பாலசந்தரின் குட்மார்னிங் டெக்னிக்!



பாறையில் சரிதா பூவாய் மலர்ந்திருக்க, காதல் பார்வையில் ராஜேஷ் வண்டாய் மொய்க்கும் படத்தை ராஜேஷிடமே காட்டினோம். அது பற்றிய நினைவுகளை ஆவலோடு பகிர்ந்தார்.
‘‘ ‘அச்சமில்லை அச்சமில்லை’ படப்பிடிப்பில் எடுத்த படம் இது. உயரத்தில் இருக்கும் இந்த லொகேஷனை வந்தடைவதற்குள் உடம்பில் வலி ஊர்வலம் வரும். என்னை விட பதினெட்டு வயது மூத்தவரான பாலசந்தர் சார், நாங்கள் போவதற்கு முன்பே கேமராவோடு அந்த இடத்தில் காத்திருப்பார்.

ஷூட்டிங் தொடங்கிய முதல் மூன்று நாட்கள் ‘ராஜேஷ் நடந்து வாங்க.. அருவியைப் பாருங்க.. சரிதாவை பாருங்க... சிரிங்க...’ என்று வேலை வாங்க, எனக்கு என்ன நடக்கிறதென்றே புரியலை. கதையின் மூடுக்குள் கொண்டு வருவதற்காகத்தான் அப்படிச் செய்தார் எனப் பிறகு புரிந்தது. பொதுவாக படத்தின் காட்சிகளை முன்னே பின்னே எடுப்பார்கள். ஆனால், பாலசந்தர் சார் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை தொடர்ச்சியா எடுத்த படம் இது.

பாலசந்தருக்குப் பிடிச்ச லொகேஷன், அருவி. பெரும்பாலான படங்களில் அருவி ஷாட் வச்சிருப்பார். இந்தப் படம் முழுக்க குற்றாலத்தைச் சுற்றியே எடுத்தார். ‘ஓடுகிற தண்ணியில...’ பாடலை ஷூட் பண்ணின சமயத்தில் வெள்ளம் வந்து உடைகள் எல்லாம் அடித்துக் கொண்டு போய்விட்டது. யூனிட்டே ஹோட்டலில் இருக்க, ஒரு சிலருடன் இயக்குனர் மட்டும் கேமராவை எடுத்துக்கொண்டு வெள்ளத்தை ஷூட் பண்ணப் போய் விட்டார். ‘இதை எடுத்து என்ன செய்யப் போகிறார்?’ என்று நினைத்தால், குழந்தை வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போவது மாதிரி சீன் வச்சிட்டார். அவருடைய டெக்னிக்கைப் பார்த்து வியந்துட்டேன்.

காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால், ‘குட் மார்னிங்...’ என்று நெற்றியில் வைத்த கையை எடுக்காமலேயே எல்லோரும் இருக்கும் திசையைப் பார்த்துத் திரும்புவார். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வணக்கம் வைத்து நேரத்தை வீணடிக்க மாட்டார். ஒரு நாளில் மூன்று முறை உடை மாற்றி விடுவார். உள்ளம், உடை என எல்லாவற்றிலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பார். பலமுறை ஒத்திகை பார்த்து திருப்தி ஏற்பட்டால் மட்டுமே டேக் போவார். நாகரிகமான மனிதர்.

 ‘ராஜேஷ்... ஒரு பதினஞ்சு நிமிஷம்... சரிதா சம்பந்தப்பட்ட சீன் முடிச்சதும் உங்களைக் கூப்பிடுறேன்’ என்று சொல்லிட்டுப் போவார். என்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் யாரையும் காக்க வைக்கமாட்டார். படம் எடுப்பதில் தொடங்கி பண்பு காட்டுவது வரை, இன்றைய இயக்குனர்களுக்கு கே.பி ஒரு பல்கலைக்கழகம்.’’

நேற்றைய பொழுதில்...

அமலன்
படம் உதவி: ஞானம்