ஜ.எஸ்.ஓ 9001 என்றால் என்ன?



‘ஐ.எஸ்.ஓ 9001 தரச் சான்று பெற்ற நிறுவனம்...’ - அடிக்கடி விளம்பரங்களில் பார்த்துப் பார்த்து இது நம் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. ஐ.எஸ்.ஓ என்றால் என்ன? யார் கொடுக்கும் தரச்சான்று இது? என எந்தக் கேள்வியும் கேட்காமல், ‘அது இருந்தா, நல்ல பொருளாத்தான்யா இருக்கும்’ என முடிவெடுக்கும் பெருந்தன்மை நமக்கு மட்டும்தான் உண்டு.

உண்மையில், ‘‘ஐ.எஸ்.ஓ 9001 தரச்சான்று பொருட்களுக்குத் தரப்படுவதில்லை. இந்தச் சான்று வைத்திருக்கும் நிறுவனம், போலி பொருட்களைக் கூட விற்கலாம். அதற்கு ஐ.எஸ்.ஓ பொறுப்பில்லை’’ என்று சொல்லி அதிர வைக்கிறார்கள் நிபுணர்கள்.

‘‘இன்டர்நேஷனல் ஆர்கனைசேஷன் ஃபார் ஸ்டேண்டர்டைசேஷன் என்ற அமைப்பின் பெயர் சுருக்கம்தான் ஐ.எஸ்.ஓ. ஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்ட இந்த அமைப்பில் இந்தியா உட்பட 163 உலக நாடுகள் அங்கம் வகிக்கின்றன’’ எனத் துவங்குகிறார் ‘கான்சர்ட்’ என்ற தன்னார்வ அமைப்பின் இயக்குநரான சந்தானராஜ். நுகர்வோர் கல்வி மற்றும் ஆய்வுத் தளங்களில் இயங்கும் அமைப்பு இது.

‘‘இந்த ஐ.எஸ்.ஓ சான்று, பெரும்பாலும் வெளிநாட்டு ஏற்றுமதி - இறக்குமதிக்காக உருவாக்கப்பட்டதுதான். உள்ளூர் நகைக்கடைகள் சும்மா பெருமைக்காக இந்த சான்றை வாங்கி வைக்கலாம். விளம்பரங்களிலும் போட்டுக்கொள்ளலாம்.

ஆனால், இதன் பயன்பாடே வேறு. உதாரணத்துக்கு, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட பொருளை நீங்கள் இறக்குமதி செய்ய நினைக்கிறீர்கள். அந்த நிறுவனத்தின் பொருட்கள் தரமானதா என்பதை நீங்கள் சாம்பிள் வாங்கிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால், எத்தனை காலத்துக்கு அந்த நிறுவனம் இயங்கும்? அது வலிமையான பின்புலத்தோடு இயங்குகிறதா? அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்குஉட்பட்டு இயங்குகிறதா? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டால்தான் துணிந்து ஒரு அக்ரிமென்ட் போட்டு அவர்களோடு வியாபாரம் செய்ய முடியும். இல்லாவிட்டால் அக்ரிமென்ட் போட்ட மறுநாளே அவர்கள் மஞ்சள் நோட்டீஸ் நீட்ட வாய்ப்பிருக்கிறது.

ஆக, பெரும்பாலும் ஒரு நிறுவனத்தின் தரத்தை உறுதிப்படுத்துவதுதான் ஐ.எஸ்.ஓ தரச்சான்றே தவிர, அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பொருளுக்கும் அந்தச் சான்று பொருந்தாது. மேலும், தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர் பயன்படுத்தப்பட்டிருந்தாலோ, சுற்றுப்புறச் சூழலை அதிகம் பாதித்தாலோ, தொழிலாளர் உரிமைகள் மீறப்பட்டாலோ அந்த நிறுவனத்தோடு சகவாசம் வைத்துக்கொள்வதில்லை என்று உலக நாடுகளில் பல எச்சரிக்கின்றன. அதனால்தான் எக்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கு இந்த ஐ.எஸ்.ஓ அவசியமாகிறது.

ஐ.எஸ்.ஓவைப் பொறுத்தவரை நம்மில் பலருக்கும் 9001 சான்று மட்டுமே தெரியும். ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளும் நிர்வாகமும் சீராக இருப்பதற்கு வழங்கப்படும் சான்றுதான் 9001.

இதே போல அந்த நிறுவனம் சுற்றுப்புறச்சூழலை பாதிக்கவில்லை என்பதற்கு ஐ.எஸ்.ஓ 14000 என்ற எண்ணும், உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் தரமான சூழ்நிலைக்கு ஐ.எஸ்.ஓ 22000 என்ற எண்ணும், குறைவான மின்சக்தியைப் பயன்படுத்துகிற நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ 500001 என்ற எண்ணும் தரப்படுகிறது. இப்படி ஒவ்வொரு விதமான தரத்துக்கும் ஒவ்வொரு எண்.

ஆனால், மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் ஐ.எஸ்.ஓ 500001 தரச் சான்று ஒரு நிறுவனத்துக்குத் தரப்பட்டிருந்தால், அந்த நிறுவனம் தயாரிக்கும் டி.வி, மிக்ஸி, கிரைண்டர் எல்லாமே மின்சாரத்தை மிச்சப்படுத்தும் என்று அர்த்தமில்லை. அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை குறைவான மின்சக்தியில் இயங்குகிறது... அவ்வளவுதான். பொருட்களை நாம்தான் பரிசோதித்து வாங்க வேண்டும்’’ என்கிறார் அவர் தெளிவாக.

சுருக்கம் தப்பா?

இன்டர்நேஷனல் ஆர்கனைசேஷன் ஃபார் ஸ்டேண்டர்டைசேஷன் என்றால் அதன் சுருக்கம் ஐ.ஓ.எஸ் என்றுதானே இருக்க வேண்டும்? என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கலாம். ஐ.எஸ்.ஓ என்றால், ‘இசொஸ்’ என்ற கிரேக்கச் சொல்லையும் குறிப்பிடுகிறது. அதற்கு ‘சமம்’ என்று அர்த்தமாம். எல்லா நிறுவனத்தையும் சமமாகப் பார்த்து தரம் நிர்ணயிப்பதால் சுருக்க எழுத்துக்கள் இடம் மாறியே நிலைத்துவிட்டன.

பிறந்த கதை!


உலக வர்த்தக தரக் கட்டுப்பாட்டுக்காக 1926ல் துவக்கப்பட்டது ஐ.எஸ்.ஏ   (International Federation of the National Standardizing Associations)  எனும் அமைப்பு. இது இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942ல் கலைக்கப்பட்டது. போரில் அடிவாங்கினாலும் அதன் பிறகான உலக வர்த்தகத்தில் ஜப்பானின் கையே ஓங்கியிருந்தது.

மிகக் குறைந்த விலையில் அதிகத் தரம் கொண்ட இயந்திரங்களை, மின்னணு சாதனங்களை ஜப்பான் உற்பத்தி செய்தது. அதனோடு போட்டி போட முடியாத நாடுகள் ஒன்றிணைந்துதான் ஐ.எஸ்.ஓ அமைப்பை உருவாக்கின என்கிறார்கள். இதன் மூலம் ஜப்பான் பொருட்களின் மார்க்கெட்டை கொஞ்ச காலத்துக்கு மட்டுப்படுத்தி வைத்த பெருமை ஐ.எஸ்.ஓ.வுக்கு உண்டு!

டி.ரஞ்சித்
படம்: ஏ.டி தமிழ்வாணன்