கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்



சினிமாவுக்குள்ளேயே சினிமாவுக்கு கதை தேடிப் பிடிக்கிற கதைதான் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்.’ சினிமாவில் பல விஷயங்களை கேலி செய்து, நிஜம் சொல்லி, புரிய வைத்து, கலாய்த்து, அதிகமாகவே சினிமா முகம் காட்டியிருக்கிறார் ஆர்.பார்த்திபன். புதியவர்கள், பழையவர்கள் என எல்லோரின் கெத்தையும் நொறுக்கியதில் வாத்தியார் மாதிரி கண்டிப்பு காட்டியதற்காகவே பார்த்திபனுக்கு வெரிகுட்!

மாறிப்போன சினிமாவில் புதுக்கதை பிடிக்க தன் வீட்டில் டிஸ்கஷன் நடத்துகிற ஜோரில் களை கட்டுகிறது உதவி இயக்குநர் சந்தோஷின் வீடும், தியேட்டரும். அதே கலகலப்பு, சந்தோஷின் புது மனைவிக்கு எரிச்சல் தர, வீட்டை விட்டு வெளியேறுகிறார். எல்லோரும் எதிர்பார்க்கிற புது டைப் கதை கிடைத்ததா, சந்தோஷ் டைரக்டராக வெளி வந்தாரா, என்பதே கதையே இல்லாத கதையின் மீதிக்கதை!

‘புதிய பாதை’யிலிருந்து அப்படியே வேறு முகம் காட்டுகிறார் பார்த்திபன். ஆரம்ப காலம் தொட்டு, குறும்பட டைரக்டர் வரைக்கும் சம்பவங்களாலும், கலாய்க்கிற வார்த்தைகளிலும், தெறிக்கிற உண்மைகளிலும் பின்னுகின்றன வசனங்கள். சோஷியல் மீடியாவிலிருந்து டீக்கடை, அலுவலக கேன்டீன் வரைக்கும் தெரிந்து வைத்து அடிக்கிறார். கதையே இல்லையென்று முன்னாலேயே கட்டியம் கூறிவிட்டதால், சம்பவங்களின் தொகுப்பில் கொண்டு போய் விட்டு விடுகிறார்.

தேவரில் ஆரம்பித்து, பி.வாசு வரை பேசி மொத்த தமிழ் சினிமா வரலாற்றின் பல பக்கங்களை பின்னிப் பெடலடுக்கிறார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல், சிரித்துச் சிரித்துப் பேசி, சினிமா உண்மைகளைச் சொல்வதில் முதல் வரிசையில் நிற்கிறார் பார்த்திபன். ‘இவங்க எல்லாம் இப்படி பேசிட்டா நாங்க என்ன காமெடி பண்றது’ என சொல்லிவிட்டு மன்மோகன், விஜயகாந்த், பவர் ஸ்டார் என கிளிப்பிங் காட்சிகளை அடுக்குவது, செம ரவுசு!

இடம், பொருள், ஏவல் பார்க்காமல் சூடு பறக்கும் டிஸ்கஷன் இடையில் தூங்கி விழும் தம்பி ராமையா, நடிப்பில் எழுந்து நிற்கிறார். அவரின் ஹாஸ்பிடல் பரிதாபக் கதை டச்சிங். கூப்பாடு போடும் அவரின் சொந்த வாழ்க்கை பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. சென்னையில் நம்பிக்கை முகங்களோடு அலையும் உதவி இயக்குநர்களின் அடுத்த கட்ட வாழ்க்கை பற்றி கேள்வி எழுப்புகிறது. உங்க நடிப்பு மாஸ் பாஸ்! மொத்த ஸ்க்ரீன் ப்ளேயின் பவர் ப்ளே நீங்கதான்! சந்தோஷ்... பெரிதாக

இல்லை யென்றாலும் சலிக்கவில்லை. கதை ஒருவரிடமே தேங்கி நிற்காமல், உடனே அடுத்தடுத்து மற்றவர்கள் பார்வைக்கு வந்துவிடுகிறார்கள். புதுமுக ஹீரோயின் அகிலா கிஷோர்... ஆஹா கிஷோர். நடிப்பிலும் உயரம் போலவே உச்சம். ரொமான்ஸில் சூடு பரத்துவதைப் பார்த்தால், இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி பறக்க விடுவார் போலிருக்கிறது. விஜய்ராம், போலி தயாரிப்பாளர் முருகன் என மற்ற கேரக்டர்களும் களை கட்டுகிறார்கள்.

வசனத்தில் பிரித்து மேய்கிறார் பார்த்திபன். ராஜரத்னத்தின் ஒளிப்பதிவு கச்சிதம். ஆனால், பின்பகுதியில் இன்டியூஷன் காதலில் போதிய துறுதுறுப்பு இல்லை. இரட்டை சகோதரிகள் கதையில் பல குழப்பம் மிஞ்சுகிறது.கதையே இல்லாமல் ‘கதை’ பண்ணியிருந்தாலும் ரசிக்க வைப்பது பார்த்திபனின் (அக்)குறும்பு!

குங்குமம் விமர்சனக் குழு