விசாரணை



‘‘மாஸ்டர் ஒரு டீ!’’ - ஒயர் கூடையோடு வந்த கணேசன், ஆசுவாசமாய் அமர்ந்தார். காலை டிபன், மதியம் சாப்பாடு என பாதி ஹோட்டலாக இயங்கும் கடை அது. ‘‘அப்புறம்... மத்தியானம் என்ன முள்ளங்கி சாம்பாரா? இல்ல முருங்கைக்காயா?’’, ‘‘கூட்டுக்கு என்ன காய்?’’,

 ‘‘பொரியல் என்ன?’’ - எல்லாம் விசாரித்தபடி டீயைக் குடித்து முடித்தார். ‘இந்த ஆள் நம்ம கடையில ஒரு நாள் கூட டிபனோ, சாப்பாடோ சாப்பிட்டதில்லை. ஆனா, தினம் தினம் சமையலைப் பத்தி எதுக்காக விசாரிக்கிறார்?’ - குழம்பினார் கடை முதலாளி. டீக்கு காசு கொடுக்க வந்தபோது, அதை கணேசனிடமே கேட்டுவிட்டார்.

‘‘அட, அது வேற ஒண்ணுமில்லண்ணே... எந்தெந்த சீசன்ல, எந்தெந்த காய்கறி சீப்பா இருக்கும்னு ஓட்டல் காரங்களுக்குத்தான் நல்லா தெரியும். விலை குறைவான காயைத்தான் வாங்கி சமைப்பாங்க... அதான் உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, மார்க்கெட் போறேன். இதனால, அன்னன்னைக்கு ரொம்ப அலையாம விலை மலிவான காய்கறிகளை டக்குன்னு வாங்கிட்டு வந்துருவேன்!’’ என்று கணேசன் சொல்லச் சொல்ல... ‘‘இப்படியெல்லாமா மனுஷங்க யோசிப்பாங்க!’’ எனத் தலையைச் சுற்றியது முதலாளிக்கு.

நீ.ரேவதி