்க மயானத்தைப் பற்றி ஏகப்பட்ட கற்பிதங்கள். எஸ்தரும், பிரவீணாவும் அந்தக் கற்பிதங்களைத் தகர்த்திருக்கிறார்கள். சென் னை, கீழ்ப்பாக்கம் புது ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்தை இவர்கள் இருவரும்தான் நிர்வகிக்கிறார்கள். சடலத்தின் தன்மை யைப் பரிசோதிப்பது முதல், எரியூட்டி சாம்பல் சேகரித்துக் கொடுப்பது வரை கனிவும், கருணையுமாக சகல வேலை களையும் செய்கிறார்கள்.

சென்னையில் சிறிதும் பெரிதுமாக 210 மயானங்கள் உண்டு. இங்கெல்லாம் தலை விரித்தாடும் லஞ்சப் பேயை விரட்டும் நோக்கில், நிர்வாகத்தை தொண்டு நிறுவனங்களின் கைகளில் வழங்க முடிவெடுத்திருக்கிறது சென்னை மாநகராட்சி. சோதனை முயற்சியாக வேலங்காடு மயானம் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்திடம் (ICW) வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தால் நியமிக்கப்பட்டவர்கள் தான் எஸ்தரும், பிரவீணாவும்.

பிரவீணா அண்ணா நகரைச் சேர்ந்தவர். நர்சிங் படித்திருக்கிறார். கணவர் சாலமன் கார் டிரைவர். இரண்டு குழந்தைகள். கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக களப்பணி செய்தவர். எஸ்தருக்கு சொந்த ஊர் மதுரை. +2 படித்திருக்கிறார். இவரது கணவரும் டிரைவர்தான். 3 குழந்தைகள். ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்காக தொண்டாற்றியவர். இருவரும் இணைந்து மயானத்தின் முகத்தையே மாற்றி யிருக்கிறார்கள்.

‘‘சின்ன வயசுல சுடுகாட்டை வச்சு நிறைய கதைகள் கேள்விப்பட்டிருக்கேன். அங்குள்ள மரங்கள்ல பேய்கள் தங்கியிருக்கும். நடு மதியத்துல வெளியில உலவும்னு சொல்வாங்க. வழியில சுடுகாடு வந்தாக்கூட கண்ணை மூடிக்கிட்டு வேகமா நடக்கிற ஆளுநான். ஐ.சி.டபிள்யூ இயக்குனர் ஹரிகரன் சார், ‘சுடுகாட்டைப் பாத்துக்கப் போறியாம்மா’ன்னு கேட்டப்போ ஏதோ ஞாபகத்துல ‘சரி’ன்னு சொல்லிட்டேன். முதல் நாள் உள்ளே வரும்போது மனசுல நடுக்கம். வந்த பிறகுதான் இந்த இடத்தோட தன்மை புரிஞ்சுச்சு. இப்போ மனப்பூர்வமான ஒட்டுதலோட வேலை செய்யிறேன்’’ என்கிறார் பிரவீணா.

வேலங்காடு மயானத்துக்குள் நுழைந்தாலே மெல்லிய பயம் சூழ்கிறது. உடல் சுமந்து வந்த கம்புகள், வதங்கியும் வாடாமலும் கிடக்கும் மாலைகள், உடல்களைப் புதைத்திருக்கும் மண் முகடுகள்... அதனூடாக செல்லும் பாதையின் இறுதியில் எரிமேடை. அதோடு ஒட்டிய அலுவலகத்தில்தான் அமர்ந்திருக்கிறார்கள் எஸ்தரும் பிரவீணாவும். தினமும் 4 முதல் 9 சடலங்கள்... இறப்பைப் பதிவு செய்வது, தகனத்துக்கு நேரம் ஒதுக்குவது, உடலின் தன்மையைப் பரிசோதிப்பது, சாம்பல் சேகரித்துத் தருவது, சுத்தம் செய்வது என இவர்களின் பணி நீள்கிறது. ஆட்கள் இல்லாவிட்டால் எரி மேடையை இயக்கவும் செய்கிறார்கள்.

‘‘ஆரம்பத்துல ஒவ்வொரு சடலம் வரும்போதும் பயமா இருக்கும். தனியா இருக்கிற நேரத்துல, காத்துல ஜன்னல் அடிச்சுக்கிட்டாக்கூட அலறுவேன். ஆனா காலப்போக்கில சாவு மேல இருந்த பயமே போயிடுச்சு. நாங்க இங்கே வந்தப்போ பயங்கர எதிர்ப்பு. இங்கே இருந்த ஆண்கள் எங்களை உள்ளே வரவே விடல. காரணம், வருமானம். நாங்க வந்தன்னிக்கு மறுநாள் ஒரு உடல் வந்துச்சு. புதைக்கிறதுக்கு குழி வெட்டுறவங்களைக் கூப்பிட்டோம். ‘நீங்களே வெட்டிக்குங்க... நாங்க வரமுடியாது’ன்னு மறுத்துட்டாங்க. நானும் பிரவீணாவுமே 6 அடிக்கு குழியை வெட்டி உடலைப் புதைச்சோம். இப்போ எல்லாத்துக்கும் ஆள் போட்டாச்சு.

பல பேர் தண்ணி அடிச்சுட்டு வருவாங்க. உள்ளே வந்தும் சிலர் சத்தம் போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடுவாங்க. அவங்ககிட்ட போய், ‘இது புனிதமான இடம். உள்ளே கடைசி நேர சடங்குகள் நடக்குது. சத்தம் போடாதீங்க’ன்னு கனிவா சொல்லுவோம். சிலர் கேட்க மாட்டாங்க. அவங்களை மயானத்தை விட்டே வெளியில அனுப்பியிருக்கோம். சில பேர் லேட்டா வந்து ‘உடனே தகனம் பண்ணணும்’னு பிரச்னை பண்ணுவாங்க.

 யார் யாருக்கோ போனைப் போட்டுக் கொடுப்பாங்க. எதுக்கும் காது கொடுக்க மாட்டோம். விதிமுறைப்படி மட்டும்தான் செய்வோம். எங்க உறுதியைப் பாத்துட்டு அமைதியாகிடுவாங்க...’’ என்கிறார் எஸ்தர்.

சடலத்தோடு வந்து மயானத்துக்கு வெளியில் நிறுத்தப்படும் பெண்களையும் இவர்கள் எரிமேடை வரை அழைத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்ய வைக்கிறார்கள். ‘‘இரண்டரை வயசுக் குழந்தை காய்ச்சல் வந்து இறந்துட்டாளாம். எனக்கும் அந்த வயசுல ஒரு குழந்தை இருக்கா. இறந்த குழந்தையோட முகத்தைப் பார்த்தவுடனே எனக்கு அழுகை பொங்கிடுச்சு. அதேபோல வெளியூர்ல இருந்து வேலைக்காக வந்த ஒருத்தர் ரயில்ல அடிபட்டு இறந்துட்டார். நாலைஞ்சு நாள் கழிச்சுத்தான் கண்டுபிடிச்சுருக்காங்க.

திருமணமாகி சில மாதங்கள்தான் போலிருக்கு. இறந்த தகவலைச் சொல்லாம, உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஊர்ல இருந்த மனைவியை நேரா மயானத்துக்கே கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. அந்தப் பொண்ணு அழுத அழுகை கல்லு நெஞ்சைக்கூட கரைச்சிடும். இங்கே வச்சே மஞ்சள் பூசி, வளையல் உடைச்சு சாங்கியமெல்லாம் செஞ்சாங்க. அந்தப் பெண் எங்களைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுதாங்க. நாங்களும் கதறி அழுதோம். சந்தோஷத்துல எல்லாரும் பங்கெடுத்துக்கலாம். மத்தவங்க துயரத்துல பங்கெடுத்துக்கிற கொடுப்பினை எங்களுக்குக் கிடைச்சிருக்கு’’ என்று நெகிழ்ந்து சொல்கிறார்
பிரவீணா.

மயானத்துக்கு வரமுடியாத பெரியவர்களுக்காக இறுதிச்சடங்குகளை இணையத்தில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ செய்வது, ஆதிகால இறப்புச் சடங்குகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மியூசியம் அமைப்பது என மயானத்தில் நிறைவேற்ற ஏகப்பட்ட திட்டங்களை வைத்திருக்கிற பிரவீணாவும், எஸ்தரும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.

‘‘ஆதரவில்லாதவங்க, வசதியில்லாதவங்களோட மரணத்துக்கு மதிப்பே இருக்கிறதில்லை. உடலைக் கொண்டு வந்து தள்ளிட்டுப் போயிடுவாங்க. அந்த மாதிரி நேரத்துல மார்ச்சுவரி வேன், ஃபிரீசர் பாக்ஸ் வச்சு முறைப்படி கொண்டு வந்து இறுதிச்சடங்கு செய்யறோம். எங்க வருமானத்துக்கு மாசத்துல ஒருத்தருக்கோ, ரெண்டு பேருக்கோதான் செய்ய முடியாது. யாராவது உதவி செஞ்சா எல்லா மரணத்தையுமே மதிப்பு மிக்க மரணமா மாத்தலாம்...’’

ஆதரவில்லாதவங்க, வசதியில்லாதவங்களோட மரணத்துக்கு மதிப்பே இருக்கிறதில்லை. உடலைக் கொண்டு வந்து தள்ளிட்டுப் போயிடுவாங்க!

வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன், ஆர்.சந்திரசேகர்