அரிதான ஆல்ரவுண்டர் புவி!



28 வருடத்துக்குப் பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை ருசித்திருக்கிறது இந்தியா. ‘இங்க சிக்ஸர் அடிச்சா போதுமா? இங்கிலாந்து போய் உதை வாங்கிட்டு வருவாங்க பாரு’ என்ற வழக்கமான ஏளனங்களைப் பொய்யாக்கியிருக்கிறது தோனி அண்ட் கோ. மரியாதையான டிரா, ஆர்ப்பாட்டமான வெற்றி என இந்த டூர், இந்தியாவுக்கு செம ஜோர். இத்தனைக்கும் காரணம் அந்த 24 வயசுப் பையன் என புவனமே புகழ்கிறது. யாரை? நம்ம ‘சன் ரைசர்ஸ்’ சிங்கம் புவனேஸ்வர் குமாரைத்தான்!

நல்ல பந்து வீச்சாளர் என வந்த உடனேயே பேசப்பட்டவர்தான் புவி. ஆனால், அவருக்குள் இத்தனை பெரிய பேட்ஸ்மேனும் விஸ்வரூபம் எடுப்பான் என யாரும் நினைக்கவில்லை. இங்கிலாந்து மண்ணில் முதல் இரண்டு டெஸ்ட்டிலேயே மூன்று அரை சதங்கள், 11 விக்கெட்டுகள் என அசத்தியிருக்கும் புவனேஸ்வருக்கு இப்போது கிரிக்கெட் உலகம் கிரீடம் சூட்டிப் பார்க்கிறது.

கபில்தேவ், ராபின்சிங் வரிசையில் நமக்கு அரிதாய்க் கிடைத்திருக்கும் இந்த ஆல்ரவுண்டர், உ.பி. மாநிலம் மீரட் நகரில் பிறந்தவர். தந்தை கிரண்பால் சிங் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். தாய் இந்ரேஷ். சின்னப் பையனாக ரஞ்சி டிராபியில் விளையாடிய இவர், கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரை ‘டக் அவுட்’ ஆக்கியதும்தான் தேர்வாளர்கள் ‘யார்ரா இவன்’ எனத் திரும்பிப் பார்த்தார்கள்.

ஆனால், ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் புடம் போட்டு வெளிப்பட ஐந்தாண்டுகள் தேவைப்பட்டது. வடக்கு மண்டல அணிக்கெதிரான போட்டியில் 128 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். அடுத்த நொடியே, இந்திய அணியின் தேர்வு லிஸ்ட்டில் புவியின் பெயர்!

இவர் அறிமுகமான டெஸ்ட், ஒரு நாள் போட்டி... இரண்டுமே சென்னையில்தான். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பவுலிங் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஆனால், பேட்டிங்கில் கலக்கினார். ஒன்பதாவது விக்கெட்டிற்கு தோனியுடன் இவர் இணைந்த 140 ரன் பார்ட்னர்ஷிப், இன்றும் சாதனை ஸ்கோர். பிறகு, பாகிஸ்தானுடனான முதல் ஒரு நாள் போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் சாய்த்து முத்திரை பதித்தார். அடுத்து, டி20 அறிமுகப் போட்டியில் 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். 

லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஆட்ட நாயகன் இஷாந்த் என்றாலும், முன்னாள் வீரர்களின் பாராட்டு மழை புவனேஸ்வர் மீதுதான் பொழிகிறது. ‘‘புவனேஸ்வரின் அணுகுமுறையால்தான் இந்திய அணிக்கு லார்ட்ஸ் வெற்றி சாத்தியமானது’’ என வெளிப்படையாகத் தோள் தட்டியிருக்கிறார் முன்னாள் கேப்டன் கங்குலி.

பேராச்சி கண்ணன்