‘உத்தம வில்லன்’ கமலின் வாழ்க்கைக் கதையா?



காலத்தை வென்று நிற்கும் கலைஞன் கமலின் ‘உத்தம வில்லன்’ முடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டைரக்டர் ரமேஷ் அரவிந்த். எதிர்பார்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் படம் வந்திருப்பதில் முகத்தில் நிறைவும், நிம்மதியும் ததும்பி வழிகின்றன. அதிர அதிரச் சிரிப்பு, சிந்திக்கும் நெற்றிச் சுருக்கங்கள் எனப் பல நிலைகளில் சென்று மீண்டது அந்த உரையாடல்! ‘‘எல்லோரும் பெருசா நினைச்சிருக்கிற படம், ‘உத்தம வில்லன்’. அதை முன்னெடுத்துச் சென்ற அனுபவம்...’’

‘‘படம் முடிஞ்சதும் என் குரூப்ல எல்லாருக்கும், ‘வாழ்நாள் முழுக்க பெருமைப்படுற ஒரு படத்தைப் பண்ணியிருக்கோம்’னு குறுஞ்செய்தி அனுப்பினேன். அதுதான் உண்மை. கமல் சார் எவ்வளவோ படங்கள் செய்திருக்கார்.

 நானும் செய்திருக்கேன். சில படங்கள்தான் நாமே பெருமைப்பட்டுக்கிற மாதிரி இருக்கும். அப்படியொரு  ஷிவீரீஸீணீtuக்ஷீமீ   கொண்டிருக்கிற படம், ‘உத்தம வில்லன்’. முகமெல்லாம் சுருங்கி, கண் இடுங்கி தாத்தாவா இருக்கும்போதுகூட, என் பேரன்கிட்ட ‘எங்க படம் பாரு’ன்னு சொல்லக் கூடிய படமாவும் இருக்கும்.

மத்தபடி ஆடியன்ஸ்தான் சொல்லணும். ஒரே ஃப்ரேமில் கமல், பாலசந்தர், விஸ்வநாத், ஜெயராம், ஊர்வசின்னு வந்து நிற்கும்போது, அவங்கவங்க செய்த நூற்றுக்கணக்கான படங்களின் அனுபவமெல்லாம் சேருதே... ஆயிரம், இரண்டாயிரம் படங்களின் அனுபவம்னு அதைச் சொல்லலாம்.

அதில் ஏகலைவன் மாதிரி நான் கத்துக்கிட்ட இடங்கள்தான் நிறைய. எல்லாரும் சினிமாவை கரைச்சுச் குடிச்சவங்க. ஒரு சின்ன கோடு போட்டால் அதை பெருசாக்கி செய்யத் தெரியும். ஆனாலும், ‘ஓவர் ஆல்’ கான்செப்ட் இருக்கே... அதைத் தாண்டவே கூடாது. கே.விஸ்வநாத் சாரை புக் பண்ணப் போகும்போது, ‘உங்களுக்கு எல்லாமே தெரியும். சப்ஜெக்ட், டயலாக் பத்தி ஏதாவது தோணினா ஒப்பீனியன் நீங்க சொல்லலாம். மேட்ச்சா இருந்தால் எடுத்துக்கறோம்.

இல்லாட்டி தப்பா நினைக்கக் கூடாது’ன்னு சொன்னேன். அவர் அடக்கமா இருந்தார். ‘நான் பெரிய ஹார்ட் சர்ஜனாக இருந்து நிறைய ஆபரேஷன் பண்ணியிருக்கலாம். இப்ப நான் பேஷன்ட். டாக்டர் நீதான்.

 எங்கே வேண்டுமானாலும் போடு கத்தியை’ன்னு சொன்னார். அவரை மண்டியிட்டு நமஸ்காரம் பண்ணணும்னு தோணுச்சு. கமல் சாரும் அவ்விதமே. ஏனோதானோ, நான்தான் புரடியூசர், நடிகன்னு எதுவும் இருக்காது. அவரோட ஸ்கிரிப்ட் அவ்வளவு டீட்டெயிலா இருக்கும். அதை விஷுவலா மாற்றினாலே பெரிய விஷயம்!’’‘‘கமலுக்கு இரண்டு வேடமில்லையா?’’

‘‘எஸ்... 20ம் நூற்றாண்டு சூப்பர் ஸ்டார். 8ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன். அந்தக் கூத்துக் கலைஞன் அருமையிலும் அருமை. ‘என்னடா... ‘உத்தமவில்லனி’ல் இருக்கு?’ன்னு யாராவது கேட்டால், ‘என்ன இல்லை’ன்னு திருப்பிக் கேட்பேன். நல்ல காமெடி இருக்கா... இருக்கு. நல்ல கெட்-அப்பில் வர்றாரா... ஆமாம்.

 நடிப்பு, எக்ஸலென்ட். டான்ஸ், பிரமாதமா இருக்கு. ஒரு நல்ல கமல் படத்தில் என்ன என்ன எதிர்பார்க்கிறார்களோ எல்லாத்தையும் தாண்டி, ஒரு அழகான உண்மை இருக்கு. அதில்தான் நான் கிறங்கிப் போனேன். அந்தத் தவிர்க்க முடியாத உண்மையை உலகமே ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்!’’‘‘கெட்-அப்பில் நிறைய சிரமங்கள்னு கேள்விப்பட்டோம்?’’

‘‘காலையில் வந்து உட்கார்வார். பத்து ஹெல்மெட்டை தலைமேல் போட்ட மாதிரி, ஒரு கிரீடத்தைத் தூக்கி வைப்போம். ஒரு சிணுங்கல் இருக்கணுமே... முகம் மாறணுமே! அதை வச்சுக்கிட்டு டான்ஸும் ஆடணும். ஒரு சமயம் கால் தசைநாரெல்லாம் கிழிஞ்சது. ஒரு பக்கம் பிஸிகல் கஷ்டம்.

இன்னொரு பக்கம் புரொடியூசர், நடிகன்னு பொறுப்புகள் இருக்கும். டான்ஸ் ரிகர்ஸலுக்கு பளபளன்னு விடியும்போது வந்து நிற்பார். கமல் சாரே ரிகர்ஸலுக்கு வரும்போது, எல்லாரும் வந்திடுவாங்க. டாப்மேன் பெர்பெக்ட், டிசிப்ளினோடு இருந்தால், எல்லாமே ரொம்ப ஈஸி. அருமையா வந்த தலைப்பு இந்த ‘உத்தம வில்லன்’. கே.பி., விஸ்வநாத், நாசர்னு ஒரு பக்கம் அனுபவத்தில் நிறைஞ்சு இருந்தாலும், உற்சாகத்தை விடாதவர்கள். வெறும் அனுபவம் இருந்து உற்சாகம் இல்லைன்னா அது சும்மா.’’

‘‘கமல் படத்துல ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி மேனன், பார்வதி நாயர்னு இவ்வளவு பொண்ணுங்களா? என்ன விசேஷம்..?’’‘‘அது உங்க லைஃப்பில் கூட இருக்கும். அக்கா, அம்மா, ஃபிரெண்ட், ஆபீஸில் ஒருத்தர்னு சுற்றி பெண்கள் இருப்பாங்க. அவங்க கூட பேசாம கூட இருக்கலாம்.

அது வேற. ஆனா, சரியா இருந்தால் மிகச் சிலரோட ‘ஃபைன் டியூன் ரிலேஷன்ஷிப்’ இருக்கும். இந்தப் படத்தில் வரும் எல்லாப் பெண்களும் காதலுக்குள்ள வரமாட்டாங்க. கமலுக்கு என்னென்ன வேடம்னு மட்டுமில்ல... அஞ்சு மேடத்தில் சாருக்கு எந்த மேடம்னு கூட பெரிய திரையில் வந்துதான் பார்க்கணும்!’’‘‘வேறுவேறு காலகட்டங்கள்... ஜிப்ரானின் இசை எப்படியிருந்தது?’’

‘‘திறமை, குணாதிசயம் சரியாக இருந்தால் அவங்களைக் கொண்டு போய் எந்த உயரத்திலும் வைப்பார் கமல். அவரை, ‘விஸ்வரூபம் 2’வில் பார்த்திருக்கேன். ரொம்ப அனுபவசாலிகளுக்கு உரிய பொறுப்பில் இருந்து செய்தார். எட்டாம் நூற்றாண்டு மியூசிக்கெல்லாம் உன்னதமா இருக்கும். நான் பெங்களூரு போயிருப்பேன். கமல் சென்னையில் இருப்பார். ‘வாட்ஸ் அப்’பில் ஒரு பெரிய மியூசிக் பிட்டை அனுப்பி வைப்பார். அசத்திடும் அந்த இசை. சமீப காலத்தில் தமிழ் சினிமா பார்க்காத மியூசிக்.

எல்லா பாடல்களையும் கமலே எழுதியிருக்கிறார். சினிமா என்பது பாலன்ஸ் ஷீட் மாதிரி. ஒரு என்ட்ரி மேட்ச் ஆகலைன்னாகூட டேலி ஆகாம போயிடும். இதில் எல்லாமே கச்சிதம். மனித உணர்வுகள் குறித்து கமலுக்கு இருக்கிற பார்வை அபூர்வமானது. எந்தச் சம்பவத்தையும் எல்லாக் கோணங்களிலும் பார்க்கக் கூடியவர். இந்த வாழ்க்கையை உற்றுப் பார்த்ததின் வெளிச்சம்தான் ‘உத்தம வில்லன்’!’’‘‘ரொம்ப நாளாக கமலைத் தொடர்கிறீர்கள்?’’

‘‘நீங்க படிக்கிற புத்தகம், சந்திக்கிற மனிதர்கள், பார்க்கிற விஷயம் எல்லாம் சேர்ந்துதான் உங்க யோசனை ஆகுது. அந்த யோசனை உங்களை வடிவாக்குது. அளவு கடந்த தேடல் அது. அவர் பேசுகிற பல விஷயங்கள் சினிமாவில் பயன்பட வாய்ப்பே இல்லை. எங்கேயோ படிச்ச கவிதை, ஜோக், ஏதோ ஒரு தியரின்னு பரபரப்பார். நம்பவே முடியாத மெமரி. ஒரு காலத்தில் ஜெயகாந்தனோட இருந்தார். பிறகு சுஜாதாவோடு வந்து சேர்ந்தார்.

இப்ப ஜெயமோகனோடு அவரால் நட்பு பாராட்ட முடியுது. அவருக்கு நல்ல மைண்ட். அப்படித்தான் எல்லாம் தேடும். எல்லாத்தையும் கொடுத்து, வாங்கி ஷேர் பண்ணிக்கிட்டே இருப்பார். இசையில் அவரது ஆழம் அவ்வளவா வெளியே தெரியாத ரகசியம். அதில் தோண்டினால் இதுவரை பார்க்காத கமல் வெளியே வருவார்.

 டைனோசர் பாருங்க, பெரிய மிருகம்... வலிமையும், உயரமும், பயமுறுத்தி எல்லாரையும் பணிய வச்சுக்கிட்டு இருந்தது. ஆச்சரியமா அதை எல்லாரும் திரும்பிப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு ஐஸ் ஏஜ் வந்ததும், அதனால் தாக்குப் பிடிக்க முடியலை. ஆனால், கமல் சாருக்கு அந்த பிரச்னை இல்லை. நாளுக்கு நாள் தன்னை மெருகேத்தி, புதுப்பிச்சுக்கிட்டே இருக்கார். அதுதான் கமல்!’’

‘‘கமலோட வாழ்க்கைக் கதையோ...’’‘‘பெரிய ஸ்டார், அவர் குருவா கே.பாலசந்தர்... இப்படி வரும்போது நீங்க நினைக்கிற மாதிரி சாயல் இருக்கலாம். தெரியலை. அது பார்க்கிறவங்க மனசைப் பொறுத்தது. தமிழ்நாட்டில் இருக்கிறவங்களுக்கு வேற மாதிரி தெரியும். தூரம் போக போக வெறும் கதையா கூட இருக்கும். நீங்க இன்னும் வலியுறுத்திக் கேட்டால், படமே பார்த்திடுங்களேன்னு சொல்லி பேட்டியை முடிச்சிடுவேன்!’’

- நா.கதிர்வேலன்
அட்டை மற்றும் கமல் ஸ்பெஷல் படங்கள்: சந்தோஷ்ராஜ்