கவிதைக்காரர்கள் வீதி



கனவுகளின் பின்னே ஓடி...


தூக்கம் படரும் கண்களுள் சுமக்கிறேன்
எனது கனவுகளை!
மாத்திரையில்லா முதிர்ச்சி
கண்ணாடியணியாத இளமை
காதல் சறுக்காத படிப்பு

தோல்வியில் அசராத அறிவு
காலத்தைக் குறைத்திடாத இயற்கையென
எல்லாம் சேர்ந்ததொரு
மண்ணின் மீதான அக்கறையில்
விரிகிறதென் கனவுகள்...

ஆயினும்
மின்சாரமில்லா தெருவில்
எரியும் லாந்தர் விளக்கின்
சிமினி சுற்றி சூடுபட்டு விழும்
ஈசல்களைப் போலவே

ஊனமாகி விழுமென்
கனவுகளை எழுத்துகளாய்க் குலுக்கி
மை ஊற்றி இரைக்கிறேன்
மைக்செட் போட்டு விட்டு
வெறும் வாயை அசைப்பவனாக

வரிகளுள் நீளும்
எனது கைகளின் அசைவிலும்
ஏதோ வார்த்தைகள் சிக்கிக் கொள்கின்றன
சிக்கியதைக் கிறுக்கிவைத்தாலும்
படிப்பார்களெனும் நம்பிக்கையை விடவும்
படிக்கிறார்கள் என்பதால் கிறுக்காத நாட்களையும்

சேர்த்துச் சுமந்து
சிலுவை பாரத்திற்கு மேல் விழுந்த
சாட்டையடியை வாங்கிக் கொண்டு
நடப்பவனைப் போலவே நடக்கிறேன்;

சாட்டைகள் இன்றுவரை சலிக்கவில்லை
கனவுகளும் கவிதையில்கூட முடிவதில்லை..
மூடும் கண்களை எதிர் நோக்கி
எங்கோ

இருட்டிலும் வெளிச்சத்திலுமாய்
திரிந்து கொண்டேயிருக்கின்றன அவை
பட்டாம்பூச்சி பிடிக்க ஓடும்
ஒரு சிறுவனைப் போல
கனவுகளின் பின்னே

ஓடிக்கொண்டே இருக்கிறேன்
காலில் குத்தும் முட்களைப் போல
மனதைக் கிழிக்கும் சொற்களின் வழியே
ரத்தம் கசிந்துகொண்டே இருக்கிறது...

வித்யாசாகர்