லட்சுமி ராமகிருஷ்ணன் நெக்ஸ்ட்



ஆக்ஷன் ரொமான்ஸ் அனுபவம் எனக்குப் புதுசு..!

அம்மா கேரக்டர் என்றாலும் சும்மா கேரக்டராக இருக்கக் கூடாது எனப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து நடிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனராகவும் இப்போ பிஸி. ‘ஆரோகணம்’ படத்தைத் தொடர்ந்து, அவர் இயக்கி வரும் படம் ‘நெருங்கி வா முத்தமிடாதே’. அதன் இறுதிக்கட்டப் பணியில் இருந்த அழகான அம்மாவுடன் பேசினோம்...

 ‘‘ ‘ஆரோகணத்தை’ முடிச்சிட்டு அடுத்து ஒரு கமர்ஷியல் படம் பண்ணணும்னு நினைச்சேன். இந்த முறை கருத்து சொல்ற மாதிரியெல்லாம் இல்லாமல், தியேட்டருக்கு வர்றவங்க ஜாலியா என்ஜாய் பண்ற படமா இருக்கணும் என்பதில் உறுதியா இருந்தேன். அப்போ க்ளிக்கான கதைதான் ‘நெருங்கி வா முத்தமிடாதே’. கற்பனைக் கதை என்றாலும் என் வாழ்க்கையில் கடந்து போன சில கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்திருக்கேன்.’’

‘‘தலைப்பே கவர்ச்சியா இருக்கே..?’’

‘‘இப்படி எல்லோரையும் பேச வைக்கணும் என்பதற்காக இந்த டைட்டில் வைக்கலை. கதைக்கு அது அவ்வளவு பொருத்தம். லாரி போன்ற வாகனங்களின் பின்னால் நாம் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய வாசகம்தான் இது.

யெஸ்... இது நெடுஞ்சாலையில் நடக்கும் கதை. பெட்ரோல் தட்டுப்பாடு நேரத்தில் திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு ஒரு லாரி கிளம்புது. அது எங்கே, எதுக்காக போகுது? அதில் யாரெல்லாம் பயணம் பண்றாங்க? அந்த லாரி கடைசியில் போய்ச் சேருதா, இல்லையா? மூன்றரை மணி நேரத்தில் போய்ச் சேர வேண்டிய லாரி, இலக்கை அடைவதற்கு அரை நாளைத் தாண்டுகிறது. எதனால் இந்த தாமதம் என்பதற்கு விறுவிறு திரைக்கதையில் பதில் கிடைக்கும்.’’

‘‘ஹீரோ புதுசா இருக்காரே?’’

‘‘பேர் சபீர். புதுசுதான். ஆனா, பத்துப் படம் பண்ணின பக்குவத்தோட நடிச்சிருக்கார். யோகா இன்ஸ்ட்ரக்டரான அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கேன். தமிழுக்கு இன்னொரு திறமையான நடிகன் கிடைச்சிருக்கார்னு கூட சொல்லலாம்.

ரெண்டு ஹீரோயின்கள். தஞ்சாவூர் பக்கத்துல சின்ன டவுனில் இருக்கும் மாடர்ன் பொண்ணா பியாவும், கிராமத்துப் பொண்ணா ஸ்ருதி ஹரிஹரனும் பண்ணியிருக்காங்க. ஸ்ருதி, கன்னடத்தில் ஹிட் அடித்த ‘லூசியா’வில் கலக்கியவர். ‘ஆரோகணம்’ விஜி மேடைப் பாடகியாக வர்றாங்க. அவங்களோட நடிப்பு நிச்சயமா பேசப்படும்.

 லாரியில் டிராவல் பண்ணும் கேரக்டரில் ஒருத்தரா தம்பி ராமையா நடிச்சிருக்கார். அவர் லாரியிலிருந்து இறங்கி விடைபெறும் நேரத்தில், ‘அச்சச்சோ, இவர் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நல்லாயிருக்குமே’ன்னு படம் பார்க்கும் அத்தனை பேரும் ஃபீல் பண்ணுவாங்க. அந்தளவு அழுத்தமான கேரக்டர்.’’

‘‘பெண் இயக்குனரா காதல், ஆக்ஷன் ஏரியாக்களில் எப்படி சமாளிக்கிறீங்க?’’

‘‘ரொமான்ஸ் காட்சிகள் பண்ண முடியுமான்னு ஆரம்பத்தில் எனக்கு நானே கேள்வி கேட்டுக்கிட்டேன். படத்தை எடுத்து முடிச்சு பார்த்தப்போ, ‘அட, பிரமாதமா எடுத்திருக்கோம்’ என்கிற நம்பிக்கை வந்துடுச்சு. ‘பார்த்ததுமே பத்திக்கிச்சு’ என்பது மாதிரியெல்லாம் இல்லாமல், இதில் காதல் கொஞ்சம் புதுவிதமா இருக்கும்.

ஆக்ஷன் காட்சிகளிலும் இதே கதைதான். ஒரு ஆக்ஷன் டைரக்டரா என்னை நினைச்சுப் பார்க்க எனக்கே காமெடியா இருந்தது. காரைக்காலில் கடலுக்குள் ரொம்ப தூரம் போய் சில ஆக்ஷன் காட்சிகளை எடுத்திருக்கோம். ரொம்ப திருப்தியா வந்திருக்கு. கொத்து பரோட்டா போடும் அளவுக்கு கொதிக்கும் வெயில்.

ஓடும் லாரி, அதுக்குள்ளே சில கேரக்டர்கள், கேமராமேன், நான்... இப்படி சின்ன இடத்தில் ஷூட் பண்ணியது பெரிய சவாலாவும் புது அனுபவமாவும் இருந்தது. பொதுவா நெடுஞ்சாலை சார்ந்த கதைன்னா ஒரு தாபா, குத்துப் பாட்டுன்னு வழக்கமான விஷயங்கள் இதில் எட்டிப் பார்க்காமல், களம் புதுசா இருக்கும்.’’

‘‘நடிப்பு, இயக்கம்... இரட்டை சவாரி அனுபவம் எப்படி இருக்கு?’’

‘‘சினிமா பார்ப்பதைக் கூட விரும்பாத குடும்பப் பின்னணியிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கேன். எனக்குக் கதை கேட்பது பிடிக்கும். விதவிதமான கேரக்டர்கள், விதவிதமான மனிதர்கள் பற்றி நிறைய தெரிஞ்சுக்குவேன். புதுசா ஒருத்தர் என்கிட்ட பேசினாலும் அவருடைய கேரக்டரை ஸ்கேன் பண்ணிடுவேன். இதெல்லாம் சேர்ந்துதான் என்னை சினிமாவுக்குள் தள்ளியிருக்கலாம். மற்றபடி இயக்கத்தில் குருநாதர்னு யாரும் இல்லை. வாழ்க்கைதான் எனக்கு குரு.

திருமணமாகி அமெரிக்காவுக்குப் போன என் மூத்த மகள் சமீபத்தில் சென்னை வந்தா. எடுத்தவரைக்கும் இந்தப் படத்தைப் பார்த்த மகளும் மருமகனும் ‘உங்களால இப்படியெல்லாம் பண்ண முடியுமா’ன்னு சந்தோஷம் கலந்த ஆச்சர்யத்தோட கேட்டாங்க. அதே சந்தோஷம் ஆடியன்ஸுக்கும் கிடைக்கும்னு நம்புறேன்!’’

- அமலன்