வேலையில்லா பட்டதாரி



ஒரு இளைஞனின் அடிப்படைத் தேவை, ஒரு நல்ல வேலை... பின்னர் காதல் அல்லது திருமணம். அப்படி ஆசைப்படும் ஒரு சாதாரண இளைஞனின் கதைதான் ‘வேலையில்லா பட்டதாரி’. சாதாரணமான ஒரு கதையை அட்டகாசமான கமர்ஷியல் பேக்கேஜாக தந்திருக்கிறார்கள். 25வது படத்தைத் தொட்டிருக்கிறார் தனுஷ். ஆனால், அவரின் இமேஜைப் பற்றி துளியும் கவலைப்படாமல் ஆரம்பமாகிறது கதை.

சிவில் எஞ்சினியரிங் முடித்து, படிப்புக்கேற்ற வேலைக்குத்தான் போவேன் என்று அடம் பிடித்து வீட்டில் இருக்கும் ரகுவரன் என்ற பாத்திரத்தில் தனுஷ். இந்தக் கேரக்டருக்கு அவர் அப்படியே பொருந்துவதே முதல் வெற்றி. ஒவ்வொரு இளைஞனும் தனுஷ் மாதிரியே இருந்திருக்கலாம்; அல்லது இருந்து வந்திருக்கலாம். அதனாலேயே துள்ளலாகவும் அருமையான ஃபார்மிலும் அமைந்து விட்டது படம். டைரக்டர் வேல்ராஜுக்கு முழுநீள பூங்கொத்து.

ஏதோ முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது தனுஷ். ‘இத்தனை தோல்விகளுக்குப் பிறகு இதுதான் ஒரே படம்’ என முடிவு பண்ணி அடித்திருக்கிறார். இந்த சின்ன உடம்பில் இவ்வளவு நடிப்பா! வீட்டு வேலைகளில் தன்னை எளிமையாக ஈடுபடுத்திக்கொள்கிற விதம், பக்கத்து வீட்டு அமலாபாலிடம் கொஞ்சம் கொஞ்சமாக மனதைத் தரும் நேர்த்தி, அப்பாவின் கோபத்தைத் தாங்க முடியாமல் மருகும் சோகம், அம்மா சரண்யாவின் அரவணைப்பில் ஆதங்கங்களை கொட்டித் தீர்க்கிற இயல்பு...

பிரித்துப் பின்னுகிறார் தனுஷ். வில்லனிடம் முழு நீளத்துக்கு பேசும் கெத்து வசனம், ‘‘கறியில கை வை, அப்புறம் பார்த்துக்கிறேன்’’ என தம்பியிடம் எகிறுவது... சும்மா இல்லங்கண்ணா, தனுஷ் அப்படியே டிஸ்டிங்ஷன் தட்டுகிறார். வாங்கிய தேசிய விருது சும்மா இல்லை என சொல்லிச் சொல்லி காட்டுகிறார்.

அமலா... என்னம்மா, வீட்டுக்குப் போகும்போதும்தான் நடிப்பை வெளிக் காட்டுவீங்களா! முதலில் எகிறி கிண்டலடித்து, கொஞ்சம் கொஞ்சமாய் தனுஷிடம் அவர் உருகுவது கிறக்கம். ‘‘எங்காவது என்னைக் கூட்டிக்கிட்டுப் போயேன்’’ என அந்த சின்ன வண்டியில் ஏறி தனுஷைப் பிடித்துக் கொள்வதும், ‘எனக்கு கார்த்திக்கை விட ரகுவரன் பிடிக்கும்’ என மறைமுகமாக காதல் சொல்லும் இடமும் அள்ளுகிறது.

அம்மான்னா அம்மாதான் சரண்யா. நிச்சயம் சென்டிமென்ட்தான். ஆனால், அளவெடுத்தது மாதிரி படு இயல்பில், கொஞ்சமும் மிகை இல்லாமல்! அதே மாதிரி சமுத்திரக்கனி... வேண்டிய இடத்தில் வெடித்து, கோபத்தில் சிதறி, பிறகு கனிவில் பெருகும் இடங்களில் சிம்ப்ளி சூப்பர்ப்! தனுஷ், சரண்யாவோடு அடிக்கும் சிக்ஸர் கமென்ட்டுகளுக்குத்தான் தியேட்டரில் விசில்.
‘கொலவெறி’ தந்த அனிருத்-தனுஷ் சேர்க்கை, படு இளமை. ‘பொயட்டு’ என தனுஷ் தன்னையே கேலி செய்துகொண்டாலும் அவரது வரிகளில் யதார்த்தம். வீட்டுப் பையனாக இருந்து ஹீரோவாக உருவெடுக்கும் பிற்பகுதியில் தனுஷோடு சேர்ந்து செமத்தியாக ஸ்கோர் செய்கிறது இசை. ஆட்டம் பாட்டமான அமர்க்கள விருந்து.

மனதை அள்ளுகிறது வேல்ராஜின் கேமரா. வெளியில், இரவுக் காட்சிகளில் கவிதையாக மின்னும் கேமரா, வீட்டிற்குள் அடக்கி வாசிக்கிறது. சண்டைக் காட்சிகளில் வேகம் இருந்தாலும், நீளம். குட்டி குட்டியான வசனங்களில் பெரும் தூரம் காட்டுகிறார் வேல்ராஜ். ஒரு சில படங்கள்தான் கமர்ஷியலில் முழு முகம் காட்டும். அதில் இந்த ‘வி.ஐ.பி’க்கு ஒரு வி.ஐ.பி சீட் நிச்சயம்!

- குங்குமம் விமர்சனக் குழு